(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 28 - ஜெய்

Saathiram pesugiraai kanamma

ரேஷ் மருத்துவமனையிலிருந்து வந்து இரண்டு நாட்கள் கடந்த நிலையில் காவல்துறையால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவனின் ரசிகர்களின் போராட்டம் அதிக அளவில் இருந்தது.... நரேஷ் எந்தப் பிரிவில் கைது செய்யப்பட்டிருக்கிறான் என்பதை மட்டுமே காவல்துறை ஊடகம் மூலமாக வெளியிட்டது.... அவன் எதற்காக கைது செய்யப்பட்டான் என்பது ரகசியமாகவே வைக்கப்பட்டது... 

பிணையில் வெளிவர முடியாத பிரிவு என்பதால் நரேஷின் மாமனாராலும்  தன் செல்வாக்கை பயன்படுத்தி அவனை வெளியில் எடுக்க முடியவில்லை.  அவன் கைதான இரண்டாவது நாளில் நரேஷின் அனைத்து இடங்களிலும் அமலாக்கத் துறையினர் சோதனை செய்ய நுழைந்தனர்...

ஏற்கனவே மதி அமலாக்கப் பிரிவினருக்கு நரேஷ் எங்கு ஆவணங்களை மறைத்து வைத்துள்ளான் என்று கூறியிருந்ததால் அவர்களுக்கு எடுக்க மிக சுலபமாக இருந்தது...

பண்ணை வீட்டை சோதனை செய்ய ஆரம்பித்த அமலாக்கப்பிரிவினர் சிறிது நேரத்திலேயே அவனின் படுக்கையறை முழுவதையும் ஆராய்ந்து முடித்தனர்... படுக்கையறை மட்டுமல்லாது இன்னும் இரண்டு இடங்களிலும் ரகசிய அறைகள் இருக்க அனைத்திலும் இருந்து அவர்களுக்கு கிடைத்த ஆதாரங்களைப் பார்த்த அதிகாரிகள் இவன் மனிதனா இல்லை மிருகமா என்ற கொதிநிலைக்கு சென்றார்கள்....

வெளியிலிருந்து நரேஷை அவன் வக்கீல் தவிர யாராலும் தொடர்பு கொள்ள முடியாததால் அவன் மனைவியின் பாடு படு திண்டாட்டமாகியது.... ஊடகத்துறையினர் நரேஷின் மனைவி எங்கு சென்றாலும் அவள் பின்னோடு சென்று கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.... அவளை மட்டும் அல்லாது நரேஷின் மேனேஜர், வீட்டில் வேலை செய்யும் ஆட்கள் வரை யாரையும் விடவில்லை...

ஊடகத்துறை அமலாக்கப்பிரிவு சென்ற இடங்களில் வாயிலிலேயே நின்று தங்களுக்கு ஏதேனும் தீனி கிடைக்குமா என்று பார்க்க, அதிகாரிகள் தங்களுக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளதாக மட்டுமே கூறி அவனின் பண்ணை வீட்டை சீல் வைத்து சென்றுவிட்டார்கள்...

நரேஷ் வீட்டின் சோதனை முடிந்த இரண்டாம் நாள் காலையில் சமூக வலைத்தளங்களில் நரேஷின் மற்றொரு பக்கம் என்ற பெயரில் இரண்டு நிமிட காணொளி ஒன்று வைரலாக பரவ ஆரம்பித்தது...

அதில் நரேஷ் ஒரு சிறு பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்வது சிறு சிறு பகுதிகளாக தொகுக்கப்பட்டிருந்தது...

அந்தக் காணொளி வந்த சில நிமிட நேரத்தில் அவனுக்காக போராடியவர்கள் சிறிது சிறிதாக தங்கள் போராட்டத்தைக் குறைத்துக் கொண்டார்கள்.... அந்தக் காணொளியைக் கண்ட நரேஷின் மனைவி அதிர்ச்சியில் மயங்கி விழுந்தாள்...

நரேஷ் துணை நடிகைக்கு கொடுத்த தொல்லை, வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்தது என்ற அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டு இக்குற்றமே அதிகம் பேசப்பட்டது.... சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் அவன் படத்தைப் போட்டு கிழி கிழியென்று கிழித்தார்கள்.... மகளிர் அமைப்புகளும், குழந்தைகள் நல அமைப்புகளும் பொங்கி எழுந்து போராட்டம் செய்ய காவல்துறைக்கு முழு நேரப் பணி ஆரம்பமாகியது....

நரேஷின் வக்கீல் வேண்டுமென்றே யாரோ அவனின் பெயரைக் குலைக்க இதுபோல் போலி வீடியோ தயாரித்து வெளியிட்டுள்ளதாக ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க... அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் செய்திகள் கசிய ஆரம்பித்தன.... ஆக மொத்தம் ஹீரோவாக திரையிலகில் வலம் வந்த நரேஷ் இரண்டு நிமிட வீடியோவால் ஒரே நாளில் ஜீரோவாக மாறிப்போனான்...

இதற்கு நடுவில் வீடியோ வெளியிட்ட நபர் மேலும் இதுபோல் பல காணொளிகள் இருப்பதாகவும், ஒவ்வொன்றாக வெளியிடப்போவதாகவும் அறிக்கை விட மக்களிடம் பரபரப்பு தொற்றிக்கொண்டது......

“ஏம்மா சரோஜா... என்னம்மா இதெல்லாம்... மாப்பிள்ளை மேல அடுக்கடுக்கா புகார் வந்துட்டே இருக்கு.. இந்தப் பூனையும் பால் குடிக்குமா அப்படிங்கறா மாதிரி நம்மக்கிட்ட பம்மிட்டு வெளில இந்த களவாணித்தனம் பண்ணி வச்சிருக்கான்.... என்கிட்டே முன்னாடியே சொல்லி இருக்க மாட்டியா....”

“எனக்கே அந்த மனுஷனைப் பத்தி இப்போதானேப்பா தெரியுது.... அந்தாள் கூட இத்தனை வருஷமா குடும்பம் நடத்தி இருக்கேன்... அந்தப் பண்ணை வீட்டுல இப்படி ஒரு ரகசிய இடம் இருக்கு... அங்க இந்த மாதிரி மோசமான வேலையெல்லாம் இந்தாள் பண்ணி இருப்பான்னு நம்பவே முடியலைப்பா.... இன்னுமே எனக்கு சந்தேகமாத்தான் இருக்கு.... நீங்க எதுக்கும் அன்னைக்கு சோதனைக்கு வந்தாங்களே அந்த அதிகாரிகளை பார்த்து பேசறீங்களாப்பா...”

“அவங்களை எல்லாம் நேர்ல பார்த்து பேச முடியாதும்மா... எதுன்னாலும் வக்கீல் மூலமாத்தான் பேசணும்... அதுவும் மாப்பிள்ளையை மட்டும்தான் அவங்க பார்ப்பாங்க... இங்க வீட்டுல எடுத்த சில டாகுமென்ட்ஸ்ல மட்டும்தான் உன் பேரும் சேர்ந்து இருக்கு.... நிறைய சொத்து அவன் பேருல மட்டுமே வாங்கி இருக்கான்.... உன் பேருல வாங்கினது எல்லாத்துக்கும் வருமான வரி ஒழுங்கா கட்டி இருக்கான்... நல்லவேளை நீ தப்பிச்சுட்ட...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.