(Reading time: 18 - 35 minutes)

ஹரிணி ஒரு பிளாஸ்டிக் அடுக்கு வாங்கி வந்து அதில் காபித்தூள், சக்கரை, உப்பு டப்பாக்களை அடுக்கினாள்.

ரஞ்சனி வைத்திருந்த சிறிய எலெக்ட்ரிக் ஸ்டவ்வை அந்த மேடையில் வைத்து விட்டு பாத்திரங்களையும் அந்த பிளாஸ்டிக் அடுக்கிலேயே வைத்தாள்.

“இந்தா உன் பொக்கிஷம்” ரஞ்சனி எடுத்துக் கொடுக்க அதை ஆசையாக வாங்கி அந்த பால்கனியின் மூலையில் வைத்தாள்.

மதியம் அந்தப் பக்கம் வெயில் படுவதை கவனித்தவள் துளசி தொட்டி ஒன்றும் ரோஜா தொட்டி ஒன்றுமாக வாங்கி வந்து வைத்தாள்.

“மெஸ் போகலாமா. இன்னிக்கு முதல் முறை சாப்பிட்டு பார்க்கலாம்” ரஞ்சனி கேட்க இருவரும் மெஸ்ஸில் நுழைந்தனர்.

அது ஆண்கள் பெண்கள் இருவருக்கும் பொதுவான மெஸ். அங்கு பெரிய தொலைக்காட்சி பெட்டி ஒன்றும் இருந்தது.

முரளி அங்கு அமர்ந்திருக்க அவனைப் பார்த்த ஹரிணி அவனருகில் இடம் காலியாக இருக்கவே அங்கு சென்று அமர்ந்தாள்.

ரஞ்சனி அங்கே வரவும் முரளி அன்று போலவே இன்றும் ஹரிணியிடம் உரையாடிக் கொண்டிருந்தாலும் அடிக்கடி ரஞ்சனி பக்கம் பார்வையை செலுத்திக் கொண்டிருந்தான்.

“நீங்க ரெண்டு பேரும் ஒரே போஸ்டிங் போல” ஹரிணி கேட்க முரளி புன்னகைக்க ரஞ்சனி முறைத்தாள்.

“நீயும் பிரின்ஸ்ஸும் கூட ஒரே போஸ்டிங் தானே” முரளி பதிலுக்கு கேட்க முதலில் ப்ரின்ஸ் என்று கேட்டதும் ரஞ்சனி உற்சாகமானாள்.  

எப்போதும் பிரின்ஸ் என்று கேட்டாலே என்ன பெரிய பொல்லாத பிரின்ஸ் என்று தான் ஹரிணி கூறுவாள் அல்லது நினைக்கவாவது செய்வாள்.

அன்று அவள் அப்படி எதுவும் நினைக்கவில்லை கூறவும் இல்லை.

அன்று கோயிலில் அவன் அவளை ஹனி என்று அழைத்தது இன்னும் அவள் செவிகளில் ஒலித்தது.

யாருமே அவள் பெயரை அப்படிச் சுருக்கி அழைத்ததில்லை.

வீட்டில் அவள் விது. விதும்மா. மற்றவர்களுக்கு ஹரிணி.

அவனது அந்த அழைப்பு முதல் மழை போல, சிறு அலை போல, கோடை தென்றல் போல, முழு நிலவை போல, காலை மலரை போல, மழலை மொழியை போல ஒரு வித இதமும், பரிசுத்தமும் கலந்து அவளை வருடியது.

அன்று கோயிலில் ஹர்ஷா அவர்கள் அனைவரையும் தனி வழியில் அழைத்துச் சென்று சிறப்பு தீபாராதனை தரிசிக்க செய்தான்.

ஹரிணி இப்படி கூட்ட மிகுதியான நாட்களில் கோயிலுக்கு செல்ல எப்போதும் விரும்புவதில்லை. அதிலும் கட்டணம் செலுத்தி சிறப்பு வழிகளில் செல்ல அவள் விரும்பியதே இல்லை.

அவளுக்கு எப்போதும் கடவுளிடம் வேண்டிக் கொள்ள ஒன்றும் இருந்தது இல்லை.

“சாமிகிட்ட என்ன வேண்டிகிட்ட அக்கா” தங்கைகள் கேட்கும் போது வெறுமனே சிரித்து வைப்பாள்.

“ஐயோ வேண்டினது எல்லாம் வெளில சொன்னா பலிக்காது” ப்ரீத்தி துணைக்கு வருவாள்.

சிறுவயதில் ரேடியோவில் கேட்ட பாடல் வரி ஒன்று  அவள் மனதில் அழப் பதிந்து போயிருந்தது.

“உனக்கும் கீழே உள்ளவர் கோடி. நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு” என்ற கண்ணதாசன் வரிகள் தாம் அவை.

அடுத்த வேளை உணவிற்கே வழியில்லாமல் இருக்கும் பல லட்சம் சிறு குழந்தைகள் வாடும் போது, அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்ற அச்சத்தில் பல லட்சம் மக்கள் வாழும் போது  தனக்கு கிடைத்திருக்கும், கிடைத்துக் கொண்டிருக்கும் எல்லாமே பொக்கிஷமாக தான் ஹரிணிக்குத் தெரிந்தது.

அதுவும் முதலாம் ஆண்டில் லேபில் ஹர்ஷா அவளது ரத்தப் பிரிவை பரிசோதித்த போது முதலில் அதிர்ச்சி அடைந்தவள் அது தவறாக இருக்கக் கூடும் என்றே நினைத்தாள்.

ஆனால் அவள் மனம் மீண்டும் மீண்டும் அதிலேயே சுற்றிக் கொண்டிருந்தது.

பிசிலயாஜி வகுப்பில் ரத்தப் பிரிவுகள், அது எவ்வாறு தீர்மானிக்கப் படுகின்றன என்று படித்தது மட்டுமல்லாமல் ஏதோ ஓர் உள்ளுணர்வு அவளை அச்சுறுத்தியது.

வெளியில் ஓர் லேபில் தனது ரத்தப் பிரிவை மீண்டும் பரிசோதனை செய்து கொண்டாள்.

ஹர்ஷா சரியாக தான் கண்டுபிடித்து சொல்லியிருந்தான்.

விடுமுறை விட்டதும் ஊருக்குச் சென்றவள் அன்னையும் தங்கைகளும் பள்ளிக்குச் சென்றிருக்க தந்தை உறக்கத்தில் ஆழ்ந்திருக்க பரணில் இருந்த பழைய ட்ரங்க் பெட்டியைத் திறந்தாள்.

அதில் முக்கியமான ஏடுகள், சான்றிதழ்கள் என்று நிறைய இருந்தன.

எல்லாவற்றையும் புரட்டிக் கொண்டிருந்தவள் கண்ணில் பட்டது அந்த காகிதங்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.