(Reading time: 14 - 27 minutes)

நரேஷின் வழக்கறிஞர் அம்பலவாணர் எழுந்து நீதிபதியை நோக்கி, “மாண்புமிகு நீதிபதி அவர்களே, வீடியோ ஆதாரம் பெருமளவில் செல்லுபடியாகாது என்று தெரிந்தபிறகும் எதிர்கட்சி வக்கீல் ஒரு ஒரு வழக்கிலும் அதையே சமர்ப்பிக்கின்றார்.... இன்று இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியை வைத்துக்கொண்டு எந்த விதமான காணொளியையும் நம் இஷ்டத்திற்கு தயாரிக்க முடியும்... ஆகவே இதை மட்டும் வைத்து நரேஷின் மீது குற்றம் சுமத்துவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது....”

நீதிபதி அம்பலவாணரின் கூற்றை ஏற்றுக்கொண்டு சந்திரனிடம், இந்த வழக்கில் வேறு ஏதேனும் வலுவான சாட்சிகள் இருக்கிறதா என்று கேட்டார்....

“திரு. அம்பலவாணர் அவர்களே, காணொளியை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்... சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் வெற்றியில், அதற்கு முந்தைய தினம் வெளியான காணொளிக்கு முக்கிய பங்கு உண்டு... நீதிபதி அவர்களே.... இந்த நரேஷ் ராணியை மட்டும் அல்ல... இதைப் போல் பல பெண்களை ஏமாற்றி உள்ளான்... இந்த நரேஷ் வெளி உலகிற்கு காட்டும் முகம் ஒன்று... ஆனால் உள்ளுக்குள் இருக்கும் முகம் மிகக் கொடூரமானது...”

“என் கட்சிக்காரர் சமூகத்தில் மிகவும் உயர்ந்த இடத்தில் இருப்பவர்... அதே போல் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டவர்... எனவே அவரை தரக்குறைவாக பேசுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் நீதிபதி அவர்களே....”

“நீதிபதி அவர்களே... நானாவது பேசுவதோடு நின்று விட்டேன்... இந்த நரேஷ் செய்த லீலைகளை எல்லாம் கேட்டீர்கள் என்றால் மேல் முறையீடே இல்லாமல் தூக்கு மேடைக்கு அனுப்பி விடுவீர்கள்....”

“நீங்களும் இந்த வழக்கு ஆரம்பித்ததில் இருந்து இப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்..... ஆனால் காணொளி ஆதாரத்தைத் தவிர வேறு எதுவும் உங்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை...”

“நீதிபதி அவர்களே... சிறிது நாட்களுக்கு முன் நரேஷின் வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்றது உங்களுக்கு தெரியும்...”

“ஆமாம் ஆனால் அதற்கும் இந்த வழக்கிற்கும் என்ன சம்மந்தம்... அது முழுக்க முழுக்க அமலாக்கப் பிரிவின் கீழ் வருவது....”

“தெரியும் நீதிபதி அவர்களே... அன்று சோதனைக்கு அமலாக்கப் பிரிவு சென்றது மட்டும்தான் வெளியுலகிற்கு தெரியும்... ஆனால் அவர்கள் செல்வதற்கு சற்று முன்னால் நம் காவல்துறை செல்றது வெளியுலகிற்கு தெரியாது....”

“திரு,அம்பலவாணர் இந்தக் காணொளி போலியானது என்று தெரிவிக்கிறார்... ஆனால் நீங்கள் எத்தனை சோதனை செய்தாலும் இது உண்மைதான் என்பது உங்களுக்குத் தெரியவரும்... ஏனெனில் இதை எடுத்தது என் ஜூனியர் சாரங்கன்... அது மட்டும் அல்ல நரேஷின் மற்ற லீலைகளையும் என் ஜூனியர்கள் இருவரும் கண்டறிந்து அதை காவல்துறை வசம் ஒப்படைத்துள்ளனர்....”

“இது அத்துமீறல் யுவர் ஹானர்.... ஒருவரின் தனிப்பட்ட இடத்திற்கு அவருக்குத் தெரியாமல் சென்று உளவு பார்ப்பது சட்டத்திற்கு புறம்பானது...”

“ஏண்டா சப்பாணி சுஜாதா, ராஜேஷ் குமார் நாவல்ஸ்ல வர்ற வக்கீல் எகிறி குதிச்சு ஆவணத்தை கைப்பற்றினா சூப்பர்ன்னு சொல்றாங்க.... ஆனா நாம பண்ணினா குத்தம்ன்னு சொல்றாங்க...”

“அடியேய் அவங்கள்லாம் experienced hands... நாமல்லாம் கத்துக்குட்டி.... யாரோட compare பண்ற...”

“சரி சரி விடு விடு... பெரிசு ஏதோ சொல்லுது பார்... அங்க கவனி.....”

“நீதிபதி அவர்களே.... எந்த குற்றவாளியும் தான் செய்த தப்பின் சாட்சியத்தை வெளியுலகிற்கு தெரியும் வண்ணம் வைத்திருக்க மாட்டான்... அதை வெளிக்கொணர நாம் சில நேரங்களில் அத்து மீற வேண்டியுள்ளது...  அப்படிக் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், இந்த ராணியின் வழக்குத் தவிர, சிறுவர் வன்கொடுமை குற்றம் உள்பட மேலும் நான்கு வழக்குகள் இந்த நரேஷின் மீது நேற்று மாலை பதிவு செய்யப்பட்டுள்ளது.... அதற்கான தகுந்த ஆதாரங்களை காவல்துறையை சேர்ந்த மதி உங்களிடம் சமர்ப்பிப்பார்.... அதையும் சேர்த்து விசாரிக்க உத்தரவிடுமாறு கணம் நீதிபதி அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.....”

“நீதிபதி அவர்களே... திரு.சந்திரன் அவர்கள், தான் எடுக்கும் வழக்குகளை, நிரூபிக்க முடியவில்லை என்றால் மேலும் சில, பல வழக்குகளை குற்றவாளிகள் மீது சாற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.... இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வழக்கிற்கு முதலில் ஆதாரங்களை சமர்பிக்க வேண்டுகிறேன்...”

“நீதிபதி அவர்களே, திரு. மதி அவர்கள் சமர்பிக்கும் ஆதாரங்களிலேயே ராணியின் வழக்கிற்கான ஆதாரமும் சேர்ந்து உள்ளது... ஆகவே தாங்கள் ராணியின் வழக்கு, காவல்துறை நேற்று அவர்மீது சாற்றிய குற்றம் ஆகிய அனைத்தையும் சேர்த்தே விசாரிக்க வேண்டுகிறேன்....”

நீதிபதி மதியை அழைத்து சாட்சிகளை சமர்பிக்குமாறு கூற, மதியும் தாங்கள் கைப்பற்றிய ஆவணங்கள், காணொளி அனைத்தையும் நீதிபதியிடத்தில் சமர்ப்பித்தான்...

‘யுவர் ஹானர்... நான் காவல்துறை அதிகாரி மதியை விசாரிக்க அனுமதி வேண்டுகிறேன்....”, அம்பலவாணர் கேட்க, நீதிபதி மதியை விசாரணை செய்ய அனுமதி அளித்தார்...

“திரு.மதி அவர்களே... நரேஷின் மீது மேலும் சில வழக்குகளை நேற்று பதிந்துள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்தார்... அது எந்தப் பிரிவு மற்றும் எதனால் போடப்பட்டது என்பதை கூற முடியுமா...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.