(Reading time: 18 - 35 minutes)

“உடலுக்கு ஒவ்வாத ஏதேனும் பொருட்களை உட்கொண்டவர்களை காப்பற்ற உடனடி சிகிச்சை இப்பிரிவில் அளிக்கப்படும். இன்று மட்டும் நீங்கள்  இருவரும் காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை பணியில் இருப்பீர்கள். பின் ஒருவர் காலை பணி மற்றொருவர் இரவு பணி என்று வர வேண்டும். வாரம் ஒரு முறை சுழற்சி என்று ஒரு மாதம் இங்கு உங்களுக்கு பணி” அவர் சொல்ல ஹர்ஷா ஹரிணி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

முதல் வாரம் ஹரிணி பகலிலும் ஹர்ஷா இரவிலும் என்று அவர்கள் அட்டவணை போடப்பட்டது.

“பொதுவாக தற்கொலை செய்து கொள்ள முயல்பவர்கள் தாம் விஷப்பொருட்களை உட்கொள்வர். சில சமயம் விபத்தாக கூட இருக்கலாம் இல்லை கொலை முயற்சியாகவும் இருக்கலாம். எனவே இந்த பிரிவு மெடிகோ லீகல் பகுதியில் வரும். அந்த படிவத்தை நர்ஸ் பூர்த்தி செய்வார்கள்”

“பாய்சன் என்றால் பூச்சி மருந்தாக இருக்கலாம், தூக்க மாத்திரைகளாக இருக்கலாம் இல்லை அரளி விதை முதலியவைகளாக இருக்கலாம்” என்று கூறி நோயாளியை எப்படி பரிசோதிக்க வேண்டும், மருந்துகள் என்னென்ன என்று எடுத்துச் சொன்னார்.

அன்றைய நாள் அனைத்தையும் அறிந்து கொள்வதில் கழிய சரியாக இரவு பணி முடியும் வேளை. பதினாறு வயது இளம் பெண் சல்போஸ் மாத்திரை (எலி மருந்து) உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றாள் என்று மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டாள்.

ஹர்ஷாவும் ஹரிணியும் டாக்டர் அன்புச்செல்வனின் வழிகாட்டுதல்களோடு விரைவாக செயல்பட்டு அந்தப் பெண்ணைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

“பொதுவாக இந்த அலுமினியம் பாஸ்பைட் உட்கொண்டவர்கள் பிழைப்பதில்லை. ஏனென்றால் இதற்கு முறிவு மருந்து எதுவும் இல்லை. எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்து பார்க்கிறோம்” உறவினர்களிடம் அவர் கூறியது ஹர்ஷா ஹரிணி இருவர் செவிகளிலும் விழுந்தது.

“இதை உட்கொண்டவர்கள் இருதய கோளாறு ஏற்பட்டே உயிரிழப்பர்” முன்பு அவர் சொன்னதும் அவர்கள் நினைவில் வந்தது.

அவர்கள் ட்ரீட் செய்யும் முதல் பேஷன்ட். எப்படியும் பிழைக்க வைத்து விட வேண்டும் என்று இருவரும் முனைப்பாக செயல்பட்டனர்.

மணி பதினொன்றை தாண்டி விட்டிருந்தது. அந்த பெண் பிழைத்துக் கொண்டாள். ஆனாலும் அடுத்த இரு தினங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்க வேண்டும். இன்னும் உறுதியாக சொல்ல முடியாது தான்.

ஐசியுவில் அந்தப் பெண்ணை ஷிப்ட் செய்து விட்டு அங்கே இருந்த மருத்துவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு திரும்ப நள்ளிரவு ஆகியிருந்தது.

இருவருக்கும் பசி வயிற்றைக் கிள்ள மருத்துவமனையில் செயல்படும் இருபத்து நான்கு மணி நேர கான்டீன் செல்லலாம் என்று ஹர்ஷா கூறினான்.

“குளிக்காமல் எப்படி சாப்பிடுவது” என்று ஹரிணி யோசிக்க அதை ஹர்ஷா படித்து விட்டவன் போல சொன்னான்.

“ஹவுஸ் சர்ஜன்ல பசி தூக்கம் எல்லாம் மறந்து போய்டணும்ன்னு சொன்னாங்க. அதோட குளிப்பதையும் மறந்திடணும் போல” அவன் சொல்ல ஹரிணி சிரித்தாள்.

அவளோடு சேர்ந்து அவனும் சிரித்தான்.

டுத்த ஒரு மாதம் எப்படி முடிவடைந்தது என்று இருவருக்குமே தெரியாத வண்ணம் அப்படி சுழன்றனர்.

முதல் நாள் தாங்கள் காப்பாற்றிய பெண்ணை யாரேனும் ஒருவர் தினம் சென்று பார்த்து விட்டு வந்தனர். பத்தாம் வகுப்பு மாடல் தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றதால் தற்கொலைக்கு முயற்சி செய்திருந்தாள்.

இன்னும் இரு வாரங்களில்  பொது தேர்வு என்ற நிலையில் மருத்துவமனையில் இருந்த அந்த பெண்ணிற்கு ஹரிணி அறிவுரைகள் கூறி தேற்றினாள். ஹர்ஷா அவளைக் காண செல்லும் போதெல்லாம் அங்கிருந்த மற்றவர் மூலம் அவன் நிஜமாகவே  ராஜகுமாரன் என்று அறிந்து கொண்ட அந்த பெண் பிரின்ஸ் டாக்டர் தன்னை பார்க்க வருகிறார் என்று கூறி மகிழ்ந்தாள்.

அந்த  பாய்சன் பிரிவில் இருவரும் பணி புரியும் இறுதி நாள். அன்று இருவரும் காலை நேரப் பணியில் தான் இருந்தனர்.

டாக்டர் அன்புச்செல்வனிடம் தங்கள் நன்றியை தெரிவித்தனர் இருவரும்.

மாலை ஆறு மணிக்கெல்லாம் இருவரும் செல்லலாம் என்று அவர் அனுமதி அளித்து விட இருவரும் கிளம்ப ஆயத்தம் செய்து கொண்டிருந்த போது அங்கே பணியில் இருந்த நர்ஸ் அவர்களை நோக்கி வந்தார்.

“டாக்டர் ஒரு ஸ்கூல் பொண்ணு உங்களை பார்க்கணும்னு வெளியில் பிடிவாதமாக இருக்கா” நர்ஸ் சொல்லவும் முதலில் ஹர்ஷா புரியமால் விழித்தான்.

“வா யாருன்னு பார்க்கலாம்” ஹரிணியும் உடன் செல்ல இரட்டை ஜடை வைத்து பின்னலிட்டு பள்ளி சீருடையில் இருந்த அந்த பெண் இருவரிடமும் சாக்லேட்டை நீட்டினாள்.

அன்று அவர்கள் காப்பாற்றிய அந்த பெண் தான். பொது தேர்வை நன்றாக எழுதி முடித்ததாக கூறி தன்னை காப்பாற்றிய இருவருக்கும் நன்றி தெரிவித்தாள்.

அந்த ஓர் மாதத்தில் அவரவர் பணி நேரத்தில் காப்பாற்றிய நோயாளிகள் பலர், முயற்சி பலனளிக்காமல் சிலர் என்று இருந்தாலும் முதன் முதலில் இருவரும் சேர்ந்து செயல்பட்டு வெறும் மருத்துவ ரீதியாக மட்டும் அவளை மீட்காமல் உணர்வுபூர்வமாக தங்கள் பணிசுமையின் நடுவில் நேரம் ஒதுக்கி அவளை மீட்டெடுத்த பலன் அவர்கள் கண் முன்.

தூக்கமற்ற இரவுகள், தவறிப்போன உணவுகள் இந்த ஒரு நொடிக்கு முன் ஒன்றுமே இல்லை என்பதான ஓர் உணர்வு. அவளுக்கு வாழ்த்து கூறிய இருவர் மனதிலும் ஓர் நிறைவு.

இந்த நிறைவுக்குத் தான் ஈடு இணையேது. இவர்கள் பணிக்குத் தான் முடிவேது.

முடிவிலியை நோக்கி ...

Episode # 08

Episode # 10

{kunena_discuss:1137}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.