(Reading time: 38 - 75 minutes)

ராஜா எப்படி தனியா தொழிலை கவனிப்பானோன்னு எனக்கு கவலை.. ஆனா அவன் ஓரளவுக்கு நஷ்டம் வராம நல்லாவே தொழிலை கவனிச்சுக்கிட்டான்.. ராஜா தாத்தா ஆரம்பிச்ச தொழில் இல்லாம, செல்வா பிறந்ததுக்குப் பிறகு ரெண்டுப் பசங்களோட முதல் எழுத்தை வச்சு உன்னோட மாமனாரும் ஒரு கம்பெனி ஆரம்பிச்சாரு.. ரெண்டையும் ராஜா தான் பார்த்துக்கனும்.. என்னோட தம்பி அவனால முடிஞ்ச உதவியை ராஜாக்கு செய்வான்.. கம்பெனில ராஜா தாத்தா காலத்துலேயே வேலைப் பார்த்த பழைய வேலையாட்கள் இருந்தாங்க.. அவங்களும் ராஜாக்கு உதவியா இருந்தாங்க.. எல்லாம் நல்லா தான் போய்க்கிட்டு இருந்தது.. ஆனா நல்லது எல்லாம் தப்பா நடக்க நானே முதல் அடி போட்டேன்..

அந்த குடும்பம் பிரிஞ்சப் பின்னாடி எங்களுக்குன்னு சில சொந்தபந்தங்கள் இருந்தாங்கன்னா அது ராஜாவோட பாட்டி வழி உறவுக்காரங்க தான், அவங்க பக்கம் எல்லாம் ரொம்ப வசதியானவங்க கிடையாது.. மாச சம்பளத்துக்கு வேலைக்கு போய் வாழ்க்கையை நடத்தறவங்க தான்.. அந்த சொந்த்தத்துல ஏதாச்சும் நல்லது கெட்டது நடந்தா மட்டும் தான் நாங்க போவோம்.. அதேப் போல இங்க ஏதாச்சும்னா அவங்க வருவாங்க.. மத்தப்படி அவங்கக் கூட ரொம்ப நெருக்கமான உறவு இல்லை..

அப்படி ஒரு சொந்தத்துல ஒரு கல்யாணத்துக்கு போனப்ப தான், அங்க சாருவை பார்த்தேன்.. ரொம்ப துறுதுறுன்னு, அழகா, பார்க்க லட்சணமா இருந்தா.. சாருவோட அம்மா ஒருவிதத்துல ராஜாக்கும் செல்வாக்கும் அத்தை முறை வேண்டும்.. என்னை பார்த்ததும் அத்தை அத்தைன்னு என்கிட்ட நல்லாப் பேசினா.. அவளைப்பத்தி இன்னும் தெரிஞ்சிக்க எனக்கு ஆசையா இருந்தது..

அவ காலேஜ் முடிச்சு கொஞ்ச நாள் தான் ஆகுதாம், மேலப் படிக்க வைக்க பணம் செலவாகும், அதான் போதும்னு நிறுத்திட்டோம்.. வேலைக்கு அனுப்பவும் பயமா இருக்கு.. சீக்கிரம் கல்யாணம் முடிச்சிடலாம்னு பார்க்கிறோம்.. ஆனா அதுக்கும் ஒரு வருஷம் கழிச்சு தான் கல்யாண பேச்சு எடுக்கனும்னு ஜோசியர் சொல்லிட்டாருன்னு சாருவோட அம்மா சொன்னாங்க..

அந்த நேரம் எனக்கு ஒரு யோசனை வந்துச்சு.. படிச்சிட்டு வீட்ல எப்படி சும்மா இருக்கறது, கல்யாணம் பண்ணவும் ஒரு வருஷம் ஆகும்னு சொல்றீங்க.. அதுவரைக்கும் வெளியே வேலைக்கு அனுப்பத்தானே பயம்!! பேசாம  சாருவை எங்க கம்பெனிக்கு வேலைக்கு அனுப்புங்க.. நீங்க பயப்பட வேண்டிய அவசியமில்லைன்னு சொன்னேன்.. ராஜாக்கிட்ட சொல்லி அவளுக்கு வேலை போட்டுக் கொடுக்கவும் சொன்னேன்..

ராஜாவும் என் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து, அவளுக்கு வேலை கொடுத்தான்.. அதுல இருந்து சாரு குடும்பம் எங்களுக்கு இன்னும் நெருக்கமானாங்க.. சாரு எங்க கம்பெனில வேலை பார்ப்பதும் இல்லாம, அடிக்கடி வீட்டுக்கும் வருவா.. அவ வீட்டுக்கு வந்தா வீடு கலகலன்னு இருக்கும்.. அத்தை, அம்மான்னு விஜியையும் என்னையும் உரிமையா கூப்பிடுவா.. செல்வா கூட நல்லா பேசுவா.. ராஜா எப்போதும் போல அமைதி தான்.. ஆனாலும் அவளே அவன்கிட்ட உரிமை எடுத்து பேசுவா.. பெண் குழந்தை இல்லாத ஒரு குறை சாரு வந்ததுல இருந்து மறைஞ்சு போனா மாதிரி எனக்கு தோனுச்சு.. ராஜா அமைதின்னாலும், செல்வா இருந்தா வீடு கலகலன்னு தான் இருக்கும்.. ஆனா அவங்க அப்பா இறந்ததுல இருந்து அவனும் கொஞ்சம் அமைதியாயிட்டான்.. நானும் அவர் போன சோகத்துல இருந்தேன்..

இதுல சாரு வந்ததுக்குப் பிறகு வீடு திரும்ப பழைய மாதிரி இருந்ததா எனக்கு தோனுச்சு.. அப்பத்தான் எனக்கு அந்த எண்ணம் மனசுல வந்துச்சு.. சாருக்கும் ராஜாக்கும் கல்யாணம் பண்ணனும்னு நினைச்சேன்.. அதுப்பத்தி ராஜாக்கிட்ட பேசினப்போ.. “இப்போ தானேம்மா நான் நம்ம கம்பெனி பொறுப்பை கைல எடுத்துருக்கேன்.. அதை இன்னும் நல்ல லாபத்தோட நடத்தனும்.. அப்புறம் கல்யாணம் பத்தி யோசிக்கலாம்.. இப்போ எனக்கு 24 வயசு தானே ஆகுது.. இன்னும் 2, 3 வருஷம் போகட்டும்னு சொன்னான்.

என்னால அதுவரைக்கும் காத்திருக்க முடியல.. ஏன்னா சாரு வீட்ல அவளுக்கு ஒரு வருஷம் முடிஞ்சதும் கல்யாணம் செஞ்சுடுவாங்க.. அவளை கைவிட மனசு வரல.. அதனால சாருவை பத்தி அவன்கிட்ட சொல்லி, ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் செஞ்சுக்கோ… 25 வயசு கல்யாண வயசு தான், சாருவுக்கும் ஒரு வருஷம் கழிச்சு தான் கல்யாணம் நடத்தனும்.. இப்போ நம்ம கம்பெனி ஓரளவுக்கு நல்லா தானே போகுது.. அப்புறம் என்ன? இப்படி என்னெல்லாமோ சொல்லி அவனை சம்மதிக்க வச்சேன்.. அவனுக்கும் சாரு மேல கொஞ்சம் விருப்பம் இருந்துச்சு போல, அதனால சம்மதிச்சான்..

சாரு வீட்டிலும் எல்லோரும் சம்மதம் சொன்னாங்க.. ஆனா ஒரு வருஷத்துக்கு பிறகு எல்லாம் பேசிக்கலாம்.. இப்போ பேசினா எதுவும் நல்லா வராதுன்னு சொல்லிட்டாங்க.. பெரியவங்க அப்படி சொன்னாலும் சாருக்கு இதுல விருப்பம் நிறையவே இருக்கு போல, அடிக்கடி வீட்டுக்கு வர ஆரம்பிச்சா.. மருமகளாக போறதால எல்லோர்க்கிட்டேயும் இன்னும் உரிமை எடுத்துக்கிட்டா.. செல்வா அவளை அண்ணின்னே கூப்பிட ஆரம்பிச்சான்.. சாரு வீட்லயும் அவ இங்க வரப்போவ இருப்பதை பார்த்து எதுவும் சொல்லல.

ராஜா எப்பவும் போல தான் அவன் மனசுல என்ன இருக்குன்னு தெரியாது.. எப்பவும் போலவே இருப்பான்.. செல்வா சாருக்கிட்ட பேசற அளவு கூட அவன் அவக்கிட்ட பேசமாட்டான்.. ஆனா அவதான் தன்னோட மனைவியா வரப் போறான்னு அவனும் எதிர்பார்ப்போட தான் இருந்தான்.. முன்னவிட வேலையில அவளுக்கு பொறுப்பெல்லாம் கொடுத்தான்.. எனக்கும் விஜிக்கும் கூட இதுல சந்தோஷம். ஆனா என் தம்பி அண்ணாமலைக்கு இதுல அவ்வளவா விருப்பம் இல்ல.. நம்ம அந்தஸ்துக்க்கு ஏத்த பொண்ணா பார்க்கலாமேன்னு சொல்வான்..  நான் தான் ராஜா குணத்தை பத்தி சொல்லி, சாரு தான் அவளுக்கு ஏத்தவன்னு சொல்லி, அவனையும் சம்மதிக்க வச்சேன்.. இனி எல்லாமே நல்லதா நடக்கும்.. ராஜாவோட வாழ்க்கையும் நல்லாவே இருக்கும்னு நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.. ஆனா அதிகமா ஆசைப்படாத.. நீ ஆசைப்பட்ட மாதிரி எதுவும் நடக்கப் போறதில்லன்னு கடவுள் ஒவ்வொரு பிரச்சனையா காட்ட ஆரம்பிச்சாரு..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.