(Reading time: 14 - 27 minutes)

தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 30 - ஜெய்

Saathiram pesugiraai kanamma

ன்று நாராயணன் மற்றும் நரேஷ்  ஆகிய இரண்டு பேரின் வழக்குமே நடத்தப்பட இருந்ததால் நீதிமன்ற வளாகம் ரசிகர்களாலும், கட்சித் தொண்டர்களாலும் நிரம்பி வழிந்தது... தப்பே செய்திருந்தாலும் கண்மூடித் தனமாக ஜால்ரா அடிக்கும் கூட்டம்  இருந்து கொண்டுதான் இருக்கிறது....

பாரதி, சந்திரன் மற்றும் சாரங்கன் உள்நுழையும்போது அவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்ப ஆரம்பித்தனர் வந்திருந்த ஜால்ரா கூட்டத்தில் சிலர்... மேலும் சிலர் அவர்கள் மூவரை நெருங்க முயற்சிக்க கோர்ட் வாசலில் சிறிது நேரம் தள்ளு முள்ளு ஏற்பட்டது... அந்த கூட்ட நெரிசலை சமாளித்து அவர்கள் மூவரும் உள்நுழைந்தனர்...

காலையில் முதல் வழக்காக நாராயணனின் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது... ஏற்கனவே ராமசாமியின் வழக்கில் அவர்கள் தண்டிக்கப்பட்டு இருந்ததால் இரட்டை கொலை வழக்கு மட்டும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.... சந்திரன் நாராயணனை குறுக்கு விசாரணை செய்ய விரும்புவதாகக் கூற நீதிபதி அனுமதி அளித்தார்...

“நீங்க இப்போ கடை வச்சிருக்கற இடத்தை யார்கிட்ட இருந்து வாங்கினீங்க நாராயணன்....”

“அது சக்ரபாணி அப்படிங்கறவர்கிட்ட இருந்து வாங்கினேன்....”

“எந்த வருஷம் வாங்கினீங்க, ஞாபகம் இருக்கா...”

“சரியா எட்டு வருஷம் முன்னாடி வாங்கினது....”

“ஹ்ம்ம் நீங்க வாங்கறதுக்கு முன்னாடி அங்க என்ன இருந்தது....”

“அங்க அவர் துணிக்கடை வச்சு நடத்திட்டு இருந்தார்... அப்போ மாடி எல்லாம் கிடையாது... கீழ்த் தளம் மட்டும்தான் இருந்துச்சு... நான் வாங்கின பின்னாடிதான் மேல்த்தளம் எல்லாம் கட்டினோம்....”

“ஒரு இடம் வாங்கறோம் அப்படின்னா அதைப்பத்தி முழுக்க தெரிஞ்சிப்போம்... சக்ரபாணி யாருக்கிட்ட இருந்து வாங்கினாரு தெரியுமா?”

“தெரியும் வக்கீல் சார்... சக்ரபாணி வாங்கறதுக்கு முன்னாடி ரெண்டு கை மாறி இருக்கு.... அவங்க அங்க ஏதோ பாத்திரக்கடை வச்சிருந்ததா சொன்னாங்க...”

“இதோட முதல் ஓனர் யாருன்னு தெரியுமா?”

“யாரோ உமாபதின்னு சொன்னாங்க.... அவங்க சின்ன சின்ன function நடக்கற  மண்டபமா அதை உபயோகிச்சதா சொன்னாங்க.... ஆனா நான் வாங்கும்போது ரெண்டு பேருமே உயிரோட இல்லை.... ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டாங்கன்னு சொன்னாங்க....”

“இறந்துட்டாங்கன்னு சொன்னாங்களா.. இல்லை கொலை பண்ணிட்டாங்கன்னு சொன்னாங்களா....”

“எனக்கு சொன்னது இறந்துட்டாங்கன்னுதான் சார்....”

“உண்மை மட்டுமே பேசுவேன்னு சொல்லி சத்தியம் பண்ணிட்டு இப்படி பொய் சொல்றீங்களே நாராயணன்...”

சந்திரன் சொல்ல நாராயணனும், தமிழ்ச்செல்வனும் அவரை திடுகிட்டுப் பார்த்தார்கள்....

“அவங்க ரெண்டு பேரையுமே போட்டுத் தள்ளினது நீங்க ஏற்பாடு பண்ணின கூலிப்படை ஆளுங்க... அதுக்கு உடந்தையா இருந்தது இதோ உங்க பக்கத்துல இருக்கற கவுன்சிலர்... விஷயம் வெளிய வராம  இருக்க மேல் மட்டத்துல இருந்து கீழ்மட்டம் வரைக்கும் நீங்க செலவழிச்ச பணம் சுமார் இருவது லட்சம்....”

“வக்கீல் சார் சும்மா வாய்க்கு வந்தது எல்லாம் பேசாதீங்க... எனக்கு அவங்களை யாருன்னே தெரியாது... நான் இடம் விஷயமா பார்த்தது எல்லாம் சக்ரபாணியை மட்டும்தான்... அதுவும் இல்லாம நான் இடம் வாங்கறதுக்கு ரெண்டு வருஷம் முன்னாடியே அவங்க இறந்து போய்ட்டாங்க... நீங்க என்னோட பத்திரத்தை எடுத்து சரி பார்த்துக்கலாம்....”

“உங்க குடும்ப ஜாதகமே எங்க கைல நாராயணன்.... உமாபதியை மிரட்டி கையெழுத்து வாங்கி இடத்தை பதிவு பண்ணினது உங்க மச்சானோட நண்பர் பேர்ல.... அவர்கிட்ட இருந்து அதை கவுன்சிலரோட நண்பருக்கு மாத்தி அதை சக்ரபாணி பேருக்கு மாத்தி இருக்கீங்க.. இதை எல்லாம் ஆறு ஆறு மாச இடை வெளில பண்ணி இருக்கீங்க....”

“அப்ஜெக்ஷன் யுவர் ஹானர்.... எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் மேலும், மேலும் என் கட்சிக்காரரை குற்றம் சொல்வதை சந்திரன் அவர்கள் நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்....”

“தகுந்த ஆதாரத்தோடதான் குற்றம் சுமத்துகிறேன் யுவர் ஹானர்.... உமாபதியும், அவர் மனைவியும் கொலை செய்யப்பட்டபோது காவல்துறை இருவரைக் கைது செய்தது... அவர்கள் இருவரும் உமாபதியின் வீட்டிற்கு திருட சென்றபொழுது கொலை நடந்ததாகக் கூறி கைது செய்தார்கள்.... ஆனால் அப்பொழுது திருடு போன பொருட்களை பற்றி எந்த விவரங்களும் வெளியில் வரவில்லை....”

“ராமசாமியின் வழக்கு விசாரணைக்காக நாங்கள் ஆராயும்போதுதான் ஆறு ஆறு மாதங்களில் இடம் கைமாறிய விஷயம் தெரியவந்தது.... முதலில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.... ஆனால் நான் அந்த வழக்கிற்காக பாத்திரக்கடை முருகேசனின் வீட்டிற்கு சென்றபொழுது சங்கத்தில் எடுத்த புகைப்படம் மாட்டப்பட்டு இருந்தது... அதில் நாராயணனுடன் மிக நெருக்கமாக மற்ற மூவரும் பேசுவது போல் அந்த புகைப்படம் இருந்தது... அதை வைத்து ஆராய்ந்ததில் ஒருவருக்கொருவர் எப்படி தொடர்பில் உள்ளார்கள் என்ற விவரம் தெரிய வந்தது.....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.