(Reading time: 9 - 17 minutes)

20. பொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்

PEPPV

லைவாணியின் அணைப்பில் கட்டுண்டு இருந்தவளிடம் மேற்கொண்டு எதுவும் தோண்டித்துருவிடவில்லை அவர்…

ரஞ்சித்திற்கான இறுதி சடங்குகள் அனைத்தும் முடியும் வரை உடனிருந்தாள் சந்தா…

அவனது உயிரற்ற உடலை பஞ்சபூதங்களிடம் சமர்ப்பித்துவிட்டு ப்ரசனும், ப்ரசனின் தந்தையும் வீடு வந்து சேர்கையில், ஜாக்குலினை அழைத்து சடங்குகள் செய்ய எண்ணினர் அங்கிருந்த உறவினர்கள்…

சந்தாவிற்கு அதனைப் பார்த்திடுகையில் தனக்கு செய்திட்டது நினைவு வந்திட, ப்ரசனின் அருகில் வந்தாள் அவள்…

கவலையில் ஆழ்ந்திருந்த அவன் முகத்தினை சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தவள், பின், தைரியம் பெற்றவளாக, “உங்ககிட்ட ஒன்னு சொல்லலாமா?.. தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?...” என நிறுத்திட,

அவன், “சொல்லுங்க…” என்றான் தன்னுடைய குரலை வரவழைத்துக்கொண்டு…

அந்த ஒற்றை வார்த்தையிலேயே அறிந்து கொண்டாள் அவள் அவனின் துக்கத்தினை…

“ஜாக்குலின் ரொம்ப சின்னப்பொண்ணு…” என சொல்லிக்கொண்டிருக்கையிலே, ஜாக்குலினை கைத்தாங்கலாக அங்கிருந்தவர்களின் பார்வைக்கு மத்தியில் அமர வைத்த உறவினர்களின் செய்கைகளைக் கண்டு புருவம் சுருக்கினான் ப்ரசன்…

“ஒரு நிமிஷம்…..” என அவளிடம் சொல்லிக்கொண்டு சென்றவன், நேரே அவர்களின் முன் சென்று,

“என்ன நடக்குது இங்க?...” என கோபமாக வினவிட, அவனின் சத்தம் கேட்டு தலைசாய்த்து அழுது கொண்டிருந்த கலைவாணியும் நிமிர்ந்திட, ப்ரசனின் தந்தையும் அவ்விடம் வந்தார்…

“என்ன தம்பி கேள்வி இது?... செய்ய வேண்டிய சடங்கு சம்பிரதாயம் எல்லாம் செய்ய வேண்டாமா?..”

அவர்கள் கேட்ட மாத்திரத்தில், “மண்ணாங்கட்டி….” என வெடித்தான் அவன்…

“ஊருல உலகத்துல செய்யாத சம்பிரதாயம் மாதிரில்ல கோபப்படுறீங்க?...”

வந்திருந்தவர்களில் ஒருத்தி முகத்தினை வெட்டிக்கொள்ள,

“எந்த சம்பிரதாயமும் என் தங்கச்சிக்கு செய்யணும்னு உங்க யாரையும் வெத்தலை பாக்கு வச்சு நான் அழைக்கலை…”

“என்ன தம்பி பேச்செல்லாம் ஒரு மாதிரி வருது?...”

“இதுக்கு மேலயும் இங்க நின்னு அத செய்யப்போறேன் இத செய்யப்போறேன்னு சொன்னீங்க, அப்புறம் பேச்சுக்கே இடமிருக்காது சொல்லிட்டேன்…”

“அட என்ன தம்பி நீங்க… விவரம் புரியாம பேசிகிட்டு… புருஷனை மொத்தமா தூக்கி கொடுத்திட்டா… அப்போ அவளுக்கு செய்ய வேண்டியதை செய்யாம எப்படி இருக்க முடியும்?... அவ வச்சிருக்குற பூ, பொட்டு, தாலிக்கு சொந்தக்காரன் தான் மண்ணுக்குள்ள போயிட்டானே… இனியும் என்ன இருக்கு அவளை அலங்காரத்துலயே வச்சிருக்க?...” என்றாள் இன்னொருத்தி இழுத்து பேசிய வண்ணம்…

அவள் பேசி முடித்தது தான் தாமதம், “அட சீ வெளியே போங்க….” என்று கர்ஜித்தான் ப்ரசன்…

“என்ன கலைவாணி… உன் பையன் அத்தனை பேர் முன்னாடியும் என்னை அவமானப்படுத்தி வெளிய போன்னு சொல்லுறான்… நீ பாட்டுக்கு எல்லாத்தையும் கேட்டுட்டு குத்துக்கல்லாட்டம் நின்னுட்டிருக்குற?...”

அவள் கலைவாணியிடம் குறைகூறி நீலிகண்ணீர் வடித்திட,

“அவன் கேட்டதுல என்ன தப்பு?...” என்றார் கலைவாணியும்…

கலைவாணியின் வார்த்தைகளில் அதிர்ந்து போய் நின்றவளிடம்,

“நீங்க எல்லாரும் பொம்பளைங்களா?... கொஞ்சம் கூட மனசுல ஈவு இரக்கம் இல்லாம, இப்படி சின்னப்பொண்ணை, அத்தனை பேர் மத்தியிலும் வச்சி, அவளை அலங்கோலப்படுத்த நினைக்குறீங்களே… நீங்க எல்லாரும் மனுஷ ஜென்மங்க தானா?...”

“என்னடி விட்டா ரொம்பத்தான் பேசுற?... ஊருல உலகத்துல இல்லாததையா நாங்க செய்ய நினைச்ச மாதிரி இந்த குதி குதிக்குற?... உன் மருமக வந்து ஒரு வருஷத்துக்குள்ள உன் பையனை தூக்கி கொடுத்துட்டா… அது பெரிசா தெரியலை உனக்கு?... இதுல என்ன பேச வந்துட்டா?...”

“அட சீ… வாயை மூடுங்கடி… நாக்கு இருக்குன்னு இஷ்டத்துக்கு பேசிட்டிருந்தீங்க, அப்புறம் அது இல்லாம போயிடும்… ஜாக்கிரதை...”

“யாரைப் பார்த்துடி ஜாக்கிரதைன்னு சொல்லுற?... இவ என்னைக்கு காலடி எடுத்து வச்சாலோ, அன்னையில இருந்து தான் உன் குடும்பத்துக்கு கிரகமே… இதுல அவ வந்த நேரமே ஆட்டிப்படைச்சது போதாதுன்னு இப்போ அவ வயித்துல கரு உருவான நேரத்துலயே சொந்த அப்பனையே அது முழுங்கிட்டு… புள்ளையா அது… எப்பா…. முதல்ல அதுக்கு ஒரு வழியை உண்டாக்கு… அப்போ தான் உன் குடும்பம் வரப்போற ஆபத்துல இருந்து பத்திரப்படுத்த முடியும்… அத விட்டு என்னை ஜாக்கிரதைன்னு சொல்லுற வேலை எல்லாம் வச்சிக்காத?... அப்புறம் அது இன்னும் உன் குடும்பத்தையே காவு வாங்கினாலும் வாங்கிடும்… அத முத அழி…”

சொல்லிமுடித்திடுகையில், பளீரென்று அவளது கன்னத்தில் அறை விழு, கன்னத்தைப் பிடித்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்திட, அவளின் முன் கோப கனலாய் கண்களில் துளிர்த்த நீருடன் நின்றிருந்தாள் சந்தா…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.