(Reading time: 33 - 65 minutes)

னக்கு நீ சொல்றதெல்லாம் புரியுது இளங்கோ ஆனா எனக்கு கொஞ்சம் அவகாசம் வேணும்.. இப்போ நீயே துஷ்யந்துக்கு போன் பண்ணி அவர்க்கிட்ட சமாதானமா ஏதாச்சும் பேசு.. இங்க இருந்து அவர் எப்படி போனாருன்னு பார்த்தல்ல.. அவர் நல்லப்படியா வீட்டுக்கு போனாரான்னு விசாரி.. முடிஞ்சா நேரா அவரை போய் பார்த்து பேசு..” என்று அவனிடமே அலைபேசியை கொடுத்தாள்.

“ஒவ்வொரு முறையும் அவரை கஷ்டப்படுத்திட்டு அப்புறம் அவர் மேல அக்கறையை காட்றதும், அவரை நினைச்சு வருத்தப்பட்றதுமே வேலையா போச்சு.. இங்கப்பாரு உனக்காக இல்லன்னாலும் துஷ்யந்துக்காக நான் இப்போ அவர்க்கிட்ட பேசறேன்.. ஒருவேளை அவரோட நிலையை எனக்கு பார்க்க சகிக்கலன்னா நீ இங்க தான் இருக்கன்னு சொல்லிடுவேன்.. அப்புறம் என்மேல கோபப்படாத..” என்றவன் துஷ்யந்த் எண்ணுக்கு தொடர்பு கொண்டான்.

மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டு அங்கே என்ன சொல்லப்பட்டதோ, “என்ன?” என்று இளங்கோ அதிர்ந்தான். அதைக்கேட்டு கங்காவின் மனம் பதறியது. மேலும்,

“அப்படியா? எப்போ? எங்க? இப்போ எப்படி இருக்கு? இதோ உடனே வரேன்” என்ற அவனின் அடுத்தடுத்த வார்த்தைகள் இரு பெண்களுக்கும் அதிர்ச்சியை தான் கொடுத்தது. அவன் அலைபேசி அழைப்பை துண்டித்ததும், “என்னாச்சு இளன்?” என்று முதலில் யமுனா தான் பதட்டத்தோடு கேட்டாள். ஏனெனில் கங்காவிற்கு அதிர்ச்சியில் வார்த்தைகளே வரவில்லை. இளங்கோ வாயில் இருந்து நல்ல வார்த்தைகளே வரவேண்டும் என்று அவள் எதிர்பார்த்தாள். ஆனால் அவனோ,

“துஷ்யந்திற்கு ஆக்ஸிடென்டாம்.. துஷ்யந்த் போன்ல இருந்து வேற ஒருத்தர் பேசினாங்க..” என்று அவள் தலையில் இடியை இறக்கினான்.

“என்ன சொல்ற இளங்கோ.. துஷ்யந்த்க்கு என்னாச்சு? அவர் நல்லா தானே இருக்கார்.. ஏதும் ஆபத்து இல்லையே”

“ம்ம் இப்போ வந்து கேளு.. ஏற்கனவே உயிருக்கு போராடி வந்தவருன்னு கவலை இருக்கா.. இப்பவும் அவரை காயப்படுத்தியிருக்க” என்று திட்டியதற்கு,

“அய்யோ இளன் இந்த நேரம் தான் அக்காவை திட்டனுமா? மாமாக்கு இப்போ எப்படி இருக்குன்னு முதலில் சொல்லுங்க” என்று யமுனா அதட்டினாள்.

“சரியா தெரியல நான் முதலில் போறேன்.. ரெண்டுப்பேரும் பின்னாடி வாங்க” என்று மருத்துவமனையின் பேரை சொல்லிவிட்டு தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான். அவசரத்துக்கு சேலை கட்ட நேரம் இல்லாததால்  ஒரு சுடிதாரை மாட்டிக் கொண்ட யமுனா அழுது கரைந்துக் கொண்டிருந்த கங்காவை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் கிளம்பினான்.

ஆட்டோவில் வழி நெடுக்க கங்கா அழுதப்படி புலம்பிக் கொண்டே வந்தாள். “துஷ்யந்த் விஷயத்துல நான் ரொம்பவே சுயநலமா நடந்துக்கிட்டேன் யமுனா.. எனக்கு நரகத்துல கூட இடம் கிடைக்காது.. அவர் மனசறிஞ்சு எந்த தப்பும் செய்யவே இல்லை.. அப்புறம் கடவுள் ஏன் அவருக்கே எப்பவும் கஷ்டத்தை கொடுக்கிறார்.. அதுக்கு பதிலா எந்த கஷ்டமா இருந்தாலும் எனக்கு கொடுக்கலாமில்ல..” என்று பேசிக் கொண்டே வந்த போது, முன்பு துஷ்யந்த் மருத்துவமனையில் இருந்த போது அவள் சென்ற அந்த கோவில் கண்ணுக்கு தென்படவே ஆட்டோவை நிறுத்தி கோவிலுக்குள் ஓடினாள்.

அம்மனுக்கு முன்னால் சென்று நின்றவள், “நான் மனசார தான் ஒவ்வொரு முறையும் விரதம் இருந்தேன்.. எனக்கு மட்டும் துஷ்யந்த் கூட வாழ ஆசை இல்லையா? ஏன் எல்லோரையும் போல எங்களுக்கு சாதாரண வாழ்க்கையை கொடுக்கலன்னு உன்கிட்ட எத்தனை முறை வேண்டியிருக்கேன்.. இருந்தும் ஏன் எங்களை இப்படி சோதிக்கிற.. அவருக்கே ஏன் எப்பவும் கஷ்டத்தை கொடுக்கிற.. அவருக்கு எதுவும் ஆகிடக் கூடாது..” என்று வேண்டுதல் வைத்தவள், குங்குமத்தை எடுத்து நெற்றியிலும் தாலியிலும் வைத்துக் கொண்டு திரும்ப மருத்துவமனைக்கு கிளம்பினார்கள்.

ஆட்டோவை விட்டு இறங்கியதும் அவசர அவசரமாக கங்கா மருத்துவமனைக்குள் ஓடினாள். அங்கே ரிஷப்ஷனில் நின்றிருந்த பெண்ணிடம் விபத்துக்குள்ளாகி அனுமதிக்கப்பட்டவரை பற்றி கேட்டதும், ஐ.சி.யூ வில் இருப்பதாக அந்த பெண் தகவல் கூறினாள். அதற்குள் ஆட்டோவிற்கு பணம் கொடுத்துவிட்டு யமுனாவும் உள்ளே வர, இருவரும் ஐ.சி.யூ இருக்கும் திசையை நோக்கிச் சென்றனர். துஷ்யந்திற்கு விபரீதமாக எதுவும் ஆகியிருக்கக் கூடாது என்ற வேண்டுதலோடு அவள் ஐ.சி.யூ வின் அருகே செல்ல, அங்கே இளங்கோவோடு நின்று சாதாரணமாக பேசிக் கொண்டிருந்த துஷ்யந்தை பார்த்ததும் தான் மனம் நிம்மதியானது. அவனை நல்லப்படியாக பார்த்ததும் அதுவரை பட்ட வேதனைகள் மட்டுமில்லாமல், அவளிடம் இருந்த தயக்கங்களும் மறைந்து, “துஷ்யந்த்..” என்று ஓடிப் போய் அவனை கட்டிக் கொண்டாள்.

கங்காவின் குரல் கேட்ட வியப்பில் அவன் திரும்பி பார்க்கும் போதே அவனை அவள் அணைத்திருந்தாள். கங்காவை திரும்ப பார்த்ததே அவனுக்கு மன நிம்மதியை கொடுத்தது. இதில் அவளது அணைப்பும், அவனை மூன்றாவது முறையாக  பேர் சொல்லி வேறு  அழைத்திருக்கிறாள். அதுவும் அவனை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு சென்றது. அவளோ அவனை அணைத்தப்படியே,

“உங்களுக்கு ஒன்னுமில்லல்ல.. இளங்கோ உங்களுக்கு ஆக்ஸிடெண்ட்னு சொன்னதும் நான் பயந்துட்டேன் தெரியுமா? எல்லாம் என்னால தானே” என்று அழுதாள்.

“எனக்கு ஆக்ஸிடெண்டா.. இளங்கோ அப்படியா சொன்னான்..” என்றப்படி அவனை பார்க்க,

“அது சாரி துஷ்யந்த்.. கங்கா உங்களை பார்க்க மாட்டேன்னு சொல்லிக்கிட்டு இருந்தா, அவளை மீறி அவ கிடைச்சதை உங்கக்கிட்ட சொல்லவும் முடியல அதான்..” என்று இழுத்தான்.

அவனை முறைத்துவிட்டு, “அப்போ ஆக்ஸிடெண்ட் இல்லன்னா எதுக்கு மாமா ஹாஸ்பிட்டல் வந்திருக்கீங்க..” என்று யமுனா கேட்டாள். அதில் துஷ்யந்தை விட்டு விலகிய கங்கா ஆனாலும் அவனை நெருங்கி நின்றப்படி அவனை பார்த்தாள்.

“ அது ஆக்ஸிடெண்ட் ஆனது என்னோட கார் இல்ல, எனக்கு முன்ன போன கார்.. நான் கங்காப்பத்தி யோசிச்சிக்கிட்டே ட்ரைவ் பண்ணிட்டு வந்தேன்.. இதுல முன்னாடி போன கார் ஏதோ கோளாரா இல்லை சரியா ஓட்டலையான்னு தெரியல, அது திடிர்னு தடுமாற அதை கவனிக்காம போனதுல என்னோட கார் அந்த காரை இடிக்க போக கடைசி நிமிஷத்துல ப்ரேக் போட்டு காரை நிறுத்த ட்ரை பண்ணாலும் முடியாம கொஞ்சம் பக்கத்துல ஒரு மரத்துல கார் இடிச்சிடுச்சு.. ஆனா எனக்கு ஒன்னுமில்ல.. என்னைப்போலவே எதிரே வந்த லாரிக்கும் தனக்கு எதிரே வரும் கார் ப்ராப்ளம் ஆகும்னு எதிர்பார்க்காததுல லாரி கார் மேல மோதிடுச்சு.. லாரி ட்ரைவர்க்கு லேசா தான் அடி..

ஆனா கார்ல வந்த ரெண்டுப்பேருக்கு தான் பலமா அடி.. நான் தான் ஆம்புலன்ஸ்க்கு போன் போட்டு இங்க கொண்டு வந்து அட்மிட் பண்ணேன்.. அப்போ தான் இளங்கோ என்கிட்ட பேசவே விஷயத்தை சொன்னேன்..” என்று விளக்கமாக கூறினான்.

“ஏன் இளன் இப்படி மாமாவுக்கு ஆக்ஸிடெண்ட்னு சொல்லி எங்களை பயமுறுத்தினீங்க?” என்று யமுனா கோபமாக கேட்டாள்.

“இப்படி ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட் தான் உங்க அக்காவை இங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு யம்ஸ்.. இல்லன்னா இன்னும் ஏதாச்சும் சாக்கு சொல்லிக்கிட்டு துஷ்யந்தை தவிக்க விட்ருப்பா..” என்று அவன் சொன்னது யமுனாவிற்கும் சரியாக தான் பட்டது. துஷ்யந்தோடு நெருக்கமாக நின்றிருந்த தன் அக்காவை பார்த்துக் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.