(Reading time: 18 - 35 minutes)

தொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 09 - மது

AT THE END OF INFINITY

Heart

வுஸ் சர்ஜன்.

மருத்துவப்படிப்பில் மிக முக்கியமான காலகட்டம். நாலரை வருடம் படித்தது எல்லாம் செயல் வடிவம் பெறும் இந்த ஒரு வருடம்.

இத்தனை நாள் வரை க்ளினிகல் வகுப்பில் நோயாளிகளை பரிசோதனை செய்தனர். இப்போது அந்த பிணிகளை தீர்த்து அவர்கள் வலியை போக்கி அவர்கள் நலமடையச் செய்யும் பொறுப்பினை இனி வாழ்நாள் முழுக்க சுமக்க இதுவே முதல் அடி.

முதன்முதலில் கல்லூரியில் அடி எடுத்து வைத்த போது இருந்த ஒரு பெருமிதம் கூடவே ஒரு படபடப்பு எல்லோர் மனதிலும் இப்போதும்.

ஒரு வருட காலம் எல்லா துறைகளிலும் பயிற்சி இருக்கும். பயிற்சி நோயாளிகளை குணப்படுத்துவதில் மட்டும் இல்லை. இனி பசி, தாகம், தூக்கம் எல்லாம் துறப்பது எப்படி. இரவு பகல் என பகலவனின் ஆட்டத்தை வென்று எந்நேரமும் எங்களுக்கு ஒரு போல தான் என்று நிரூபிப்பது எப்படி என்பதிலும் பயிற்சி.

முன்னதாக பயிற்சி மாணவர்கள் தங்கும் விடுதிக்கு அனைவரும் இடம் மாறினர்.

ஆண்கள் விடுதி பெண்கள் விடுதி என்று இல்லாமல் ஒரே தளத்தில் அறைகள் அனைத்தும் இருந்தன.

“ரெண்டு பேருக்கு ஒரு ரூம் ஷாரிங். ரூம் சின்னதாக தான் இருக்கும் போல. என்ன தனி பாத்ரூம். சின்னதா ஒரு மேடையும் வாஷ் பேசினும் இருக்கு பின்னாடி பால்கனில. விருப்பம் உள்ளவங்க சமைத்துக் கொள்ளலாம். இல்லைனாலும் மெஸ் இருக்கு. நம்ம லேடீஸ் ஹாஸ்டல் சாப்பாட்டை விட நல்லா இருக்கும்ன்னு கேள்விப்பட்டேன்”

ரஞ்சனி தனக்கும் ஹரிணிக்கும் ஒரே ரூம் வேண்டும் என்று எழுதி கொடுத்து விட்டு வந்து அவளிடம் கூறிக் கொண்டிருந்தாள்.

“ டியூட்டி லிஸ்ட் போட்டுட்டாங்களா. எந்த எந்த டிபார்ட்மன்ட்” என்று ஹரிணி கேட்டாள்.

“மதியம் போடுவாங்க போல” ரஞ்சனி பதிலளித்தாள்.

பெண்கள் விடுதியில் இருந்து பயிற்சி மாணவர்கள் பகுதிக்கு தங்களது பொருட்களை எல்லாம் இடமாற்றம் செய்து கொண்டிருந்தனர் ஹரிணியும் ரஞ்சனியும்.

“நமக்கு இந்த கார்னர் ரூம் கிடைச்சது லக். எப்போவுமே கார்னர் ரூம் கொஞ்சம் பெருசா இருக்கும்” ரஞ்சனி மகிழ்ந்தாள்.

“ப” வடிவில் இருந்த அந்த பகுதியில்  ஒரு புறம் மாடிப்படி இருந்தது. மற்றொரு புறம் உணவு விடுதியும் அதனருகில் சிறிது திறந்த வெளி பகுதியும் இருந்தது.

மெஸ்ஸின் அருகில் ரஞ்சனி, ஹரிணியின் அறை இருந்தது. அந்த திறந்த வெளிப் பகுதியில் பழைய சாமான்களும் குப்பை தொட்டியும் என்று அடைசல் பகுதியாக இருந்தது.

“அந்த பக்கம் யாருக்கு அலாட் ஆகிருக்குனு தெரியல” ரஞ்சனியின் பார்வை அந்த பக்கம் தான் இருந்தது.

இவர்களின் அறையில் இருந்து நேரெதிர் அறையாக இருந்த பக்கம் நோக்கிப் பார்த்துக் கொண்டே ரஞ்சனி சொல்லிக் கொண்டிருந்தாள்.

“அங்க யார் இருந்தா என்ன” பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டு ஹரிணி கேட்டாள்.

இவர்கள் அறையும் அந்த எதிர் அறையும் தான் தடுப்புகள் இன்றி பார்வை வட்டத்தில் இருந்தன. இவர்கள் அறையை தொடர்ந்த பெண்கள் பகுதியின் மற்ற அறைகளின் வராண்டா பக்கம் தடுப்புகள் போடப்பட்டிருந்தன. எதிர்புறம் ஆண்கள் பகுதி இருந்தது.

இன்னும் இரண்டு நாட்களில் பயிற்சி காலம் தொடங்கவிருந்தது.

“ஹரிணி கொஞ்சம் ஷாபிங் போகலாமா” ரஞ்சனி கேட்க சரி என்று தலையாட்டினாள்.

மதிய வேளையில் லிஸ்ட் போடப்பட்டிருந்தது.

ஹரிணி, ஹர்ஷவர்தன், ஹேமந்த், ஹேமமாலினி நால்வருக்கும் எமர்ஜன்சி ரூம் அடுத்த மூன்று மாத காலத்திற்கு என்று அட்டவணை சொன்னது.

மனோரஞ்சனிக்கு குழந்தைகள் நலப் பிரிவில் அடுத்த மூன்று மாத காலம் பயிற்சி.

“பீடியாட்ரிக் ப்ரீயா தான் இருக்கும்ன்னு சீனியர்ஸ் சொன்னாங்க. வெறும் வார்ட் தானாம். எமர்ஜன்சி வாரத்தில் ஒரு நாள் தானாம். அதுவும் பி.ஜி (முதுகலை பட்ட பயிற்சி மாணவர்கள்) யாராச்சும் கூட இருப்பாங்களாம்” ரஞ்சனிக்கு சந்தோஷம்.

“உனக்கு எமர்ஜன்சியா எடுத்த உடனே. அந்த எமர்ஜன்சி ஹெட் ஒரு கடுவன் பூனையாம்ல” ரஞ்சனி ஹரிணியிடம் கூற அவளோ அலட்சியம் செய்தாள்.

“யார் எப்படி இருந்தால் என்ன நம் வேலையை ஒழுங்காக செய்தால் போதும்” என்று மனதில் நினைத்துக் கொண்டாள். 

மாலை ஷாபிங் சென்று விட்டு ஹரிணியும் ரஞ்சனியும் திரும்பிய வேளை எதிர் அறையில் பணியாட்கள் நடமாட்டம் இருந்தது.

“அங்க என்ன நிறைய பேர் இருக்காங்க” ரஞ்சனியின் பார்வை அங்கே இருக்க ஹரிணி அதட்டி உள்ளே வரச் சொல்லி கதவை அடைத்து வைத்தாள்.

தாங்கள் வாங்கிய பொருட்களை எல்லாம் அடுக்கி வைக்கத் தொடங்கினர்.

ரஞ்சனி தான் புதிய திரைச்சீலைகள், விரிப்பு என்று நிறைய வாங்கியிருந்தாள். உடைகளும் வாங்கியிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.