(Reading time: 33 - 65 minutes)

ன்னவோ என்னோட மனசு படபடன்னு அடிச்சிக்கிச்சு.. அதான் இளங்கோக்கிட்ட உங்களுக்கு போன் செய்ய சொன்னேன்.. கடவுள் கிருபைல ஒன்னும் நடக்கல.. ஆனாலும் மரத்துல இடிச்சதே கொஞ்சம் பலமா இடிச்சிட்டு இருந்தா.. இதுக்கு காரணம் நான் தானே.. இளங்கோ சொன்னது போல உங்களுக்கு கஷ்டத்தை தான் கொடுக்கிறேன்..  நான் மட்டும் அங்க இருக்கிறது தெரிஞ்சிருந்தா இவ்வளவு கவலையோட கிளம்பியிருக்க மாட்டீங்க.. உங்க மனசு தெரிஞ்சும் நான் இதே தப்பை எப்பவும் செஞ்சுக்கிட்டு இருக்கேன்..” என்று வருத்தப்பட்டாள். இன்னமும் அவள் கண்களில் கண்ணீர் வந்துக் கொண்டு தான் இருந்தது.

“இங்கப்பாரு கங்கா.. மனசு கவலையோடு போனதென்னமோ உண்மை தான்.. ஆனா நான் முன்ன மாதிரி இல்ல.. நான் அன்னைக்கு உன்கிட்ட போன்ல சொன்னது போல எனக்கு உன்னோட ரொம்ப காலம் வாழ ஆசை.. கவலையை மறக்க குடிக்கறதோ, இல்ல செத்தா தான் என்னன்னு நினைக்கிறதோ இப்போ கிடையாது..  அன்னைக்கு தூக்கத்துல என்னோட பேரை சொன்னப்பவே உன்னோட மனசு எனக்கு தெரிஞ்சிடுச்சு.. இதுல இன்னைக்கு நம்ம உறவு என்னன்னு தெரிஞ்சப்பிறகு, நான் எப்படி அப்படியெல்லாம் நினைப்பேன்..”

“நானும் உங்களுக்கு அப்படியெல்லாம் இனியும் தோனாத படி தான் நடந்துப்பேன்..  உங்களை விட்டு எப்பவும் பிரியணும்னு இனி நினைக்கவே மாட்டேன்.. உங்க மனைவியா உங்கக் கூட தான் என்னோட வாழ்க்கை.. நீங்களா போன்னு சொன்னா கூட போக மாட்டேன்..” என்றவள் அப்படியே அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.  அவன் மனம் அப்படியே நிம்மதியிலும் மகிழ்ச்சியில் நிறைந்தது. அருகே இருந்த இளங்கோ, யமுனாவும் மனதிலும் எல்லையில்லா மகிழ்ச்சி.

அடுத்தவர் என்ன பேசுகிறார்கள்.. என்ன நினைக்கிறார்கள் என்று கங்கா இப்போதெல்லாம் கவலைப்படுவதில்லை என்றாலும், பொது இடத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதில் கங்கா எப்போதும் கவனமாக இருப்பாள். ஆனால் இன்று தன்னை சுற்றியிருக்கும் சூழலை மறந்து போயிருந்தாள். துஷ்யந்தை நல்லப்படியாக பார்த்தாலும் அவளின் பதட்டம் இன்னும் குறையவில்லை. துஷ்யந்த் அதை உணர்ந்தவனாக, “இளங்கோ.. நான் கங்காவை அவளோட வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன்.. இங்க பேஷண்டோட ரிலேடிவ் வந்ததும் நீ கிளம்பி வா.. அதுவரைக்கும் பார்த்துக்க..” என்றவன், யமுனாவையும் உடன் அழைத்தான்.

அவர்களுக்கு தனிமை கொடுக்க நினைத்தவள், “நீங்க ரெண்டுப்பேரும் கிளம்புங்க மாமா.. வாணிம்மா, நர்மதா, அப்புறம் உங்க வீட்டு ஆளுங்க எல்லாம் அக்காவையும், அக்காவை தேடிப்போன உங்களையும் நினைச்சு கவலையா இருப்பாங்க.. நான் நேரா போய் முழு விவரத்தையும் சொல்லி கூட்டிட்டு வரேன்..” என்றவள், இளங்கோவிடமும் சொல்லிவிட்டு கிளம்பினாள்.

நேராக இருவரும் வீட்டுக்கு சென்றனர், வீடு பூட்டி இருந்தது. “அய்யோ வீடு பூட்டி இருக்கே” என்று துஷ்யந்த் வாய்விட்டு சொல்ல,

“வாணிம்மா சாவியை இங்க தான் வச்சிட்டு போயிருப்பாங்க..” என்று சொல்லி, வாணி வழக்கமாக வைக்கும் வீட்டின் பக்கவாட்டு ஜன்னல இருக்கும் இடத்திற்கு சென்று சாவியை எடுத்தவள், கதவைத் திறந்தாள். இருவரும் உள்ளே நுழைந்ததும் துஷ்யந்த் கங்காவின் முன் மண்டியிட்டான்.

கங்காவோ பதறி போய் அவனை எழுப்ப முயற்சி செய்தாள். “என்ன பண்றீங்க முதல்ல எழுந்திருங்க..”

“என்னால நீ ரொம்ப கஷ்டப்பட்ருக்கல்ல கங்கா.. அதுக்கு முதல்ல நீ என்னை மன்னிக்கணும்..”

“நீங்க முதலில் எழுந்திருங்க.. நீங்க என்ன தப்பு செஞ்சீங்க.. இதெல்லாம் நடக்கணும்னு இருந்தது நடந்திடுச்சு..  இதெல்லாம் தெரிஞ்சே தானே இந்த கஷ்டத்தை  நான் அனுபவிச்சேன்.. சொல்லப்போனா இதுல உங்க தப்பு எதுவும் இல்ல.. எனக்காக, என் தங்கச்சிக்காக, என்னோட சுய கௌவரவத்துக்காகன்னு யோசிச்சேனே தவிர, உங்களைப் பத்தி நான் யோசிக்கல தானே..”

“இருந்தாலும் எனக்கு மட்டும் இந்த கல்யாணம் ஞாபகம் இருந்திருந்தா இவ்வளவு நடந்திருக்காதுல்ல.. நீ இவ்வளவு கஷ்டப்பட்ருக்க மாட்டல்ல கங்கா..”

தினம் தினம் அவள் மனதில் தோன்றிய உறுத்தல் தான், இருந்தாலும் அவன் அதை வேதனையோடு சொல்லும் போது அவள் உறுத்தல்கள் எல்லாம் மறைந்து போயிருந்தது.

சிறிது நேரத்திற்கெல்லாம் வாணி, துஷ்யந்த் குடும்பம், இளங்கோ அனைவரும் அங்கு வந்துவிட்டனர். வந்ததுமே  கோமதியும் விஜியும் கங்காவிடம் மன்னிப்பு கேட்டனர். அதிலும் விஜி அவர் முன்பு கங்காவிடம் பேசியதற்கு மிகவுமே கூனி குறுகி போனார். கங்காவிற்கே அதை பார்த்து சங்கடமாக போய்விட்டது. அதெல்லாம் முடிந்து போனது. அதை திரும்ப திரும்ப பேச வேண்டாம் என்று சமாதனப்படுத்தினாள்.

“அண்ணி நம்ம ராஜாக்கு முன்னமே கல்யாணம் ஆகிடுச்சுன்னு அந்த ஜோசியர் சொன்னது உண்மை ஆயிடுச்சுல்ல..” என்று விஜி சொன்னதும், எல்லாம் புரியாத பார்வை பார்க்க, ஜோசியர் சொன்னதை விஜி விளக்கமாக கூறினார்.

“விஜி ஒரு நல்ல நாளா பாரு நாம  முறைப்படி கங்காவை வீட்டுக்கு அழைச்சிட்டு போகணும்..” என்று கோமதி கூறியதற்கு,

“அது எப்படிம்மா அப்படில்லாம் கூட்டிட்டு போக வேண்டாம்..” என்று செல்வா கூற, மற்றவர்கள் அவனை அதிர்ச்சியோடு பார்த்தனர்.

அத்தனை நேரம் கொஞ்சம் விலகியே நின்றிருந்தவன், அப்போது தான் துஷ்யந்த், கங்கா அருகில் வந்தான்.. “அண்ணா, அண்ணி உண்மையிலேயே நான் செஞ்சது பெரிய தப்பு.. உங்கக்கிட்ட இவ்வளவு நேரம் மன்னிப்பு கேட்க கூட தகுதியில்லாதவனா தான் நின்னுக்கிட்டு இருக்கேன்.. ஏன்னா அப்படி ஒரு தப்பை செஞ்சுருக்கேன்.. என்னை நீங்க மன்னிப்பீங்களா?”

“நீங்க ஒன்னும் அவ்வளவு பெரிய தப்பெல்லாம் செஞ்சுடல.. நீங்க பேசினதுல நான் வருத்தப்படவுமில்ல.. உங்க அண்ணன் மேல நீங்க எவ்வளவு அன்பும் அக்கறையும் வச்சிருக்கீங்கன்னு உங்க பேச்சுல புரிஞ்சுது.. நீங்க உங்க அண்ணனுக்காக நியாயமா தான் யோசிச்சீங்க.. அது சரின்னு பட்டதால தான் நானும் இப்படி ஒரு முடிவு எடுத்தேன்.. என்ன ஒன்னு நான் உங்களுக்கு யாரோ.. என்னை நீங்க சரியா புரிஞ்சிக்கலன்னா கூட அது தப்பில்ல.. ஆனா உங்க அண்ணன் இப்படி தப்பானவரா இருந்திருப்பாரான்னு யோசிச்சிருக்கணும்.. சரி விடுங்க நான் விஜி அம்மாவுக்கு சொன்னது தான், முடிஞ்சது முடிஞ்சதாகவே இருக்கட்டும்.. நீங்க என்னை அண்ணின்னு கூப்பிட்டதிலேயே உங்க தப்பெல்லாம் சரியாகிடுச்சு..”

“அம்மா.. அண்ணாக்கும் அண்ணிக்கும் திரும்ப முறைப்படி ஊரறிய கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போகணும்மா.. அது தான் நாம அவங்களுக்கு கொடுக்கிற கௌரவம்” என்று செல்வா சொன்னதும், கோமதியும் அதை ஆமோதித்தார். ஆனால் கங்காவோ அதை மறுத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.