(Reading time: 8 - 16 minutes)

தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 24 - ஜெய்

Saathiram pesugiraai kanamma

சீனியர் எப்போ வந்தீங்க.....”

“நீங்க ரெண்டு பேரும் ரொம்ப பாசமா அந்த நாராயணனை பார்த்தீங்களே... அப்போவே வந்தாச்சு.... அவனோட என்னடா தகராறு....”

“தகறாரா.... நாங்க பேசினாலே தகறாரா.... அவர் பாசமா எங்களை நலம் விசாரிச்சாரு... நாங்க அதைவிட பாசமா பதில் சொன்னோம் சீனியர்....”

“நீங்க ரெண்டு பேரும் பாசமா பேசினீங்க... இதை நான் நம்பணும்.....”

“அப்போ அப்போ நாங்களும் நல்ல பசங்களா இருப்போம் சீனியர்... நம்புங்க....”

“சரி இன்னைக்கு வாதாட வேண்டிய பாயிண்ட்ஸ் எல்லாம் நோட் பண்ணிட்டீங்களா.... எங்க மயூரியும் அவங்க அம்மாவும் வந்துட்டாங்களா...”

“இதுல எல்லாம் நோட் பண்ணி வச்சிருக்கேன் சீனியர்.... நம்ம சாரங்கன் இன்னும் இங்கயே நின்னுட்டு இருக்கானே... அதுலேர்ந்தே தெரிய வேணாம்... அவன் மயிலு இன்னும் வரலை... பையன் வழி மேல் விழி வச்சு காத்திருக்கான்....”

“டேய் ஜொள்ளு விட்டு காரியத்தை கெடுத்துடாத சாரங்கா... அவங்க வந்தா கேக்கற கேள்விக்கு எப்படி பதில் சொல்லணும் அப்படின்னு தயார்படுத்து...”

“சீனியர் வேலைன்னு வந்துட்டா நாங்க வெள்ளைக்காரன் மாதிரி.... கன் மாதிரி இருப்போம்....”

“சரி நான் போய் மதி வந்துட்டாரா பார்த்துட்டு வர்றேன்... பதினோரு மணிக்கு கரெக்டா உள்ள வந்துடுங்க....”

சந்திரன் கோர்ட் அறையினுள் செல்ல, மயூரியும் அவள் தாயாரும் கோர்ட் வளாகத்திற்குள் நுழைந்தார்கள்.

“வாங்கம்மா எங்க உங்க கணவர் வரலையா.....”

“இல்லை பாரதி... அவர் ரொம்ப நேரம் wheel chair-லையே உக்கார்ந்து இருக்க முடியாது... இங்க எவ்ளோ நேரம் ஆகும்ன்னு சரியா தெரியலை.... அதுனால அவரை கூட்டிட்டு வரலை....

“பரவாயில்லைம்மா நீங்க ரெண்டு பேருமே போதும்... நாராயணன் தரப்பு வக்கீல் என்ன கேள்வி கேட்டாலும் நீங்க உங்களுக்குத் தெரிஞ்சதை சரியா சொன்னீங்கன்னா போதும்....”

“ரொம்ப பயமா இருக்கும்மா.... இதுக்கு முன்னாடி இந்த மாதிரி நாங்க கோர்ட் படி எல்லாம் ஏறினதே இல்லை.... என்ன மாதிரி கேள்வி கேப்பாங்களோன்னு திக் திக்குன்னு இருக்கு.....”

“உண்மை நம்ம பக்கம் இருக்கற வரை கவலைப்படாதீங்க... சரி வாங்க நேரம் ஆகிடுச்சு... கோர்ட் ரூம்க்குள்ள போகலாம்...”

பாரதியும், சாரங்கனும் உள்நுழைந்து அமர, நாராயணன் தரப்பு வக்கீலும் அவரின் ஆட்களும் உள் நுழைந்து அமர்ந்தார்கள்.... சிறிது நேரத்தில் நீதிபதி வர இவர்களின் இவர்களின் வழக்கு முதல் வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

முதலில் போலீஸ் தரப்பில் நாராயணன் மயூரியின் வீட்டை கேட்டு மிரட்டுவதாக கூற நாராயணன் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

நாராயணன் கூண்டில் ஏறி தான் சொல்வதனைத்தும் உண்மை என்று சத்தியப்ப்ரமானம் ஏற்க அவரை சந்திரன் கேள்வி கேட்க எழுந்தார்.

“நீங்க எதுக்காக மயூரி வீட்டைக் கேட்டு அவங்களை மிரட்டினீங்க....”

“மிரட்டலாம் இல்லை சார்... சமீபத்துல திநகர்ல துணிக்கடை எறிஞ்ச பிறகு பெரிய பெரிய கடைங்கல்லாம் சுத்தி இடம்விட்டு கட்டி இருக்கணும் அப்படின்னு அரசாங்கத்துல இருந்து ஒரு லெட்டர் வந்தது.... எங்க துணிக்கடை நாலு மாடிக் கட்டிடம்... கடை முன்னாடி ரோடு இருக்கு.... ரெண்டு பக்கமும் கடைங்க... பின்னாடி பக்கம் மட்டும்தான் இடம் விட முடியும்... அதுதான் அவங்கக்கிட்ட தரமுடியுமான்னு கேக்கதான் செஞ்சோமே தவிர மிரட்டலாம் இல்லை சார்....”

“உங்க கடை பின்னாடி ஏற்கனவே இடம் இருக்கு போல...”

“இல்லை சார் அங்க கடையோட கோடௌன் இருக்கு... அதுக்குப் பின்னாடிதான் இவங்க வீடு வருது.....”

“அதைத் தர முடியாதுன்னு நீங்க முதல் வாட்டி கேட்ட உடனேயே அவங்க பதில் சொல்லிட்டாங்க... அதுக்கு பிறகும் நீங்க எதுக்காக அவங்க வீட்டுக்கு அடிக்கடி போன் பண்ணி தொல்லை பண்ணினீங்க.....”

“சார் நான் அப்படிலாம் பண்ணவே இல்லை சார்... அவங்க தர முடியாதுன்னு சொன்ன உடனேயே நான் வேற என்ன பண்ணலாம் அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்.... நான் அதுக்குப் பிறகு இவங்களை தொடர்பு கொள்ளவே இல்லை.....”

“பொய் சொல்றீங்களே நாராயணன் நீங்க அதற்கு பிறகும் பல முறை அவங்களை போன்ல பேசி மிரட்டி இருக்கீங்க... அதே மாதிரி அவங்க வீட்டுக்கு ராத்திரி நேரத்துல ரௌடிங்களை அனுப்பி மிரட்டி இருக்கீங்க....”,சந்திரன் கூறி போலீஸ் தரப்பில் கைது செய்த நால்வரையும் அழைத்து வர செய்தார்.

அவர்களை பார்த்த நாராயணன் தனக்கு அவர்கள் யார் என்றே தெரியாது என்று சாதிக்க, நாராயணன் தரப்பு வக்கீல் எழுந்து இதற்கும், நாராயணனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.... தொழில் போட்டி காரணமாக அந்த இடத்தில் பாத்திரக்கடை வைத்திருக்கும் முருகேசு என்பவரே இவர்களை ஏவி விட்டுருக்கிறார் என்று வாதிட, பாரதியும், சாரங்கனும் அடப்பாவிகளா என்ற பார்வையை நாராயணனை நோக்கி வீசினார்கள்.  அவர் அதற்கு என்கிட்டயேவா என்று மிதப்பாக ஒரு பார்வை பார்த்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.