(Reading time: 9 - 18 minutes)

மனம் மயக்கிடும் மல்லிகை மணம் வீச, இருதோள்களிலும் கொஞ்சிக்கொண்டிருந்த பூக்களைப் பார்த்து புன்னகைத்தபடி இருந்தவளை, கலைத்திட்டது அருகே கேட்ட குரல்…

“வாவ்…. டெலிபதியா?...”

சொல்லிக்கொண்டே வந்த தமையனை அவள் புரியாத வண்ணம் பார்த்திட,

“ரொம்ப யோசிக்காத… கீழே போ… அப்புறம் மிஸ் பண்ணிடுவ…”

சொன்னவன் அடுத்த நொடி அங்கே நிற்காமல் சென்றிட,

புடவையின் முந்தானையை பிடித்தபடி ஆர்வத்துடன் படிக்கட்டில் வேகமாக அவள் இறங்கிட, அவள் கால்களில் இருந்த கொலுசு மணிகளின் சத்தம் கேட்டு, ஹாலில் பேசிக்கொண்டிருந்தவனின் கவனம் இவள் புறம் திரும்ப, சட்டென அவளது ஓட்டம் தடைப்பட்டு நின்றிட, முகமோ சிவந்து போனது…

அதற்காகவே காத்திருந்தவன் போல், அவளது செந்தூர முகத்தினை ரசித்தவனின் அருகே வந்து

“மாம்ஸ்… எனக்கு ஒரு உண்மை சொல்லுங்க… நீங்க அவ கிட்ட சொல்லிட்டு தான வந்தீங்க?..”

அவளின் தம்பி, தன் அக்காவிற்கென பேசியிருக்கும் மாப்பிள்ளையை கேலி செய்திட,

“டீ…” என அவள் வரவும் சரியாக இருந்தது…

“ஹ்ம்ம் சாரு… மிஸ் பண்ணாம வந்துட்டியே…”

தமையனின் கேலி தொடர, பூத்த நாணத்தை தனக்குள்ளேயே அடக்கிக்கொண்டு, வந்திருக்கும் தன்னவனிடமும் டீயை கொடுத்துவிட்டு அவன் முகம் பார்க்காமல் அவள் உள்ளே சென்றிட,

அவள் சென்ற திசையையே பார்த்திருந்தவன், டீயை அருந்திவிட்டு எழுந்து செல்ல, அவள் மெல்ல அவன் இருந்த இடத்திற்கு வந்தாள்…

டீ கப்பின் கீழே இருந்த சிறு துண்டு காகிதத்தை கையிலெடுத்தாள்…

“உன் காதலை நானும் இன்னைக்கு மிஸ் பண்ணலை…” என்ற வாசகம் மட்டுமல்லாது அதன் கீழே அந்த டீ பிராண்டின் பெயரும் இருந்திட, சட்டென செல்லக்கோபமானது உதித்த வேளையில், பேப்பரை கசக்க முனைந்தவள், சட்டென பின்புறம் ஏதோ இருந்திட, அதனை பார்த்திட்டாள்…

பார்த்த மாத்திரத்தில் வெட்கமும் நாணமும் ஒருங்கே போட்டி போட்டுக்கொண்டு அவளுள் எழுந்திட, அந்த சிறு காகிதத்தால் தன் முகத்தை மறைக்க முற்பட்டவள் அதில் தோற்றுக்கொண்டிருக்க, அதை தூரத்தில் இருந்து ரசித்திட்டான் அவளின் நாயகன்…

“இதே காதல் என்றும் கிடைக்குமா?...” என்று விட்டு, “டீயை மட்டும் சொல்லலை…” என குறிப்பிட்டிருக்க, பின்னே அவளின் முகபாவங்களை கேட்டிடவா வேண்டும்?...

அவளின் சிணுங்கல்களை அவனும் தூரத்தே இருந்து ரசித்திட, அவளும் உள்ளுணர்வின் உந்துதலால் நிமிர்ந்து பார்த்திட, இருவிழிகளும் ஒருங்கே சந்தித்துக்கொண்டது இனிதே…

“ஹ்ம்ம்… அவங்க மிஸ் பண்ணலை…” என அவர்கள் இருவரையும் பார்த்து சொல்லிய தீபன், ஒரு சிப் டீயை உறிஞ்சிவிட்டு, “இப்போ, நானும்….” என்று சிரித்தபடி, கேமராவைப் பார்த்துவிட்டு, “இனி நீங்களும் தான?...” என்று கேட்டு முடிக்கவும், அதனூடே அதுவரை தொடரந்து வந்த இசையும் இனிதே முடிவது போல் அமைந்திருந்தது அந்த விளம்பரம்…

ஏற்கனவே திரையில் பார்த்திருந்த போதிலும், இன்று தாயின் முன்னையில் அந்த விளம்பரத்தை அவன் பார்த்திட நேர, அவனுக்குள் ஏற்பட்ட உணர்வுகளுக்கு அளவுகளே இல்லை…

“எப்படி கல்யாணிம்மா?... கௌஷிக் தம்பி எப்படி நடிச்சிருக்கார் பார்த்தீங்களா?...”

சுரேஷ் வியப்புடன் சொல்லிவிட்டு, கல்யாணியை பார்த்திட, அவரின் முகத்திலோ யோசனைக்கோடுகள் தெளிவாக இருந்த்தை கௌஷிக்கினால் உணர முடிந்தது நன்றாகவே…

“கண்ணா… நடிக்கலை…”

கல்யாணியின் பதில் தெளிவாக வர, தூக்கிவாரிப்போட நிமிர்ந்தான் கௌஷிக்…

“ஆமா கல்யாணிம்மா… தம்பி அந்த பாத்திரமாவே மாறிட்டார்… தம்பி முகத்துல இப்படி ஒரு சந்தோஷத்தையும் சிரிப்பையும் நான் பார்த்ததே இல்ல கல்யாணிம்மா…”

அவர் உற்சாகம் வழிய கூற, “நானும் தான்….” என உற்சாகம் வடிய கூறினார் கல்யாணியும்…

“சரி… கல்யாணிம்மா… ஒரு வழியா நல்லபடியா அட் முடிஞ்சது… உங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும்… நீங்க மட்டும் தம்பிகிட்ட பேசலைன்னா, தம்பி இந்த அட் எடுக்குறதுக்கே சம்மதிச்சிருக்கமாட்டார்… ஆமா கல்யாணிம்மா உங்களால தான் எல்லாமே…”

சுரேஷ் கல்யாணியிடம் கூறிவிட்டு, கௌஷிக்கிடமும் விடைபெற்று செல்ல,

“எல்லாமே என்னால தான்…” என்ற வார்த்தைகள் கல்யாணியிடமிருந்து வந்திட,

“அம்மா….” என அதிர்ந்தவனாய் அவரை பார்த்திட்டான் கௌஷிக்…

தே நேரம்,

சாருவின் வீட்டில்,

“சாரு பாப்பா… எவ்வளவு அழகா இருக்குற?... என் கண்ணே பட்டுடும் போல இருக்கே…” என விளம்பரத்தை பார்த்து சிலாகித்தபடி, மஞ்சுளா கூற,

“அட என்ன மஞ்சுளாக்கா, உங்க கண்ணு மட்டும்னு இப்படி சட்டுன்னு சொல்லிட்டீங்க… என் கண்ணையும் சேர்த்துக்கோங்க…” என சொல்லிய தீபன், சாருவின் அருகில் அமர்ந்திட,

“சரி தம்பி…” என தலையாட்டினார் மஞ்சுளாக்கா…

“ஏன் உங்க இரண்டு பேர் கண்ணோட நிறுத்திட்டீங்க… ஊர்ல இருக்குற எல்லாரோட கண்ணையும் சேர்த்துக்க வேண்டியது தான?...”

சாரு முறைப்புடன் கேட்டிட, “அட என்ன பாப்பா நீ?... அந்த விளம்பரத்துல நீ என்னம்மா இருக்குற தெரியுமா?... உன் பாட்டு பின்னாடி இசையா வர, நீ அதுல அழகா நடிக்க, பார்த்துட்டே இருக்கலாம் போல தெரியுமா?...”

உவகை பொங்கி வழிய அவர் கூறிவிட்டு, தீபனிடம், “ஏன் தம்பி… பாப்பாவோட இந்த விளம்பரம் இப்படி சட்டுன்னு முடிஞ்சிட்டே அதை பெரிசா எடுக்க முடியாதா?....”

வெள்ளந்தியாய் அவர் வினவிட, “பெரிசா நாம எடுக்குறோமோ இல்லையோ கடவுள் எடுக்க நினைச்சிட்டார்… பின்ன என்னக்கா?...”

அவனும் புன்னகையுடனே கூற, மஞ்சுளாவிற்கோ ஒன்றும் புரியவில்லை… தீபனின் வார்த்தைகள் கேட்டு திடுக்கிட்டவளாய் அவள் தமையனைப் பார்த்திட, அவனோ தான் ஒன்றுமே செய்யவில்லை என்ற பாவனையில் அவளை பார்த்திட்டான்…

“முகம் பார்த்திட காத்திருக்கும் மலராய்… தன்னவனின் வருகையை எதிர்நோக்கி…”

Episode # 08

Episode # 10

{kunena_discuss:1162}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.