(Reading time: 21 - 41 minutes)

தொடர்கதை - தித்திக்கும் புது காதலே!!! - 10 - கார்த்திகா கார்த்திகேயன்

Thithikkum puthu kathale

கோர்ட்டும் சூட்டுமாக சூர்யாவும், அழகிய மெரூன் பார்டர் வைத்த வெண்ணிற பட்டில் கலைமதியும் அந்த  ரிசப்ஷன் மேடையில் நின்றார்கள்.

பேசியல், கிரீம் என்று முகத்தில் வெள்ளை அடிக்காமல் கிராமத்தில் நடக்கும் கல்யாணத்தில் பெண்ணுக்கு என்ன மாதிரியான அலங்காரம் இருக்குமோ அதன் படி மதிக்கு செய்திருந்தாள் காவ்யா.

மங்களம் ஏன் என்று கேட்டதுக்கும் "இப்ப எல்லாரும் போடுற மாதிரி மேக்கப் போட்டா பொண்ணு கிழவி மாதிரி தான் தெரியவா அம்மா. இப்படி இருந்தா தான் மதி அழகா இருப்பா. மதிக்கும் இது தான் பிடிச்சிருக்குனு சொன்னா", என்று கூறி விட்டாள் காவ்யா.

மணப்பெண்ணாக அலங்கரிக்க பட்டிருந்த கலைமதியை சூர்யாவும் ரசித்தான். அவன் சென்று மேடையில் நின்ற பின்னர் தான் கலைமதியை அழைத்து வந்தாள் காவ்யா. அதனால் கலை எப்படி உடை அணிந்திருக்கிறாள் என்று சூர்யா முன்னேயே பார்க்க வில்லை. மணமேடைக்கு நடந்து வரும் போது பார்த்தவன் சிலையாகி போனான்.

"நான் எடுத்த சேலை சூப்பரா பொருந்திருக்கு கலைக்கு. கல்யாணம் அன்னைக்கு இவ முகத்தை கூட பார்க்கலை. ஆனா இன்னைக்கு எப்படி இருக்கா? எப்பா , செம. சும்மா தேவதை தான் போ. இந்த சுடிதார் போட்டா தான் எலிக்குஞ்சு மாதிரி குட்டியா இருக்கா. இப்ப பாரு பெரிய பொண்ணு மாதிரி கும்முனு இருக்கா", என்று மேடை என்றும் பாராமல் சைட் அடித்து கொண்டிருந்தான்.

அவன் அருகில் கலைமதியை நிற்க வைத்த காவ்யா, சூர்யா அருகில் சென்று "அண்ணா கொஞ்சம் நீங்க முன்னாடி பாத்து நின்னா நல்லா இருக்கும். எல்லாரும் உங்களையே பாக்குறாங்க. நீங்க என்னடான்னா பக்கத்துல இருக்குற உங்க பொண்டாட்டியை பாக்குறீங்க? கொஞ்ச நேரம்  பொறுத்து கிட்டா, நாங்க எல்லாம் சாப்பாட்டை ஒரு வெட்டு வெட்டிட்டு அவரவர் வீட்டுக்கு போயிருவோம். அதுக்கு பின்னாடி உங்கள் காதல் பார்வையை பரிமாறுங்களேன்", என்று கிசுகிசுத்தாள்.

"ஹா ஹா, நீ சொல்றது எனக்கு புரியுது காவ்யா. ஆனா உன் பிரண்ட்க்கு புரியலையே. தேவதை மாதிரி அலங்கரிச்சு கூட்டிட்டு வந்துருக்க. அப்படியே சொக்குற மாதிரி இருக்கா. ஆனா நிமிர்ந்து ஒரு பார்வை என்னை பாக்க மாட்டிக்காளே? ஒரு ஓர பார்வை பாத்துட்டான்னா, நானும் முன்னாடி இருக்குற மக்களை பார்ப்பேன்", என்று சிரித்தான் சூர்யா.

அவன் கிண்டலில் முகம் சிவந்தவள், தன்னுடைய கை அருகே இருந்த அவனுடைய கையில் அழுத்தி கிள்ளி விட்டாள்.

எறும்பு கடித்தது போன்ற அவளுடைய கிள்ளலை ரசித்தவன் கிள்ளிய அவள் விரல்களை பற்றி கொண்டு திருப்பி கொண்டான்.

"ஏய் நீயும் தான் உன் அத்தானை பாரேன் டி? அப்ப இருந்து என் அத்தானை பாக்கணும் பாக்கணும்னு சொல்லிட்டு, இப்ப பாக்காம இருக்க? நீ பாத்தா தான் அவங்க தலை திரும்புமாம்", என்று சொன்ன காவ்யா சூர்யாவை பார்த்து திகைத்தாள். அவன் நேராக நின்றிருந்தான்.

"அண்ணா அவ பாக்காம, தலையை திருப்ப மாட்டேன்னு சொன்னீங்க? இப்ப திருப்பிடீங்க?"

"என் கலை தான் திரும்ப சொன்னா காவ்யா"

"அப்படியா? அவ பேசவே இல்லையே. அப்ப எப்படி சொன்னா?"

"கையிலே ஒரு கிள்ளு கிள்ளி முன்னாடி பாக்க சொல்லி சிக்னல் செஞ்சா"

"அட பாவிகளா? நான் இங்க ரெண்டு பேரும் கண்ணால பேசிக்குவீங்கன்னு நினைச்சு ஒரு லவ் சீனுக்கு வெயிட் பண்ணிட்டு இருந்தா நீங்க கையால பேசிக்கிறீங்களே? சரி சரி நீங்க தொடருங்க. அங்க இருந்து எங்க அம்மா என்னை முறைக்கிறாங்க. இன்னும் உங்க கிட்ட ஸ்டேஜ்ல இருந்து வாயடிச்சா அவங்க என் கன்னத்துல அவங்க கையால பேசிருவாங்க", என்று சொல்லி விட்டு ஓடி விட்டாள்.

அதன் பின் அனைவரும் வந்து வாழ்த்தினார்கள். அவனுடன் வேலை பார்ப்பவர்கள், கலைமதியின் காலேஜ் பேராசிரியர்கள், கூட படிக்கும் நண்பர்கள் என அனைவரும் வந்து பரிசு கொடுத்து வாழ்த்தினார்கள்.

காவ்யா அம்மா, திலகா வந்து இருவருக்கும் மோதிரம் கொடுத்து மாற்றி மாற்றி போட்டு விட சொன்னாள்.

அடுத்து சூர்யாவின் நண்பர்கள் வந்து இருவரையும்  கிண்டல் அடித்தார்கள்.

கலையுடன் பேச சந்தர்ப்பம் கிடைத்த நேரத்தில் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டான் சூர்யா. "நான் அழகா இருக்கேனா?", என்று.

ஆனால் அதற்கு "இல்லை", என்று பதில் கூறி அவனை திகைக்க வைத்தாள் கலைமதி.

"விளையாட்டுக்கு சொல்றாளோ?", என்று நினைத்து அவளுடைய முகம் பார்த்தவனோ இன்னும் திகைத்தான். ஏனென்றால் அவள் உண்மையாக தான் கூறி இருந்தாள். இப்போது அவனுக்கு கவலையே வந்திருந்தது.

"ஏன் என்னோட அழகு கலைக்கு புடிக்கலையா? அவளுக்கு புடிச்ச மாதிரி நான் அழகா இல்லையா?", என்று யோசித்தான்.

அவன் குழப்பத்தை பார்த்தவளோ, "கொஞ்சம் இல்லை ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க?", என்று அவன் காதில் உரைத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.