(Reading time: 9 - 17 minutes)

அவள் செய்த செயல் கண்டு யாருமே அவளை கோபித்திடவில்லை… மாறாக சற்று ஆறுதலே அடைந்திட்டனர்…

“ராட்சஷக் கூட்டத்துல கூட தான் இனம் துன்பப்பட்டா, அதுக்கு உதவ ஆட்கள் உண்டு… ஆனா, கேவலம் இந்த மனுஷ இனத்துல தான், அடுத்தவங்க துன்பத்துல இன்பத்துல பார்க்குற கொடூரமும் நடக்குது… சீ… ஒரு பொண்ணா இருந்துட்டு, இன்னொரு பொண்ணுக்கு இப்படி அவ வயித்துல ஒரு சிசுவை சுமந்திட்டிருக்கும்போது கூட உங்க சடங்கையும் சம்பிரதாயங்களையும் நிறைவேத்தணும்னு நினைக்குறீங்களே… உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா?... தாலி கொடுத்தான், பூ கொடுத்தான், பொட்டு கொடுத்தான்னு சொல்லுறீங்களே, அவன் தான இப்போ அவ வயித்துல வளருற உயிரையும் கொடுத்தான்… செத்துப்போன மகன் தன் வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு வயித்துல மறுபடியும் பிறக்கப்போறான்னு அந்த குடும்பமே அந்த சிசுவை வைச்சு ஆறுதல் அடைஞ்சிட்டிருக்கு… அதை அழின்னு வாய் கூசாம சொல்லுறீங்களே, நீங்களும் ஒரு புள்ளையை பெத்தெடுத்த பொம்பளைதானா?... சீ…” என முகத்தில் வெறுப்பை உமிழ்ந்தவள்,

“இல்ல தெரியாம தான் கேட்குறேன்… புருஷன் செத்துட்டா, அவனை மண்ணுக்குள்ள புதைச்ச கையோடு, அவன் சம்பந்தப்பட்ட அத்தனையையும் புதைக்கணும்னு எதும் சட்டம் இருக்கா?... சரி… அப்படின்னா, அவன் செத்த கையோட, அந்த பொண்ணுக்கு இன்னொரு மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் பண்ணி வைங்களேன் பார்ப்போம்?... முடியாதுல்ல… அதுக்கு உங்க சம்பிரதாயமும், சாஸ்திரமும் இடம் கொடுக்காதுல்ல… அவனையும் புதைச்சு, அவன் கொடுத்த தாலி, பூ, பொட்டு அத்தனையையும் தொலைச்சு அவ தனி மரமா இந்த சமூகத்துல வாழுறான்ற பேர்ல அணுதினமும் சித்திரவதை அனுபவிக்கிறதை கூட ஏத்துப்பீங்க… ஆனா, அவளுக்கு ஆறுதலா ஒரு நாலு வார்த்தை சொல்ல யாரும் இடம் கொடுக்க மாட்டீங்க இல்ல?... புருஷன் செத்த துக்கத்துல பாதி செத்துப்போனவ, மீதி உசுரை, வயித்துல இருக்குற பிள்ளைக்காக இழுத்துப் பிடிச்சு வச்சா, அவ காதுபடவே ஒரு பாவமும் அறியா அந்த சிசுவை கொல்லணும்னு சொல்லுறீங்களே… ஏற்கனவே வாழணும்ன்ற பிடிப்பு இல்லாம, பிள்ளையை வச்சு பிடிப்பு தேட நினைக்குறவளையும் ஒரேடியா கொன்னுடுவீங்க போலயே… இதுக்கு முன்னாடி காலத்துல இருந்த மாதிரி புருஷன் செத்த உடனேயே, அவளை தூக்கி அதே சிதையில வச்சி எரிச்சிட வேண்டியதுதான?... உசுரோட. கணவனை இழந்த பொண்ணை இப்படி அத்தனை பேர் மத்தியிலும் வச்சு கொடுமை பண்ணி, வீட்டை விட்டு வெளியே போகும்போதெல்லாம், நாலு பேர் அவளை சகுணத்தடையா பார்க்குற அவலத்தை ஏற்படுத்தி, நாற்பது பேர், அவளை பார்க்குற கண்ணோட்டத்தை மாறுபடுத்தி, நாலாயிரம் பேர் அவளை விதவை விதவைன்னு சமூகத்துல அவளுக்குன்னு ஒரு அடையாளமா இதோ இப்படி ஒரு கோலத்தை கொடுத்து…” என்றவள் தன்னையே கைகளால் அடையாளம் காண்பித்தபடி,

“இன்னும் நாலு இலட்சம் இல்ல கோடி வருஷம் ஆனாலும், இதுதாண்டி உன் நிலைமைன்னு சொல்லி சொல்லிக்காட்டுறீங்களே… இதுக்கு அந்த சதி தண்டனையே மேல்…. புருஷன் எரிஞ்ச சிதையிலயே செத்துட்டா, இத்தனை பேச்சுக்களுக்கும், இத்தனை பேரோட்டங்களுக்கும் மத்தியில அவ வாழ வேண்டியது வராது பாருங்க… சில நிமிஷ நெருப்புல துடிச்சாலும் உசுர் புருஷனோடவே போயிடுமே… இப்படி வார்த்தையில நெருப்பு வச்சு வச்சு, அவளை உசுரோட அணுதினமும் சாகடிக்கிறீங்களே… ஏன்?.... ஏன்?....” என கூறியவளாய், கண்ணீர் மல்க தரையில் சாய்ந்திட, அவளை ஓடி வந்து மடி தாங்கிக்கொண்டார் கலைவாணி…

அவள் பேசியதைக் கேட்டவர்கள், பேச வாய் வராது, தொண்டை அடைத்திட, அவ்விடத்தை விட்டு மௌனமாக அகன்றிட, சற்று நேரத்திலேயே கூட்டம் கலைந்து அங்கு ப்ரசனின் குடும்பத்தினர் மட்டுமே இருந்திட்டனர்…

கலைவாணியின் மடியில் சிறிது நேரம் படுத்திருந்து தன் கண்ணீரை வெளிப்படுத்தியவள், பின் இருக்கும் இடம் உணர்ந்து மெல்ல எழுந்து கொண்டாள்…

அழுந்த துடைத்த முகத்துடன், “மன்னிச்சிடுங்க… என்ன இருந்தாலும் நான் உங்க குடும்பத்துக்கு சம்பந்தம் இல்லாதவ… நான் இப்படி பேசுவேன்னு நானே எதிர்பார்க்கலை… ஆனாலும் ஜாக்குலினைப் பார்க்குறப்போ எனக்கு என்னைப் பார்க்குற மாதிரியே இருக்குது… என்ன ஒன்னு… அவளுக்கு குழந்தை இருக்கு… எனக்கு இல்லை… அவளுக்கு அது ஒன்னாவது பிடிமானமா இருக்கேன்னு நான் நிம்மதி பட்டா, அதை அவங்க இல்லாம பண்ணிடுவாங்க போல… அதான் என்னால தாங்கிக்க முடியலை…”

அவள் மன்னிப்பு கேட்டிட, “நீ என்னம்மா தப்பு பண்ணின?.. மன்னிப்பு கேட்குறதுக்கு?... உலக நடப்பையும் எதார்த்தத்தையும் தானம்மா நீ சொன்ன?... அதுல துளி கூட தப்பில்லை… வீணா நீ பேசிட்டு போனவங்களை நினைச்சு கவலைப்படாதம்மா…” என்றவர், அவள் முகத்தினை அழுத்தமாய் பார்த்துவிட்டு,

“எனக்கு பெண் குழந்தை இல்லம்மா… ஆனா எனக்கு ஏனோ உன்னைப் பார்க்கும்போது எனக்கு ஒரு பொண்ணு இருந்தா உன்னை மாதிரி இருக்கும்னு தோணுது....” என கூறிட,

“வேண்டாம்மா… பேச்சுக்கு கூட என்னை மாதிரின்னு சொல்லாதீங்க… என்னை மாதிரி துரதிர்ஷ்டசாலி இந்த உலகத்துல யாருமே இல்லை…” என்றாள் சந்தாவும் சட்டென…

“இல்லக்கா… அப்படி சொல்லாதீங்க… ஒரு நிமிஷத்துல என்னையும் என் குழந்தையையும் பார்த்தவங்க பார்வை, உங்க வலி நிறைஞ்ச வார்த்தையில கொஞ்சமாவது மாறியிருக்கும்னு அவங்க அமைதியா போகும்போதே தெரிஞ்சது… என் வாழ்க்கையில இனி எனக்கு பிடிப்பு என் குழந்தையும், என் குடும்பமும் தான்… ஆனா அதே நேரத்துல என் குழந்தையை வச்சு எனக்கு வாழ்க்கை மேல ஒரு பிடிப்பு ஏற்படுத்தி கொடுத்த நீங்களும் இனி என் குடும்பம் தான்… என் ரஞ்சித் எனக்கு தந்த உயிரை நான் இந்த உலகத்துக்கு பத்திரமா கொண்டு வரணும்… அதுக்கு நீங்க எல்லாரும் எங்கூட இருக்கணும்…. எல்லாரும்னு நான் சொன்னது உங்களையும் சேர்த்து தான்.. உங்களை மாதிரி நல்ல மனசுள்ளவங்க தான் என்னையும் என் குழந்தையையும் சுத்தி இருக்கணும்… ப்ளீஸ் அக்கா… எனக்காக… அப்பப்போ வந்து போனா கூட போதும்… இல்ல நானே கூட வரேன்… ஆனா எனக்கு உங்க நட்பு வேணும்…” என்ற ஜாக்குலினின் கரங்களை ஆதரவாக பிடித்துக்கொண்டாள் சந்தா சற்றே உதித்திட்ட புன்னகையுடன்…

எழில் பூக்கும்...!

Episode # 19

Episode # 21

{kunena_discuss:1122}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.