(Reading time: 33 - 65 minutes)

ங்களுக்கு இன்னொரு முறை கல்யாணம் நடக்கணும்னா அதுக்கு நாங்க இந்த ஆறு வருஷம் காத்திருந்திருக்க வேண்டியதில்ல.. இவர்க்கிட்ட நாம கல்யாணம் செஞ்சுக்கலாம்னு முன்னமே சொல்லியிருந்தா எப்பவோ எங்க கல்யாணம் நடந்திருக்கும்.. ஆனா எனக்கு தேவையானது எங்களுக்கு நடந்த கல்யாணத்துக்கான அங்கீகாரம் தான்.. அது நாடகம்னு இவரோட மாமா சொன்னாருல்ல.. ஆனா இது உண்மை கல்யாணம்னு நீங்கல்லாம் ஏத்துக்கிட்டா போதும்..

திரும்ப எங்களுக்கு கல்யாணம்னா முன்ன நடந்த கல்யாணத்துக்கு ஒரு அர்த்தம் இல்லாமயே போயிடும்.. என்னை பத்தி தப்பா பேசினவங்களுக்கெல்லாம் அது தெரியாமலெயே போயிடும்.. அது கூட பரவாயில்ல, ஊர்க்காரங்க பேசறத நான் இப்பல்லம் பெருசா எடுத்துக்கிறதில்ல.. ஆனா இவரோட மாமா சொன்னது போல அது நாடக கல்யாணம், அந்த நேரம் பணத்துக்காக தான் நான் இப்படி ஒரு கல்யாணத்தை செஞ்சுக்கிட்டேன்.. நான்  தப்பான வாழ்க்கை வாழ்ந்தேன்னு எனக்கே உறுத்தலா இருக்கும்..” என்று முழுதாக சொல்லி முடிக்கவில்லை. அதற்குள் துஷ்யந்த் அவளது வாயை பொத்தியிருந்தான்.

“அம்மா.. எனக்கு கல்யாணம் நடக்காதது தானே உங்களுக்கு வருத்தமா இருந்துச்சு.. இப்போ எனக்கும் கங்காவுக்கும் தான் கல்யாணம் ஆகிடுச்சே, அப்புறம் என்னம்மா.. இந்த இன்னொரு முறை கல்யாணமெல்லாம் வேண்டாம்மா..”

“கங்காவோட நிலைமை எனக்கு புரியுது ராஜா.. ஆனாலும் ஒரு அம்மாவா பிள்ளையோட கல்யாணத்தை பார்க்கலயேன்னு மனசு ஏங்குது.. ஒன்னு வேணும்னா செய்யலாமா? ஒரு கோவிலில் வச்சி நம்ம கங்காவுக்கு தாலி பிரிச்சு கோர்க்கலாம்.. அதை உன்னோட கையால போட்டு விடு.. அதையாச்சும் என்னோட கண்ணால பார்த்துக்கிறேன்..”

“ஆனா அம்மா கங்காக்கு அப்பவே இந்த சடங்கெல்லாம் நான் செஞ்சுட்டேனே..”

“வெறும் மஞ்சள் கயிறுல தானே தாலி கோர்த்திருக்கு வாணி.. நம்ம வீட்டு முறைப்படி தங்க செயின்ல கோர்க்கணும்.. அதுதான் முறை, அதை கங்காவுக்கு செஞ்சுடுவோம்..” என்றவர், “என்ன சொல்றம்மா இதுல உனக்கு சம்மதம் தானே..” என்று கங்காவிடம் கேட்டார்.

“இது ஒரு சடங்கு தானே, அதனால செய்ங்க.. ஆனா அம்மா நான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னதுல உங்களுக்கு வருத்தம் இல்லையே..”

“உன்னை என்னால புரிஞ்சிக்க முடியுது கங்கா.. இதுல எனக்கு வருத்தம் இல்ல.. ஆனா இன்னும் நீ என்னை அம்மான்னு கூப்பிட்றது தான் வருத்தமா இருக்கு..”

“சாரி அத்தை.. அப்புறம் இந்த சடங்கை உடனே செய்யணுமா? ஏன் கேக்கறன்னா இன்னும் பத்து நாளில் எங்களுக்கு கல்யாண நாள் வருது.. அப்போ இந்த சடங்கை வச்சுக்கலாமா?”

“அப்படியா ரொம்ப நல்ல விஷயம்..” என்று மகிழ்ந்தவர்,  “விஜி காலண்டர்ல அந்த நாள் எப்படி இருக்குன்னு பார்த்து சொல்லு..” என்றதும் கங்கா அவர்கள் திருமண நாள் தேதியை கூறினாள்.

காலண்டரை எடுத்து  பார்த்த விஜி.. “அண்ணி அன்னைக்கு நல்ல முகூர்த்த நாள்.. தாராளமா அன்னைக்கே சடங்கு வச்சிகலாம்.. அப்புறம் அண்ணி நம்ம நர்மதாக்கும் இன்னும் இந்த சடங்கு செய்யல.. 3 வது மாசம்  மார்கழி மாசமா போனதால எனக்கு செய்யணுமான்னு சரியா தெரியல அண்ணி.. இதுல நாம ராஜா விஷ்யத்துல குழப்பமா இருந்ததால விட்டுட்டோம்.. நர்மதா அம்மாவும் ஒரு நாள் இதைப்பத்தி பேசினாங்க அதனால ரெண்டுப்பேருக்கும் சேர்த்தே இந்த சடங்கை செஞ்சுடுவோம்..”

“கண்டிப்பா விஜி.. இதுக்கு நான் வேணாம்னா சொல்லப் போறேன்.. தாராளமா செய்யலாம்.. ஆமாம் நம்ம யமுனாவுக்கும் இந்த சடங்கை செஞ்சுட்டா என்ன? கல்யாணம் ஆன அதே மாசத்துலேயும் செய்யலாம்..” என்று யோசனை கூறியவர், இளங்கோவை பார்த்து,

“தம்பி உங்க வீட்ல இதுக்கு ஒத்துப்பாங்களா?” என்றுக் கேட்டார்.

“என்னோட பேர் இளங்கோ ம்மா.. நானும் உங்களுக்கு பிள்ளை போலத் தான்.. அப்பாக்கு இந்த சடங்கு சம்பிரதாயமெல்லாம் தெரியாது.. அண்ணிக்கு எல்லாம் அவங்க அம்மா வீட்ல தான் செஞ்சாங்க.. யமுனாக்கு நீங்க சொன்னப்படியே செய்யலாம்.. முன்னாடியே அப்பாக்கும், அண்ணா, அண்ணிக்கும் சொன்னா போதும்..”

“அப்புறம் என்ன? அன்னைக்கே இந்த விஷேஷத்தை வச்சிப்போம்.. அப்பவே முறைப்படி கங்காவையும் நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம்.. சரியாம்மா” என்று கங்காவை பார்த்து கேட்க, அவள் சரியென்று தலையாட்டினாள்.

“அப்புறம் செல்வா.. அன்னைக்கே சாயந்திரம் ஒரு பார்ட்டி மாதிரி ஏற்பாடு செய்ங்க.. கங்கா தான் நம்ம ராஜாவோட பொண்டாட்டின்னு அன்னைக்கு சொல்லிடுவோம்.. கூடவே உங்க கல்யாணமும் திடிர்னு நடந்தது தானே, அதனால என்னோட ரெண்டு மருமகள்களையும் எல்லோருக்கும் அறிமுகப் படுத்தி வைக்கணும் என்று சொன்னார்.

அதற்கு அவனும் “கவலைப்படாதீங்க ஜமாய்ச்சிடலாம்” என்று கூறினான். பின் துஷ்யந்த் குடும்பத்தினர் அனைவரும் வீட்டுக்கு கிளம்ப, அவன் மட்டும் இன்னும் சிறிது நேரம் கழித்து வருவதாக சொல்லியதால் மற்றவர்கள் கிளம்பினர்.

ன்று இரவு சாப்பாட்டை வாணி செய்ய அங்கேயே சாப்பிட்டு விட்டு தான் இளங்கோவும் யமுனாவும் அவர்கள் வீட்டிற்கு கிளம்பினர். சுடிதார் போட்டிருந்ததால் இருப்பக்கமும் கால் போட்டு இளங்கோவோடு நெருங்கி அமர்ந்து அவனது இரு தோள்களிலும் கைப்போட்டப்படி யமுனா அவனோடு பயணித்தாள். பொதுவாக அக்காவை போல் தான் தங்கையும் பொது இடங்களில் கொஞ்சம் அடக்கத்தோடு தான் இருப்பாள். அதுவும் பெரும்பாலும் சேலை அணிந்திருப்பதால், அவனோடு பைக்கில் பயணம் செய்யும் போது கூட கொஞ்சம் விலகி தான் அமர்ந்திருப்பாள். திருமணம் ஆகியும் இன்னும் அவர்கள் வாழ்க்கையை ஆரம்பிக்காததால், அவனோடு அந்த அளவுக்கு நெருக்கத்தையும் இன்னும் உணரவில்லை. அப்படிப்பட்டவள் இன்று அவனை நெருங்கி உட்கார்ந்திருக்க, அவளது சந்தோஷ மனநிலைப் புரிந்தாலும்,

“என்ன டீச்சருக்கு இன்னைக்கு அவங்க ஹஸ்பண்ட் மேல ரொம்ப லவ்வா.. ரொம்ப நெருங்கி வந்திருக்கீங்க” என்றுக் கேட்டான்.

“ஆமாம் ரொம்ப லவ் தான், கூடவே ரொம்ப சந்தோஷம், நிம்மதி எல்லாமே இருக்கு.. அக்கா லைஃப் கேள்வி குறியா இருக்கேன்னு எத்தனை நாள் ஃபீல் செஞ்சுருக்கேன்..  இன்னைக்கு அக்காவை துஷ்யந்த் மாமாவோட பார்த்தது.. மாமா வீட்ல எல்லாம் அக்காவை ஏத்துக்கிட்டது எல்லாம் நினைச்சு பார்த்தா மனசு ரொம்பவே நிறைஞ்சிருக்கு.. அதான் அந்த சந்தோஷத்தை இப்படி உங்கக்கிட்ட காதலா காட்றேன்.. என்றவள், அவனை அணைத்தப்படி அவன் மீது சாய்ந்துக் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.