(Reading time: 70 - 139 minutes)

“சரி நாங்க போறோம். ஆனா எங்களுக்கு நீ பதில் சொல்லிவிடு. நாங்க இங்கிருந்து கிளம்பறோம்”’

“உங்களிடம் ஏதும் சொல்ல முடியாது போங்கடா வெளியே” என்றவன் அவர்களை கண்டுக்கொள்ளமல் மீதமிருந்த மதுவை அருந்திவிட்டு, அவர்களின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அந்த சாய்வு நாற்காலியிலே தூங்கினான். அவர்கள் அவனை எழுப்ப முயற்சிக்க அது முடியாமல் போனது. போதை தெளிந்த பிறகு அவனே எழுந்தரிக்கட்டும் என விட்டு விட்டனர்.

அவர்கள் இருவரும் அந்த வீட்டில் உள்ள அறைகளுக்கு சென்று பார்க்கையில் கலையாத பொருட்களும் அதன் மேல் படிந்த தூசியும் அவர்களுக்கு அவன்மேல் சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் அவன் வரவேற்ப்பு அறையில் இருந்த சோபா மற்றும் சாய்வு நாற்காலியில் தான் தங்கி இருக்கிறான். அவனின் பொருட்களும் அங்கேயே தான் இருந்தது. அதை வைத்து அந்த வீட்டில் அவன் மட்டும் தான் இருக்கிறான் என புரிந்துக் கொண்டனர்.

அவர்கள் தேடி வந்த நபர் அவன் இல்லையோ என்ற சந்தேகத்துடன் வீட்டை சுற்றிப்பார்த்தனர். பின் வாசலை திறக்க முடியாதளவு பொருட்களை அடுக்கி இருந்தது. அதை நகற்றி பின் வாசல் கதவை திறந்து பார்க்கையில், அங்கே மரங்களும் செடிகளும் வளர்ந்தும் படர்ந்தும் ஒரு காட்டை போல இருந்தது. அதை பார்த்து பயந்த ரூபன்  “டேய் கதவை சாத்து பாம்பு ஏதாவது உள்ளே வந்திட போகுது” என அலற அந்த கதவை அடைத்து உள்ளே சென்றனர்.

என்ன தான் அந்த கதவை அடைத்தாலும் அவர்களுக்கு “அந்த குட்டி” காட்டில் ஏதோ ரகசியம் புதைந்து கிடப்பதுபோல தோன்றியது.

“இவன் தானா?” ரூபன் சந்தேகத்துடன் மகேனை பார்த்து கேட்டான்.

“தெரியலடா. இவன் யார்? இந்த வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்?” யோசனையுடன் அங்கு உறங்கிக் கொண்டு இருப்பவனை பார்க்க அவனோ நல்ல உறக்கத்தில் இருந்தான்.

மகேன் கிட்சனுக்கு சென்று தண்ணீர் குழாயை திறக்க அதிலிருந்து காத்து மட்டுமே வர, “இதுல தண்ணீ வரல. இவனை எப்படி எழுப்பறது?” என்றான் சலிப்புடன்.

“இரு! காரில் ஒரு கட்டன் மினரல் வாட்டர் இருக்கு அதை எடுத்திட்டு வரேன்” ரூபன் காரில்  தண்ணீரை எடுத்து திரும்புகையில் சைட் வியு கண்ணாடியில் ரத்தமென சிவந்த இரு விழிகள் தெரிந்தது. பயத்தில் கையிலிருந்த பாட்டில் கீழே விழ அதை எடுத்து மீண்டும் அந்த கண்ணாடியை பார்க்கயில் எங்கே ஏதுமில்லை!

அந்த விழிகளை பற்றியே யோசனையுடன் வீட்டினுள் செல்ல மகேன் அந்த புதியனை கன்னத்தில் அறைவதை கண்டான். உடனே ஓடி சென்று “ஹேய், நீ அவனை என்ன பண்ணற?” கேட்டான்.

“ம்ம்ம் இப்படி அடி வாங்கினால் இவன் முழிப்பானா பார்க்குறேன். எங்க இவன் கண்ணை கூட திறக்கமாட்றான்”. அதன் பிறகு எப்படியோ ஒரு வழியாக அவர்கள் அவனை எழுப்பிவிட, எழுந்து அமர்ந்தவன் இவர்களை பார்த்த பார்வையில் பயம் மட்டுமே குடியிருந்தது! அந்த பயமே அவர்களுக்கு நம்பிக்கையும் கொடுத்தது.

“நீ தானே கலைவாணன்” – ரூபன்

“யாரு நீங்க? என் வீட்டில் என்ன பண்ணறிங்க?”

“எங்களுக்கு ஆதியை பற்றி கொஞ்சம் தெரியனும்” – மகேன் அதிரடியாக கேட்டான்.

கயவன் 2

திய உணவு வேளை முடியும் தருவாயில் தினமும் கலைவாணனுக்கு உணவு எடுத்து செல்லும் சிறுவன் அர்விந்த்க்கு அழைத்தான். தன் மாமாவின் வீடுக்கு இருவர் சென்றதையும், அவர்கள் அச்சிறுவனிடம் பேசியதை பற்றியும் சொன்னான்.

அர்விந்த் மேலும் அவர்கள் பார்க்க எப்படி இருப்பார்கள், எதில் வந்தார்கள் என்று அச்சிறுவனிடம் விபரங்களை கேட்க, சிறுவன் அவர்களின் அடையாளத்தை சொன்னான். அரவிந்த்கு அவர்கள் யாரென தெரியவில்லை. மேலும் சிறுவன் அவர்களின் காரின் வர்ணத்தையும் எண்ணையும் சொல்லுகையில் அர்விந்த் கொஞ்சம் எச்சரிக்கையானான். அவனுக்கு அந்த காரை தெரிந்தது போல இருந்தது.

அர்விந்த் அச்சிறுவனிடம் “சரி நான் பார்த்துக்கொள்கிறேன், அவர்கள் மீண்டும் அவ்விடத்திற்கு வந்தால் கண்டிப்பாக என்னிடம் சொல்” என்றவன் அந்த அழைப்பை துண்டித்தான்.

யார் அவர்கள்? ஏன் கலைவாணனின் வீட்டை பற்றி கேட்க வேண்டும்? ஒரு வேலை அவர்கள் அந்த வீட்டை வாங்க ஏதும் வந்து இருப்பார்களா? கண்டிப்பாக அவர்கள் அந்த வீட்டை வாங்க வரவில்லை, அப்படி இருந்தால் அவர்கள் சிறுவனிடம் விசாரித்து, அவனின் முகவரியும் தொலைபேசி எண்ணையும் வாங்க வேண்டியதும் இல்லை.

மேலும் கலைவாணனின் வீடும் சொத்தும் ஏதும் கடனில் இல்லை. ஒரு கால் அவர்கள் போலீஸாக இருந்தால்? இருந்தால்! அந்த எண்ணமே அவனை நிலைக்கொள்ளாமல் செய்தது.

ஆனால் ஏன் போலீஸ் திடிரென வர வேண்டும். கலைவாணன் அவனின் பழைய வீட்டை விட்டு வெறியேறி, இப்போது இருக்கும் வீடுக்கு வந்து பல ஆண்டுகள் கடந்து விட்டது. அர்விந்திற்கு இப்போது அங்கு அவனை தேடி வந்திருப்பது யாரென்னு தெரியவில்லை அவனுக்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது .

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.