(Reading time: 18 - 35 minutes)

டாகுமன்ட்ஸ் ஆப் லீகல் அடாப்ஷன் என்று இருந்தது. ஹரிணிக்கு மயக்கம் வரும் போல இருந்தது. ஒரு வித பயபந்து வயற்றில் சுழன்றது. ஒரு புறம் மனம் வேண்டாம் அதை பார்க்காதே என்று தடுத்து நிறுத்த கைகள் தாமாக அந்த காகித கற்றைப் பிரிக்க அதில் இருந்த தகவல்களை கண்கள் படம் பிடித்து மூளைக்கு அனுப்ப மூளையோ அதை ஏற்க மறுத்து மரத்துப் போய்க் கொண்டிருந்தது.

பாரதி, ஜெயராஜன் தம்பதி பச்சிளம் பெண் குழந்தையை தத்தெடுத்து இருந்தனர். ஹரிணி பிறந்த மாதம், ஆண்டில் அவள் பிறந்த நாளில் இருந்து ஒரு வாரம் கழித்து அடாப்ஷன் தேதி இருந்தது.

குழந்தையின் பெயர் வைதேகி என்று இருந்தது.

அப்படியும் மனம் நம்ப மறுத்தது. குழந்தையின் பர்த் மார்க்ஸ் என்று குறிப்பிட்டு இருந்ததைப் பார்த்ததும் அவள் முதுகுத் தண்டில் ஓர் சிலீர் உணர்வு.

அப்படியே  சத்தமில்லாமல் பெட்டியைப் பூட்டி வைத்தாள். ஆனால் அவளுக்குள் மிகப் பெரிய பூகம்பம் வெடித்துக் கொண்டிருந்தது.

“கேட்டுவிடலாமா அம்மாவிடம். எப்படி கேட்பது. நான் உங்க பொண்ணு இல்லையா என்று கேட்பதா” அவள் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

ரூமில் இருந்து வெளியில் வந்தவள் ஹாலில் அமர்ந்தாள். அங்கே பத்திரிக்கைகள் சில இருக்க மனதை திசை திருப்பப் புரட்டினாள்.

புத்தகம் வாசிப்பது என்றால் உலகையே மறந்து விடக் கூடியவள், சிறு துணுக்கையும் விடாமல் படிப்பவள் மனம் அன்று எல்லாவற்றையும் மறுத்தது.

இருப்பினும் அந்தப் படம் கண்ணில் பட்டது.  கண்ணன் யசோதை படம் அது.

“பெற்றவள் தேவகி தான். ஆனால் அவன் யசோதை மைந்தன் அல்லவா. என்னைப் பெற்றவள் யாரோ ஆனால் நான் பாரதியின் பெண் தானே. எனக்கு அம்மா தான் அம்மா. வேறு யாரும் அம்மா இல்லை” இந்த உறுதி எல்லாம் இந்த விழிகளுக்கு கொஞ்சமாவது இருக்கிறதா என்ன. அவை பாட்டுக்கு அழுது கரைந்து கொண்டிருக்கின்றன.

ன்று விடுமுறை தினம். தங்கைகளை வீட்டுப்பாடம் செய்ய வைத்துக் கொண்டிருந்தாள். பாரதி சமையல் செய்து கொண்டிருந்தார்.

“என் அம்மா ரொம்ப அழகு” எப்போதாவது அன்னையைக் கட்டிக் கொண்டு செல்லம் கொஞ்சுவாள் ஹரிணி.

ஹாலில் அமர்ந்திருந்தவாறே அன்னையின் பக்கவாட்டுத் தோற்றத்தைப் பார்த்தவள் அப்போதும் அம்மா எவ்வளவு அழகு என்றே நினைத்தாள்.

உடனேயே எதிரிலே அமர்ந்திருந்த தங்கைகளின் முகத்தில் அன்னையின் சாயல் படர்ந்து இருப்பது போல அவளுக்கு தோன்றியது.

சட்டென எழுந்தவள் நேராக கண்ணாடி முன் நின்று தன் முகம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அம்மா இன்னிக்கு மழை வர போகுது” வரூதினி சத்தமாக கூறினாள்.

“ஆமாம்மா மழை வர போகுது விதுக்கா கண்ணாடி முன்னாடி அழகு பார்க்குறா” ப்ரீத்தி உடன் சேர்ந்து ராகம் பாடினாள்.

ஹரிணி செவிகளில் ஒலிக்க அவசரமாக சென்று தண்ணீரை எடுத்து கண்களில் அடித்தாள்.

“விதும்மா என்னடா ஆச்சு” சிவந்து போயிருந்த மகளின் கண்களை கண்டு பாரதி பதறினார்.

“ஒண்ணுமில்ல மா. ஏதோ தூசி போயிருச்சு போல. உறுத்திட்டே இருந்ததா. அதான் கண்ணாடியில் பார்த்தேன். ஒண்ணுமில்லை. கொஞ்சம் கசக்கிட்டேன். அதான் சிவந்து போச்சு” சமாளித்தாள்.

ஆம் உறுத்திக் கொண்டிருந்ததால் தான் தன் வதனத்தில் யார் சாயல் தெரிகிறது என்று தேடியது மனம்.

எப்போது விடுமுறை முடியும் எப்போது கல்லூரி செல்வோம் என்று இருந்தாள்.

ஏற்கனவே  தான் உண்டு தன் வேலை உண்டு என்று தனிமையையே எப்போதும் விரும்புபவள் இன்னும் ஓட்டில் சுருண்டு கொண்ட நத்தையாய் ஆகிப் போனாள்.

ஹர்ஷவர்தனைப் பார்க்கும் போதெல்லாம் அவன் மேல் கோபமும் வந்தது.

“இவன் கண்டுபிடித்து சொல்லியிருக்கவில்லை என்றால் எனக்கு தெரியாமலே போயிருக்கும்” என்று அவன் மீது பழி போட்டாள்.

“நீ ஒரு மெடிகல் ஸ்டுடன்ட். இன்னிக்கு இல்லைனா நாளைக்கு எப்படியும் தெரிந்திருக்க தான் போகுது” உடனே அவள் அறிவு அவளை அதட்டியது.

ஹர்ஷாவிடம் அன்று கொட்டித் தீர்க்கும் வரை தனக்குள்ளேயே ரகசியமாய் பூட்டி வைத்தாள்.  

அவனிடம் அனைத்தையும் இறக்கி வைத்த பின் அவள் மனம் சற்று லேசாகி போயிருந்தது என்னவோ உண்மை தான். இருப்பினும் ஓர் ஓரத்தில் அவன் தன்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருப்பான் என்று தோன்றாமல் இல்லை. அவளால் ஏனோ அதை முழுவதுமாக அலட்சியப் படுத்தவும் முடியவில்லை.

அதற்கு பிறகு கோயிலில் தான் அவனைப் பார்த்தாள். அவளைப் பார்த்து பெரிதாக அவன் புன்னகைக்கவும் அவள் மனம் அமைதியை தழுவியது. அவன் ஹனி என்று அவள் செவிகளின் அருகே அவளை அழைத்த போது ஏனோ அவன் இருக்கிறான் இனி என்பது போன்ற ஓர் உணர்வு அவளுக்குள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.