(Reading time: 38 - 75 minutes)

குன்னூர்ல இருந்து வந்த 3 வருஷம் இந்த கம்பெனியை முன்னேத்த நிறைய உழைச்சாங்க.. அப்புறம் ஒரு நிலைக்கு கம்பெனி வந்தப்போ, செல்வாவை மேல் படிப்புக்கு ராஜா வெளிநாட்டுக்கு அனுப்பி வச்சான்.. செல்வா கூட இங்கேயே படிக்கிறேன்னு சொன்னதுக்கு, ராஜா மறுத்துட்டான்.. உன்னோட படிப்பு இன்னும் நம்ம வியாபாரத்தை விருத்தியாக்க உதவும்னு சொல்லி அனுப்பி வச்சான்..

செல்வா வெளிநாடு போனதும், ராஜாவே எல்லாம் பார்த்துக்க வேண்டியதா இருந்தது.. அப்படி ஒரு முக்கியமான வேலையா அவன் டில்லிக்கு போனப்ப என் தம்பி அண்ணாமலைக்கு உடம்பு சரியில்லாம ஹாஸ்பிட்டல்ல சேர்த்தோம்.. ராஜாவால வர முடியாத சூழ்நிலை, டாக்டர்க்கிட்ட பேசி நல்ல ட்ரீட்மென்ட் கொடுக்க சொன்னான்..

என் தம்பிக்கு குடிப்பழக்கம் இருந்தது.. நிறைய குடிச்சு குடிச்சு ஈரல் பாதிக்கப்பட்டுடுச்சு.. இனி பிழைக்கறது கஷ்டம்னு சொல்லிட்டாங்க.. ரொம்ப் சீரியஸா இருந்தான்.. அந்த நேரம் என்னையும் விஜியையும் கூப்பிட்டு முக்கியமான விஷயம் பேசனும்னு சொன்னான்..

கம்பெனியும் நல்ல நிலைமைக்கு வந்ததால ராஜாக்கு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் செய்ய ஆசைப்பட்டோம்.. ஆனா அவன் வேணான்னு மறுத்துக்கிட்டே வந்தான்.. அதுக்கு காரணம், ராஜா குன்னூர்ல இருந்தப்ப, அவன் சீக்கிரம் குணமாகனும், போதை பழக்கத்தை விடனும்னு ஒரு தப்பான பொண்ணோட பழக்கம் ஏற்படுத்திவிட்டதாகவும், அந்த பழக்கம் இப்பவும் தொடருது.. அதான் ராஜா கல்யாணம் வேண்டாம்னு சொல்ல காரணம், நான் முயற்சி செஞ்சு பார்த்தேன்.. ராஜா மனசு மாறல..

ராஜாவை இப்படியே விட்டுடாதீங்க.. அந்த பொண்ணுக்கிட்ட இருந்து அவனை விலக்கி, ஒரு நல்ல பொண்ணா பார்த்து கட்டி வைங்கன்னு சொன்னான்.. அந்த நேரம் என் மனநிலை எப்படி இருந்ததுன்னு  வாய் வார்த்தையால சொல்ல முடியாது..ராஜா அப்பாக்கு எந்த கெட்ட பழக்கமும் இருந்ததில்ல.. ஆனா அவனோட மகனுக்கு போதை பழக்கம் இருக்குன்னு தெரிஞ்சப்பவே எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு.. இதுல அவன் கல்யாணம் ஆகாமலேயே ஒரு பொண்ணோட வாழ்ந்துக்கிட்டு இருக்கான்னு கேட்டப்போ நான் உடைஞ்சு போயிட்டேன்..

ஆனா எதுவுமே அவனா செஞ்ச தப்பு இல்ல… தப்பாவே இருந்தாலும் நான் என்னன்னு அவன்கிட்ட கேக்க முடியும்? சின்ன வயசுல இருந்து ஒரு தாயோட கடமைன்னு அவனுக்கு என்ன செஞ்சிருக்கேன்.. அவனா விழுந்து இப்போ அவனாவே எழுந்து ஒரு நல்ல நிலைமைக்கு வந்திருக்கான்.. ஒரு தாயா நான் கண்டிச்சு வளர்க்கிற வயசை தாண்டிட்டான்.. அவன்கிட்ட இந்த விஷயமா என்னால நேருக்கு நேர் பார்த்து பேச முடியல..  அதனால கங்காவை பார்த்து பேசினோம்.. என் பிள்ளையோட வாழ்க்கையை விட்டு விலகச் சொன்னோம்..விஜி ஒருபடி மேல போய் கங்காவை ரொம்பவே கேவலமா பேசிட்டா.. இதனால கங்கா என் பிள்ளை வாழ்க்கையை விட்டு போய்டுவான்னு நினைச்சோம்.. ஆனா என் பிள்ளையையே இழக்கற நிலைமைக்கு வந்தோம்..

அவன் உயிருக்கே ஒரு பிரச்சனைன்னதும், நான் மேற்கொண்டு கங்கா விஷயத்துல எதுவும் செய்யல.. சரி அவளையே அவன் கல்யாணம் செஞ்சுக்க நினைச்சாலும் சரின்னு அமைதியாயிட்டேன்.. ஆனா நானாகவும் இதைப்பத்தி ராஜாக்கிட்ட நேரா பேசல.. என்னால பேசவும் முடியல.. சரி அவனாவே ஏதோ ஒரு முடிவு எடுப்பான்னு அமைதியா இருந்தேன்.. ஆனா இதோ 3 வருஷம் ஓடிப்போச்சு இருந்தும் அவங்க உறவுல எந்த மாற்றமும் இல்ல..

என் மகனோட வாழ்க்கை இப்படியே போகனுமா? அவனுக்குன்னு ஒரு குடும்பம் அமைய வேண்டாமா?? இப்போ செல்வாவுக்கும் கல்யாண வயசு வந்தாச்சு.. அண்ணனுக்கு கல்யாணம் செய்தா தானே தம்பிக்கு செய்ய முடியும்? இதுவரைக்கும் கங்கா விஷயம் செல்வாவுக்கு தெரியாது.. செல்வாக்கிட்ட இதைப்பத்தி நாங்க சொல்லல.. சாரு ஏமாத்தினதால தான் ராஜா இப்படி இருக்கிறதா செல்வா நினைச்சுக்கிட்டு இருக்கான்.. கங்கா விஷயம் தெரிஞ்சா, தன் அண்ணனை அவன் என்னவா நினைப்பானோன்னு ஒரு கவலை.. அதான் செல்வாக்கிட்ட இந்த விஷயத்தை மறைச்சிட்டோம்.

ராஜாவோட வாழ்க்கை இப்படியே முடிஞ்சிடக் கூடாது.. என்காலத்துக்கு பிறகு அவன் தனி ஆளா நின்னுடக் கூடாது.. அதுக்கு தான் திரும்ப கங்காவை பார்த்து பேசினேன்.. அவளும் ராஜாவை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைப்பதா சொன்னா.. அதேமாதிரி அவனும் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டான்.. ஆனா முழு மனசா கல்யாணத்துக்கு ஒத்துக்கல..

இதுல தன் அண்ணனோட கடந்த காலத்தை பத்தி செல்வா உங்க வீட்ல சொல்லிட சொன்னான்..  அவன் சொன்னது சாரு விஷயமும், ராஜாவுக்கு ஏற்பட்ட போதைப் பழக்கத்தையும், ஆனா போதை பழக்கத்தை பத்தி சொன்னா, கங்காவை பத்தியும் சொல்ல வேண்டி வரும்னு நான் மறைச்சிட்டேன்.. நான் செஞ்சது தப்பு தான்.. எனக்கு என்னோட மகன் மேல நம்பிக்கை இருக்கு, ஒரு பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கிட்டதுக்கு பிறகு, கண்டிப்பா அவளுக்கு அவன் துரோகம் செய்ய மாட்டான்.. அதனால தான் நான் இதை மறைச்சேன்.. ஆனா கடைசி நிமிஷத்துல அவனே கல்யாணத்தை நிறுத்திட்டான்.. இருந்தும் உன்னை ஒருவிதத்துல ஏமாத்த நினைச்சேன்  என்னை மன்னிச்சிடும்மா..” என்று கோமதி நர்மதா முன் கைகூப்பி மன்னிப்பு கேட்க, நர்மதாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை..

ஒரு அன்னையாய் தன் மகன் நலம் குறித்து கோமதி செய்தது அவருக்கு நியாயமாக இருக்கலாம்.. ஆனால் திருமணம் ஆகாமலேயே ஒரு பெண்ணோடு தவறான தொடர்பு வைத்திருப்பது ஒன்றும் சாதாரண தவறு இல்லை.. அப்படிப்பட்ட மகனுக்கு இன்னொரு பெண்ணோடு திருமணம் செய்து வைக்க நினைப்பது உண்மையில் பெரிய குற்றமே!! அதிலும் விஷயத்தை மூடி மறைத்து  திருமணம் செய்ய நினைத்தது மிகவும் தவறு.. ஒருவேளை அந்த திருமணம் நடந்திருந்தால், அதை நினைத்து பார்த்தபோது அதிர்ச்சியாக தான் இருக்கிறது.. அதுக்காக முடிந்து போன ஒரு காரியத்துக்காக, இப்போது கோமதியின் மேல் கோபப்படுவது நல்லதல்ல.. அவருக்கு ஆறுதல் கிடைக்கட்டும் என்று தான் அவரிடம் மனதில் உள்ளதை பகிர்ந்துக் கொள்ள சொன்னாள்… அதனால் கோபப்பட்டு அவரை வேதனைக்கு உள்ளாக்க நர்மதா விரும்பவில்லை..

“என்ன அத்தை.. எதுக்கு இப்போ மன்னிப்பெல்லாம் கேக்கறீங்க.. விடுங்க.. அதான் எல்லாம் முடிஞ்சுப் போச்சே, அப்புறம் என்ன??  இந்த கல்யாணத்தை நிறுத்தியதே துஷ்யந்த் மாமா தானே.. கங்கா மேல இருக்க அன்பு தான் அவரை இப்படி ஒரு முடிவெடுக்க வச்சுது..  ஆனா கங்கா மேல இவ்வளவு அன்பு இருந்தா, அவர் ஏன் அவக்கூட ரகசிய வாழ்க்கை வாழனும்?? ஒருவேளை விஜிம்மா சொன்ன மாதிரி குன்னூர்ல அவங்களுக்கு கல்யாணம் ஆகியிருந்தா?  நீங்க சொன்ன மாதிரி அதை மறைக்க வேண்டிய அவசியமில்ல..  ஒருவேளை இப்படி இருக்குமோ? துஷ்யந்த் மாமா உடம்பு சரியில்லாத இருந்த நேரத்துல அவரை கவனிச்சுக்க ஒரு ஆள் வேணும்னு ரிஷபோட மாமாவே கங்காவை துஷ்யந்த் மாமாக்கு கல்யாணம் செய்து வச்சிருப்பாரோ?”

“அப்படி நடந்திருந்தா அண்ணாமலை ஏன்ம்மா கங்காவை பத்தி தப்பா சொல்லனும்? கங்கா ஏன் அமைதியா இருக்கனும்?”

“நீங்க சொல்றதும் சரிதான்.. அதையே போட்டு குழப்பிக்க வேண்டாம்.. அத்தை கவலையை விடுங்க.. உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதா நடக்கும்.. எல்லாமே சீக்கிரம் சரியாயிடும்.. இப்போ என்கிட்ட இந்த விஷயம் பேசினது உங்களுக்கும் ஆறுதலா இருக்கும்.. ஜோசியர் சொன்னதை மனசுல போட்டு குழப்பிக்காதீங்க..” என்று அவருக்கு நர்மதா ஆறுதல் கூறினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.