(Reading time: 33 - 65 minutes)

ரம்பத்திலேயே கங்கா பட்ட கஷ்டமெல்லாம் தன்னால் தான் என்று யமுனாவிற்கு தெரிந்திருந்தாலும், இப்போது துஷ்யந்த் வந்து இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று சொல்லிவிட்டு சென்ற விஷயம் ஏற்கனவே யூகித்தது தான் என்றாலும், வாணியின் அலைபேசிக்கு முயற்சி செய்து விஷயத்தை அறிந்துக் கொள்ள அவள் முயற்சி செய்தாள். ஆனால் கங்கா காணாமல் போன வருத்தத்தில் வாணி இருந்ததால், நர்மதாவே யமுனாவிற்கு அழைத்து அங்கு நடந்ததையும் வாணி கூறிய விஷயத்தையும் விளக்கினாள்.

துஷ்யந்தை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்த இளங்கோவிடம் நர்மதா கூறிய அத்தனை விஷயத்தையும் யமுனா கூறினாள். இருவரும் கங்கா இருந்த அறைக்குள் சென்றனர். அங்கே இன்னும் கண்களில் கண்ணீரோடு கங்கா அமர்ந்திருந்தாள். அக்காவை பற்றி இன்று தான் முழுமையாக தெரிந்துக் கொண்டதால், தனக்காக அவள் எத்தனை கஷ்டங்களை அனுபவித்திருக்கிறாள் என்று நினைத்து பார்த்த யமுனாவிற்கும் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. கங்காவின் அருகில் சென்று அவளை அணைத்துக் கொண்டாள்.  இளங்கோவிற்கும் கங்காவின் வாழ்க்கையில் நடந்ததை நினைத்துப் பார்த்து அவன் மனம் வேதனைப்பட்டாலும், இப்போது துஷ்யந்தை நினைத்து தான் அவனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

“கங்கா..  துஷ்யந்த் எவ்வளவு வருத்தத்தோடு பேசினாரு, அப்பவும் இப்படி இரக்கமே இல்லாம உள்ள உக்கார்ந்திருக்க.. நீ எங்களையெல்லாம் விட்டுட்டு போயிட்டன்னு தெரிஞ்சதுல இருந்து எங்க எல்லோரையும் விட துஷ்யந்த் தான் ரொம்ப துடிச்சு போயிட்டாரு தெரியுமா? அவரை கஷ்டப்படுத்தி பார்க்கிறதுல உனக்கு என்ன கிடைக்கப் போகுது கங்கா.. உன்கூட வாழற வாழ்க்கை தான் அவருக்கு சந்தோஷம் அது ஏன் உனக்கு புரியல.. யாரோ சொன்னா துஷ்யந்தை விட்டுட்டு போயிடுவியா? சரி அவருக்கு எதுவும் தெரியாதப்போ போக நினைச்சது கூட பரவாயில்ல.. ஆனா இப்போ அவருக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சு.. இப்பவும் இப்படி கல் மனசா எப்படி உக்காத்ந்திருக்க முடியுது”

“துஷ்யந்திற்கு நான் என்ன உறவுன்னு தெரிஞ்சதால மட்டும் எல்லாம் சரியாகிடுமா இளங்கோ..”

“அவங்க வீட்ல இருக்கவங்க ஏத்துக்க மாட்டாங்கன்னு நினைக்கிறியா அக்கா.. இப்போ தான் நர்மதாவுக்கு போன் பண்ணேன்.. எல்லோருமே வாணிம்மா சொன்னதை நம்பறாங்களாம்.. உன்னை கஷ்டப்படுத்தினதுக்கு வருத்தப்பட்றாங்களாம்..”

“அப்புறம் என்ன கங்கா.. துஷ்யந்த் வீட்ல உன்னோட கல்யாணத்தை ஏத்துக்கிறப்போ அப்புறம் என்ன பிரச்சனை.. இங்கப்பாரு உன்னோட வாயால தான நீ துஷ்யந்தோட மனைவின்னு சொல்ல மாட்ட.. இப்போ நீ சொல்லாமலே எல்லோருக்கும் தெரிஞ்சிடுச்சு.. யாரும் உன்கிட்ட எதுவும் கேக்க மாட்டாங்க.. இதுக்குப்பிறகும் உனக்கு என்ன வேணும் கங்கா..”

“என் மனம் என்ன எதிர்பார்க்குது எனக்கே தெரியல இளங்கோ.. இத்தனை நாள் என் மனசுக்குள்ள நடந்த போராட்டத்துக்கு முடிவு வந்துடுச்சா நிஜமாவே எனக்கு புரியல..”

“உன்னோட மனசுல என்ன போராட்டம்னு என்னால புரிஞ்சிக்க முடியுது கங்கா.. இத்தனை நாள் உண்மையை வெளிய சொல்ல முடியாம எத்தனை வேதனைகளையும் அவமானங்களையும் சந்திச்சிருப்பன்னு எனக்கு புரியாம இல்ல.. ஆனா துஷ்யந்தும் உன்னை யாரோன்னு நினைச்சு ஒதுக்கவோ.. இல்ல முன்ன உங்களுக்கு இருக்க உறவை தப்பா பயன்படுத்திக்கவோ அவர் நினைக்கலியே..

உனக்கும் அவருக்குமான உறவு கணவன் மனைவிங்கிற உறவுன்னு அவருக்கு தெரியாம இருக்கலாம்.. ஆனா ஒரு கணவனா அவரோட கடமையை தான் அவர் இத்தனை நாளா உனக்கு செஞ்சிருக்கார்.. உனக்கு தெரியாது கங்கா உன்னோட ஒவ்வொரு முன்னேற்றதிலும் நான் உனக்கு துணையா இருந்ததா தான் நீ நினைச்சிருப்ப.. நீ படிச்சது, உன்னோட தொழில், நீ வாங்கின வீடு இதுலல்லாம் உனக்கு ஊக்கம் கொடுத்து உன்னை செயல்பட வச்சது நான் தான் நீ நினைச்சிருப்ப..

ஆனா இத்தனையும் எனக்கு பின்னால இருந்து செய்ய வச்சது துஷ்யந்த் தான்.. எனக்கு தோழியா உன்மேல அக்கறை இருந்தது.. ஆனா இவ்வளவு அளவுக்கு நான் யோசிச்சிருப்பேனான்னு எனக்கு தெரியல.. ஆனா துஷ்யந்தோட நினைவு முழுசும்  உன்னோட முன்னேறத்துல  தான் இருந்தது. அவரா முன்வந்து அதை செஞ்சா நீ ஏத்துக்கமாட்டேன்னு என் மூலமா எல்லாமே செஞ்சாரு..”

“எனக்கு தெரியும் இளங்கோ.. உனக்கு பின்னாடி துஷ்யந்த் இருந்து தான் எல்லாமே செய்றார்னு எனக்கு தெரியும்.. நான் நினைச்சிருந்தா அப்பவே அதெல்லாம் வேண்டாம்னு நிராகரிச்சிருக்க முடியும்.. ஆனா அந்தளவுக்கு அவரை வேதனை படுத்த நான் விரும்பல.. அவர் மனசளவுல காயப்பட்டுடக் கூடாதுன்னு தான் அவரோட உதவியெல்லாம் ஏத்துக்கிட்டேன்.”

“இதெல்லாம் உனக்கு தெரிஞ்சிருக்கலாம் கங்கா.. ஆனா உனக்கு தெரியாதது ஒன்னு இருக்கு..  எப்பவோ அவர்க்கிட்ட நீ எழுதின ஒரு சிறுகதையை பத்தியும், அது பத்திரிகைக்கு அனுப்பிச்சு அது பிரசுரம் ஆகாததை பத்தியும் அவர்க்கிட்ட பேசியிருக்க.. உனக்கு கதை எழுதுறதுல ஆர்வம் இருக்குன்னு சொல்லியிருக்க, அப்போ அவர் முழுசா கூட குணமாகாத நேரம்.. ஆனா நீ சொன்னதை அப்படியே மனசுல பதிய வச்சவர், உன்னோட ஆசையை நிறைவேத்த ஆசைப்பட்டார்..  நீ எழுதணும், அது புத்தகமா வெளிவரணும்னு நினைச்சார்.. ஆனா கண்டிப்பா  நீ எழுதினாலும் யார்க்கிட்டேயும் புத்தகம் வெளிவர நீ அனுகமாட்டேன்னு எனக்கு ஒரு பதிப்பகத்தையே ஆரம்பிச்சு கொடுத்தாரு தெரியுமா?

அவர் நினைச்சிருந்தா அவரே ஒரு பதிப்பகம் ஆரம்பிச்சு என்னை அதுல வேலைக்கு சேர்த்திருக்கலாம்.. ஆனா நீ மட்டுமில்ல நானும் முன்னேறணும்னு அவர் ஆசைப்பட்டார். இதை ஒரு நண்பனா எனக்கு செஞ்சதா நீ நினைக்கலாம். ஆனா உனக்காகவே அவர் என்னை நண்பனா ஏத்துக்கிட்டாருன்னு தான் நான் சொல்வேன்.

அவர் சொல்லி தான் நீ கதை எழுதுன்னு நான் உன்கிட்ட சொன்னேன்.. எனக்காக நீயும் ஒத்துக்கிட்ட.. அவர் நினைச்சது போலவே நான் தான் எழுதுறேன்னு வெளி உலகத்துக்கு தெரிய வேண்டாம்னு சொன்னது மட்டுமில்லாம, சகுந்தலாங்கிற புனைப் பெயரில் நீ எழுத போறேன்னு சொன்னதும் அவர் எவ்வளவு சந்தோஷப்பாட்டார்னு சொல்ல எனக்கு வார்த்தையே வரல.. நீ அவரை மனசுல வச்சு தான் சகுந்தலா என்கிற பேரை தேர்ந்தெடுத்த, உன்னோட மனசுல அவருக்கு இடம் இருக்குன்னு ஒரு குழந்தை போல என்கிட்ட துள்ளி குதிச்சு சொன்னார் தெரியுமா? ஆனா அவரை நீ மேலும் மேலும் கஷ்டப்படுத்தி தான் பார்க்கிற..”

“என்ன சொல்ற இளங்கோ.. நீ சொல்றது நிஜமா?”

“ஆமாம்.. ஒவ்வொரு முறையும் நீ தான் எழுத்தாளர் சகுந்தலாங்கிறது துஷ்யந்துக்கு தெரியக் கூடாதுன்னு சொல்லுவல்ல.. ஆனா நீ அப்படி உருவாகி நிக்க துஷ்யந்த் தான் காரணம்.. இங்கப்பாரு கங்கா இத்தனை நாள் என்ன வேணும்னாலும் நடந்திருக்கட்டும்.. இனியாவது எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும்.. இந்தா துஷ்யந்த்க்கிட்ட பேசு.. நீ இங்க தான் இருக்கிறன்னு சொல்லு..” என்று அலைபேசியை கையில் தந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.