(Reading time: 18 - 35 minutes)

சீனு இங்க அப்பளம் குடு” முரளி மெஸ்ஸில் பணிபுரிந்த சிறுவனிடம் கூறினான்.

ஹர்ஷா பற்றி நினைத்துக் கொண்டிருந்தவள் சட்டென நனவுக்கு வந்தாள்.

“இவன் தான் ஆல் இன் ஆல் இங்க. லேட் ஆகிருச்சா சாப்பாடு எடுத்து வைக்கணுமா எல்லாம் சீனு தான்” முரளி சீனுவை ஹரிணி ரஞ்சனியிடம் அறிமுகம் செய்து வைத்தான்.

இருவரும் புன்னகைக்க பதிலுக்கு அவசரமாய் புன்னகை செய்தவன் அப்பளத்தை வைத்து விட்டு வெளியில் ஓடிச் சென்றான்.

“பிரின்ஸ் கார்னர் ரூம்க்கு ஷிப்ட் ஆகுறான்ல. அதான் ஆள் எல்லாம் வந்திருக்காங்க. ரூமே டோடல் ரீமாடல் ஆகுது” முரளி சொல்ல ரஞ்சனி இப்போது சுவாரசியமானாள்.

“அந்த ரூம்ல பிரின்ஸ் தான் ஷிப்ட் ஆகுறனா. ரூம் மேட் யாரு” முரளியிடம் அவள் கேட்டாள்.

முரளியோ சொல்ல மாட்டேன் என்று போக்கு காட்ட ரஞ்சனி அவனைக் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

“சிவஷங்கர் தான் ரூம்மேட்” முரளி ஒரு வழியாக சொல்லிவிட்டான்.

“அவன் வீடு அடுத்த தெருவில தானே இருக்கு. அவனுக்கு எதுக்கு இங்க ரூம்” ரஞ்சனி சந்தேகம் கேட்டாள்.

சிவஷங்கர் டேஸ் ஸ்காலர். அதுவும் மிக அருகாமையில் இருந்தது அவனது வீடு. பொதுவாக டேஸ் ஸ்காலர் மாணவர்களும் பயிற்சி காலத்தில் விடுதியில் அறை எடுத்துக் கொள்வது வழக்கம்.

இரவு முழுக்க பணியில் இருந்த பிறகு ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் நடுவில் இடைவேளை கிடைக்கும். அப்போது வந்து குளித்து, ரிப்ரெஷ் செய்து கொள்ள விடுதியில் அறை தேவையாக இருக்கும்.

ஆனால் சிவஷங்கர்க்கோ விடுதிக்கு வருவதை விட வீட்டுக்கு செல்வது இன்னும் பக்கம் என்பதாலேயே ரஞ்சனி அவ்வறு கேட்டாள்.

“பேருக்கு சிவா ரூம்மேட் அவன் அங்க இருக்க போவதில்லை. சோ பிரின்ஸ்க்கு தான் மொத்த அறையும்” முரளி இப்போது சொல்ல ஹரிணிக்கு இத்தனை நாளாய் அவன் மேல் வாராமல் இருந்த கோபம் வெளியில் எட்டிப் பார்த்தது.

அவன் தனது பணம் அந்தஸ்து இவற்றைப் பயன்படுத்தி செய்யும் செயல்கள் யாவையும் அவளுக்கு கோபத்தை உண்டு பண்ணியது தான்.

சாப்பிட்டு முடித்தவுடனும் மெஸ்ஸில் முரளியோடு அரட்டை அடித்துக் கொண்டிருந்த போது சீனு முகம் நிறைய சிரிப்போடு வந்தான்.

அவன் கையில் பெரிய பை வேறு இருந்தது.

“முரளி சார். பிரின்ஸ் உங்களை தான் கேட்டாங்க. நீங்க எங்க இருக்கீங்கன்னு” சொல்லிவிட்டு சென்றான்.

அங்கிருந்து விடை பெற்று பெண்கள் இருவரும் தங்கள் அறைக்கு வந்து சேர்ந்தனர்.

ன்று பயிற்சியின் முதல் நாள்.

ஹரிணி ஹர்ஷா ஹேமந்த் ஹேமா நால்வரும் எமர்ஜன்சி துறைத் தலைவர் டாக்டர் பாண்டிதுரையிடம் ரிபோர்ட் செய்தனர்.

அவருக்கு டெரர், கடுவன் பூனை, ஓன் மேன் ஆர்மி என்றெல்லாம் சீனியர்கள் பட்டப் பெயர் வைத்திருந்தனர்.

அவர்கள் நால்வரையும் நிற்க வைத்து பெயரைக் கேட்டறிந்தார்.

“பைனல் இயர் முடிஞ்சது, கோட் போட்டு ஸ்டேதேஸ்கோப் மாட்டி டாக்டரா இந்த எமர்ஜன்சில வலம் வரலாம்னு கற்பனை ஏதாச்சும் செய்திருந்தா உடனே அந்த கற்பனை எல்லாத்தையும் அழிச்சிடுங்க. அடுத்த மூணு மாசத்திற்கு இங்க நீங்க டாக்டர் இல்ல. சளைக்காம உழைக்கிற கழுதை, இரவு நேரமும் விழித்திருக்கும் ஆந்தை, சாப்பாடு தண்ணீர் என்று எதுவும் கேட்காமல் வேலை செய்யும் ஒட்டகம், பேஷன்ட் தவிர வேற எதுவும் கண்ணுக்கு தெரியாத குதிரை. இங்க என்னோட ப்ரோடோகால்ஸ் படி தான் நடக்கணும்”

அவர் சொல்லவும் நால்வரும் பலமாக தலையை ஆட்டினர்.

“அவர் திட்டுறதை எல்லாம் கேட்டும் எதையும் தாங்கும் எருமையா இருக்கணும் முக்கியமா” அங்கிருந்து வெளியே வந்ததும் சீனியர் பயிற்சி மருத்துவர் இவர்களிடம் கூறி விட்டு சென்றார்.

“ஹர்ஷா ஹரிணி பாய்சன் பகுதியில் உங்க டியூட்டி. ஹேமந்த் ஹேமாமாலினி நீங்க மெடிகல் எமர்ஜன்சி போங்க” எமர்ஜன்சி துறை மருத்துவர் சுரேஷ் அவர்களுக்கு பணி பிரித்தளித்தார்.

ஹர்ஷாவும் ஹரிணியும் பாய்சன் பகுதியில் நுழைய அங்கிருந்த நர்ஸ் மற்றும் மற்ற பணியாளர்கள் ஹர்ஷாவை சுட்டிக் காட்டி பிரின்ஸ் என்று சலசலத்துக் கொண்டது ஹரிணியின் காதில் விழுந்தது.

பாய்சன் பிரிவில் வரிசையாக நிறைய நோயாளிகள் இருந்தனர். அங்கு பொறுப்பில் இருந்த மருத்துவர் அன்புச்செல்வன் பிரியமாக வரவேற்றார்.

பெயரைப் போலவே குணமும் போல என்று மனதில் நினைத்துக் கொண்டாள் ஹரிணி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.