(Reading time: 38 - 75 minutes)

ரம்பத்துல தொழிலில் சின்ன சின்ன நஷ்டம் வர ஆரம்பிச்சுது.. கைக்கு கிடைக்க வேண்டிய கான்ட்ராக்ட்ல்லாம் கை நழுவி போயிடுச்சு.. இப்படி தொடர்ந்து நஷ்டத்தை பார்த்து ராஜா திணற ஆரம்பிச்சான்.. தொழிலில் இன்னும் கவனமா இருக்க ஆரம்பிச்சான். ஆனா அப்பவும் தொழிலில் நஷ்டம் வந்துக்கிட்டே இருந்தது.. அதுவும் முன்னை விட அதிகமா.. எப்படி சமாளிக்கன்னு புரியல.. இதுல வேலை செய்றவங்களுக்கு சம்பளம் கொடுக்கனும்.. எங்கக் கூட டீலர்ஷிப் வச்சிக்கிட்டவங்களுக்கு பதில் சொல்லனும்.. எப்படி சமாளிக்கப் போறோம்னு இருந்தது..

சரி ஏதாச்சும் சொத்தை வித்து நஷ்டத்தை சமாளிக்கலாம்னு நினைச்சா.. திடிர்னு அந்த குடும்பத்து ஆளுங்க சொத்து விஷயத்துல ஏமாத்தினதா சொல்லி கோர்ட்ல கேஸ் போட்டுடாங்க.. ஏற்கனவே இது சம்பந்தமா எல்லாம் விவரமும் தெரிஞ்ச வக்கீல் உடம்பு சரியில்லாம வெளிநாட்டுக்கு டீரிட்மென்ட்க்கு போயிருந்தாரு.. அதுவும் ஹாஸ்பிட்டல்ல இருந்தாரு.. அவரோட ஜூனியர் தான் அந்த கேஸை எடுத்துக்கிட்டாரு.. ஆனா ரொம்ப வருஷம் கழிச்சு கோர்ட்ல கேஸ் போட்டதால, அவருக்கு இந்த கேஸ் பத்தி ஒன்னும் புரியல.. ராஜாவோட அப்பாக்கும் தாத்தாகும் எல்லா விவரமும் ஓரளவுக்கு தெரியும்.. ஆனா ராஜாக்கும் செல்வாக்கும் இதைப்பத்தியெல்லாம் விளக்கமா தெரியாது.. என்னோட தம்பிக்கும் இந்த சொத்து விஷயம் பத்தி எதுவும் விவரம் புரியல.. அதனால எங்கப் பக்கம் கேஸ் தீர்ப்பு வர்றது கொஞ்சம் கஷ்டம்னு வக்கீல் சொன்னாரு.. சீனியர்க்கிட்டேயும் இதைப்பத்தி விளக்கம் கேக்க முடியல.. எப்படியோ நான் கேஸ் ஜெயிக்க முயற்சி செய்றேன்னு சொன்னாரு.. அதுக்கான முயற்சியிலும் இறங்கினாரு..

இருந்தாலும் கேஸ் முடியறவரை எந்த சொத்தையும் விக்கவோ அடமானம் வைக்கவோ கூடாதுன்னு அவங்க கோர்ட் மூலமா சொல்ல வச்சிட்டாங்க.. எங்க நிலைமை தெரிஞ்சு வேணும்னே அவங்க இதெல்லாம் செய்யற மாதிரி இருந்தது.. வீட்ல இருக்க நகை பணத்தை வச்சு, வேலை செய்றவங்களுக்கு சம்பளம் கொடுத்து சமாளிச்சோம்.. இருந்தாலும் அது தற்காலிக பிரச்சனை தான்.. நஷ்டத்தை ஈடுகட்டி கம்பெனியை தொடர்ந்து நடத்த எங்களுக்கு கொஞ்சம் நிறைய பணம் தேவைப்பட்டுச்சு.. இருந்தாலும் எப்படியோ நிலைமையை சமாளிச்சிடலாம்னு மனசுல ஒரு நம்பிக்கை இருந்தது.. ஆனா அந்த நம்பிக்கையும் உடையற மாதிரி ஒன்னு நடந்தது..

சாருவுக்கும் ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளைக்கும் சாரு வீட்ல நிச்சயதார்த்தம் ஏற்பாடு செஞ்சிருந்தாங்க.. ஒரு வருஷம் வரை அவ கல்யாண விஷயமா பேசக் கூடாதுன்னு சொன்னவங்க.. இப்ப சாருக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்காங்க.. அதுவும் வெளியில.. நேர்ல போய் கேட்டா, நல்ல சம்பந்தம் விட மனசில்லன்னு சொன்னாங்க.. நான் ராஜாக்கு சாருவை பேசின்ச்ப்போ, நாங்களும் நல்ல நிலைமைல தான் இருந்தோம்.. ஆனா அப்போ கல்யாணத்தை பத்தி பேசினாக் கூட தப்புன்னு சொன்னவங்க, இப்போ நல்ல சம்பந்தம்னு நிச்சயம் வரைக்கும் போனதுக்கு காரணம் என்னன்னு எனக்கு தெரியல.. அவங்கக்கிட்ட கேக்கவும் மனசு வரல..

ஆனா விஜி விடல, நான் மனசுல நினைச்சதை நேராகவே அவங்கக்கிட்ட கேட்டா.. அதுக்கு அவங்களோ, நல்லவேலை நாங்க அப்போ ஒத்துக்காததும் ஒருவிதத்துல நல்லதுக்கு தான், அப்படி ஒத்துகிட்டு எங்க பொண்ணை உங்க பையனுக்கு கட்டி கொடுத்திருந்தா.. அப்புறம் அவளுன் உங்கக் கூட சேர்ந்து கஷ்டப்பட்ருப்பான்னு சொன்னாங்க.. சாருவும் எங்க அப்பா, அம்மா விருப்பப்படி தான் நான் நடந்துப்பேன்னு சொல்லிட்டா.. அதுக்கும் மேல என்ப பேச, நாங்க அமைதியா வந்துட்டோம்..

ஆனா ராஜா இதை எப்படி எடுத்துப்பானோன்னு எனக்கு பயமாவே இருந்தது.. ஆனா அவன் எங்களுக்கு சமாதானம் சொன்னான். இருக்க பிரச்சனைகளை சரி செய்ய பார்ப்போம்..  இதை விட்டுத் தள்ளுங்கன்னு ஆறுதல் சொன்னான்.. ஆனாலும் அந்த ஏமாற்றத்தை அவன் மனசு தாங்கிக்கலன்னு நல்லாவே எனக்கு புரிஞ்சுது..

எப்பவும் எதையும் மனசுவிட்டு யார்க்கிட்டேயும் பேசாதவன், இப்பவும் அவன் உள்ளுக்குள்ளேயே அவனோட வருத்தத்தை போட்டு புதைச்சுக்கிட்டான்.. இருந்தும் அவன் நடவடிக்கையெல்லாம் அவனோட வருத்தத்தை சொல்லாம சொல்லுச்சு.. முன்ன விட இன்னும் எல்லாரையும் விட்டு ஒதுங்கியிருந்தான்.. ஆஃபிஸ்க்கு போயிட்டு வந்தா, அவன் ரூம்லேயே இருப்பான்.. நேரத்துக்கு சாப்பிடமாட்டான்.. சரியா தூங்கமாட்டான்.. சரி கொஞ்ச நாள் போனா சரியாயிடுவான்னு நாங்க நினைச்சோம்..

ஆனா இருக்க இருக்க அவன் மோசமா ஆனான்.. சில நேரம் ஆஃபிஸ்க்கு கூட போகமாட்டான்.. ரூமை விட்டு வெளிய கூட வரமாட்டான்.. எங்களுக்கு ஏதோ தப்பா பட்டுச்சு.. என்னன்னு ஆராய்ந்து பார்த்தப்ப தான் ராஜா போதை மருந்து சாப்ட்றான்னு கண்டுப்பிடிச்சோம்… அவனுக்கு எப்படி அந்த பழக்கம் வந்ததுன்னு எங்களுக்கு புரியல.. ஆனா இனி அதை அவன் தொடவே கூடாதுன்னு நினைச்சு அதை தடுக்க நினைச்சோம்.. அதோட விளைவு அவன் கையை கிழிச்சுக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செஞ்சான். டாக்டரோ, இப்படி போதை பழக்கம் இருக்கவங்களுக்கு உடனே அதை  நிறுத்தக் கூடாது.. கொஞ்சம் கொஞ்சமா தான் அதை சரிப்படுத்தனும்னு சொன்னாரு..

ஆஃபிஸ்ல அடங்கியிருந்த பிரச்சனை திரும்ப தலைதூக்க ஆரம்பிச்சது.. திரும்ப சம்பள பிரச்சனை, சில பேர் வேலை விட்டே நின்னுட்டாங்க.. சில பேர் முதலாளியும் சரியா ஆஃபிஸ்க்கு வர்றதில்ல.. வந்தா வேலையும் சரியா பாக்கிறதில்ல.. நஷ்டமும் சரியான பாடில்லை.. அதனால இந்த வேலை நிரந்தரமான்னு எல்லாம் சந்தேகிக்க ஆரம்பிச்சாங்க.. எங்களுக்கு என்ன பண்றதுன்னே புரியல..

செல்வா தான் காலேஜ்க்கு லீவ் போட்டுட்டு ஆஃபிஸ்க்கு போனான்.. கூட இன்னும் விசுவாசமா இருக்கும் அங்க வேலைப்பார்க்கும் பழைய ஆளுங்க அவனுக்கு உதவியா இருந்தாங்க.. வெளியில சில பேர்க்கிட்ட பணம் எதிர்பார்த்தும் கிடைக்கல.. எப்படி பிரச்சனையை சமாளிக்கிறதுன்னு நாங்க முழிச்சிக்கிட்டு நின்னப்போ, இன்னும் எங்க தலையில இடி விழற செய்தி வந்து விழுந்தது.. அங்க வேலைப் பார்க்கும் நம்பகமான ஒருத்தர், ராஜாவோட இப்போ நிலையை பார்த்து, விஷயம் விபரீதமா போனது புரிஞ்சு தான் விஷயத்தை வெளிய சொன்னாரு..

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதுக்கு காரணம்  சாரு தான்னு சொன்னாரு.. ராஜா அவளை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைச்சிருந்தானாம்.. அது சம்பந்தமா தான் நஷ்டம் ஏற்பட்டதுன்னு சொன்னாரு.. இதையே கொஞ்ச நாள் முன்னாடி ராஜாக்கிட்ட ஆதாரப்பூர்வமா சொன்னதாகவும் சொன்னாரு.. அதுமட்டுமில்லாம ராஜாக்கு இப்படி ஆனதுக்கும் சாரு தான் காரணமா இருக்கும்னு சந்தேகத்தோட சொன்னாரு.. சாருவை பார்க்க யாரோ ஒருத்தர் அடிக்கடி ஆஃபிஸ்க்கு வருவானாம்.. எதையோ கொடுத்துட்டு போவானாம்.. சாரு ராஜாக்கு அடிக்கடி  ரிலாக்ஸாக ஏதோ சத்துப்பானம் கலந்துக் கொடுப்பாளாம்.. எனக்கு தெரிஞ்சு துஷ்யந்த் சார்க்கு எந்த கெட்டப்பழக்கமும் இல்ல.. இந்த சாரு வந்து தான் சார்க்கு இப்படியெல்லாம் ஆச்சுன்னு அவர் சொன்னாரும்மா..”

இதுவரை கோமதி சொன்னதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த நர்மதா.. சாரு தான் துஷ்யந்திற்கு நடந்ததற்கெல்லாம் காரணம் என்ற செய்தியை கேட்டதும் அதிர்ந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.