(Reading time: 33 - 65 minutes)

42. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

துஷ்யந்த் விஷயத்தில் மட்டும் கங்காவின் மனது ஏன் கல் மனதாக இருக்கிறதோ என்று தான் இளங்கோவிற்கு நினைக்க தோன்றியது. துஷ்யந்த் அத்தனை உருகி பேசியதற்கு கங்கா அறைக்குள் தான் இருக்கிறாள் என்று சொல்லிவிட அவன் மனம் துடித்தது. அதுவும் இருவருக்கும் ஆறு வருடத்திற்கு முன்பு திருமணம் முடிந்துவிட்டது என்று துஷ்யந்த் சொன்னபின்பும் கங்கா கிடைத்துவிட்டாள் என்பதை சொல்லாமல் இருப்பது பெரும்பிழை என்பதும் தெரியும்.. இருந்தும் அவன் அமைதியாக இருந்தான் என்றால் அதற்கு காரணம் கங்கா தான்.. அவளை இங்கு அழைத்து வரும்போதே இப்போதைக்கு துஷ்யந்திடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்ற நிபந்தனையோடு தான் கிளம்பி வந்தாள்.

அதனால் தான் அந்த நேரத்தில் இளங்கோவும் கல் மனதாக இருக்க வேண்டியதாக போயிற்று. அதுவும் துஷ்யந்திற்கு உண்மை தெரிந்துவிட்டது என்று தெரிந்தும் அவள் கல் மனதோடு அமர்ந்திருக்கிறாள் என்றால், முதலில் அவளோடு பேச வேண்டும், பின்பு துஷ்யந்திடம் சொல்லிக் கொள்ளலாம் என்று தான் அமைதியாக இருந்தான். இப்போதைக்கு கங்காவை அதிகமாக தேடி அலையாமல் விரைவில் கண்டுப்பிடித்ததே போதும் என்று இருந்தது. தன்னாலாவது அவளை கண்டுப்பிடிக்க முடிந்ததே என்று நிம்மதியடைந்தான்.

கங்கா இங்கிருந்து சென்று இரண்டு நாளாகிறது என்பதால் துஷ்யந்தை போல் அவள் எங்கு இருக்கிறாள் என்று தெரியாமல் தான் இளங்கோவும் தேடினான். துஷ்யந்த் யாரிடம் விசாரித்தானோ அங்கே சென்று தான் இளங்கோவும் விசாரித்தான். அப்படி தான் மதர் ஜெர்மனின் இல்லத்திலும் அவன் விசாரித்தது. துஷ்யந்திடம் சொன்னது போல் தான் அவனிடமும் கங்கா வரவில்லை. மதர் ஊருக்கு சென்றிருக்கிறார்கள் என்று அங்குள்ளவர்கள் பதில் கூறினர். ஆனால் மதர் ஊருக்குச் சென்றிருப்பதை இளங்கோவால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

கங்காவின் மூலம் தான் மதர் ஜெர்மனை துஷ்யந்திற்கும் இளங்கோவிற்கும் தெரியும். துஷ்யந்த் வருடாவருடம் அந்த இல்லத்தின் முன்னேற்றத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை பணமாக கொடுப்பான். அந்த இல்லம் நடத்த தேவையான பணம் வெளிநாட்டிலிருந்து வருகிறது. அதனால் நன்கொடை கேட்டு மதர் யாரிடமும் செல்வதில்லை. அவர்களே மனமுவந்து உதவி செய்தால் ஏற்றுக் கொள்வார். நன்கொடை கொடுப்பதால் யாரையும் அங்கு கொண்டாடுவதில்லை. அதனால் தான் துஷ்யந்தை அங்கு உள்ளவர்களுக்கு அதிகமாக  தெரியாது. அவனும் அதை விரும்புவதில்லை.

ஆனால் இளங்கோவால் அதிகமாக பண உதவி செய்ய முடியவில்லையென்றாலும், இல்லத்திற்கு அடிக்கடி செல்வது, தன்னாலான பண உதவி தவிர்த்து இதர உதவிகள் செய்வான். அதனால் கங்கா, யமுனா போலவே இளங்கோவும் மதர் ஜெர்மனுக்கு நெருக்கமானவனாக இருந்தான். மதர் எந்த விஷயமாக இருந்தாலும் கங்கா, யமுனாவிடம் சொல்வது போல இளங்கோவிடமும் சொல்வார். இப்போதோ மதர் ஊருக்கு செல்வதை பற்றி தன்னிடம் எதுவும் கூறவில்லையே என்று சிந்தித்து விசாரித்த போது, மதர் கேரளாவிற்கு செல்வதை பற்றியும் அங்கு தான் இனி இருக்கப் போகிறார்கள் என்பதையும் சொல்லிவிட்டார்கள்.

சாதாரணமாக ஊருக்கு செல்லும் செய்தியை சொல்லவில்லையென்றாலும் பரவாயில்லை. ஆனால் இது முக்கியமான விஷயம். இதை அவனிடம் சொல்லாவிட்டாலும் கண்டிப்பாக கங்கா, யமுனாவிற்கு தெரியப்படுத்தியிருப்பார். யமுனாவிற்கு தெரிந்திருந்தால் இந்நேரம் அவனிடம் கூறியிருப்பாள். அப்போது கங்காவிற்கு தெரியுமா? என்று யோசித்த போதே கங்கா எங்கு சென்றிருப்பாள் என்று யூகிக்க முடிந்தது.

“மதர் கேரளாவில் எந்த ஊருக்கு போயிருக்காங்க? அந்த அட்ரெஸ் கிடைக்குமா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டான்.

கங்காவை பற்றி கேட்டால் ஒன்றும் சொல்ல வேண்டாம். என்னைப் பற்றி கேட்டால் ஊருக்கு செல்வதாக சொல்லவும் என்று தான் மதர் அங்கிருப்பவர்களிடம் சொல்லிவிட்டு சென்றார். ஆனால் இளங்கோ துருவி துருவி விசாரித்த போது அவர்களால் மதரை பற்றி விளக்கமாக சொல்லாமல் இருக்க முடியவில்லை. அவர் இப்போது பாண்டிச்சேரியில் இருப்பதாகவும், இன்று இரவு தான் கேரளாவிற்கு கிளம்புவதாகவும் கூறினார்கள்.

கங்கா கண்டிப்பாக மதரோடு தான் இருக்க வேண்டும். அதனால் தான் கேரளா செல்வதை அவர் தன்னிடமும் யமுனாவிடமும் கூறவில்லை என்று சரியாக யூகித்தான். அவர்களிடம் பாண்டிச்சேரி முகவரியை கேட்டு வாங்கியவன், அடுத்து உடனே இப்போது பாண்டிச்சேரி கிளம்ப வேண்டும். அதுவும் விரைவாக செல்ல வேண்டும். அதனால் காரில் செல்வது தான் இப்போதைக்கு சரி என்று நினைத்தான். துஷ்யந்திடம் தன் சந்தேகத்தை கூறி இருவருமே துஷ்யந்த் காரில் செல்லலாமா? என்று முதலில் யோசித்தவன், ஒருவேளை கங்கா அங்கேயும் இல்லையென்றால்? இதில் துஷ்யந்த் கங்காவை காணாமல் உணர்ச்சி வசப்பட்டிருக்கும் நிலையில் துஷ்யந்திடம் இப்போதைக்கு சொல்ல வேண்டாம் என்று நினைத்துக் கொண்டு, ட்ராவல்ஸ் வைத்திருக்கும் நண்பன் ஒருவனிடம் நன்றாக வேகமாக ஓட்டும் ஓட்டுனரோடு கார் கேட்டான். நண்பனே உடன் வருவதாக கூறி இருவரும் சாதாரணமாக செல்லும் நேரத்தை விட முக்கால் மணி நேரத்திற்கு முன்பாகவே பாண்டிச்சேரியை அடைந்தனர்.

முதலில் அவன் மதரை பார்க்கும் சந்தர்ப்பம் தான் கிடைத்தது. இளங்கோவோ யமுனாவோ கண்டிப்பாக கங்காவை தேடி வருவார்கள் என்ற யூகம் அவருக்கு இருந்தது. கங்காவை பற்றி இளங்கோ கேட்ட போது அவரால் அவனிடம் பொய்யுரைக்க முடியவில்லை. கங்காவிற்காக உண்மையை தான் மறைப்பதாக சொல்லியிருந்தார். ஆனால் அவரால் எப்போதும் பொய் சொல்ல முடியாது. அதனால் கங்கா இங்கு தான் இருக்கிறாள் என்று சொல்லிவிட்டார். அதன்பின் கங்காவோடு சிறிது நேரம் போராடி, இப்போது துஷ்யந்திடம் சொல்லவில்லை. எதுவாகினும் வீட்டில் சென்று பேசி முடிவெடுக்கலாம் என்ற உறுதியோடு தான் அவளை அழைத்து வந்தான்.

அவர்கள் சென்னையை நெருங்கும் சமயத்தில் தான் துஷ்யந்த் இளங்கோவை அலைபேசியில் அழைத்தான். அந்த நேரம் துஷ்யந்திடம் என்ன சொல்வது என்று புரியவில்லை. எதுவாக இருந்தாலும் வீட்டிற்கு சென்றதும் பேசிக் கொள்ளலாம் என்று தான் இரண்டு முறையும் அழைப்பை ஏற்கவில்லை. அப்போது தான் வீட்டிற்கு இருவரும் வந்தார்கள். உடனே துஷ்யந்த் வருவான் என்று எதிர்பார்க்கவே இல்லை. அவனை கஷ்டப்படுத்தி அனுப்பியது இளங்கோவிற்கு மிகவுமே வருத்தமாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.