(Reading time: 21 - 41 minutes)

சோகமே உருவானதாக அந்த இரவு அமைந்தது. உலகம் எதையோ இழக்கப் போவது போல் மேகங்களில் இருந்த மழைத் துளிகளைக் கண்ணீராகச் சிந்தியது. மரம், செடி கொடிகள் தென்றலாய் வீசாமல் தங்கள் எதிர்ப்புகளைக் காட்டின. அது தற்செயலாக நிகழ்ந்தாலும் சம்யுக்தனுக்காகச் செய்வது போல் இருந்தது. வாள் வீசும் வீரன், கம்பீரமான நடையும் பூலோக மங்கையர்களை மயங்க வைக்கும் அழகான முகமுமாய் அவனைக் கண்டிருந்த உலகம் அந்த நிலைமையில் அவன் இருப்பதைப் பார்த்தவுடன் அவ்வாறு செய்தன.

அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத பகைவர்கள், அவர்கள் தீட்டிய தீய திட்டத்தின் படி செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள். காட்டுப் பகுதியைக் கடந்தனர். ஊர் அவர்களை வரவேற்றது. அவர்கள் குதிரையின் வேகத்தை குறைத்தனர். ஏதோ பேசுவதற்காக குதிரைகளைச் சிறிது நேரம் நிறுத்தினர்.

அதில் ஒருவன், "இப்பொழுது நாம் என்ன செய்யப்போகிறோம்? மறைந்து செல்லப்போகிறோமா?" என்று கேட்டான்.

"மறைந்து சென்றால் தான் ஆபத்து நம்மைத் தேடி வரும். நாம் ஆபத்தின் உள்ளே பாதுகாப்பாகச் செல்லப்போகிறோம்" என்று முகமூடி மனிதன் கூறினான்.

அதைக் கேட்டு எல்லோரும் ஒருவரையொருவர் புதிராய்ப் பார்த்துக்கொண்டனர்.

"தாங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லையே" என்று ஒருவன் கேட்டான்.

முகமூடி மனிதன் எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தான். அவனுடைய முகம் பிணந்தின்னிக் கழுகு போல் இருந்தது.

"ஊரினுள் தான் நாம் செல்லப்போகிறோம். யாரேனும் கேட்டால் சம்யுக்தனைப் பற்றிச் சொல்லிவிட்டுத் தான் போகிறோம். அவர்கள் முன்னாலேயே பாதுகாப்பாகச் செல்லப்போகிறோம். பேசுவதற்கு நேரமில்லை, வாருங்கள். நாம் செல்வோம்" என்று கூறிய முகமூடி மனிதன்  குதிரையை ஓட கட்டளை இட்டான். ஏனையவர்களும் அவனைத் தொடர்ந்தார்கள்.

பார்த்திபனும் பூபதியும் அரை மயக்கத்திலே மிதந்து கொண்டிருந்தார்கள். பார்த்திபனின் சிந்தனை ஓட்டம் மட்டும் தடைபடாமல் இருந்தது. அப்பொழுதும் அவன் சம்யுக்தன் மேல் நம்பிக்கை வைத்திருந்தான். சம்யுக்தன் பெரும்பாலும் வீரத்தை விட புத்திக்கூர்மையைத் தான் பயன்படுத்துவான் என்று அவனுக்குத் தெரியும். காட்டில் அவனும் சம்யுக்தனும் பகைவர்களோடு மோதியது அவனுடைய மனக் கண்ணில் காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தது. சம்யுக்தன் சாதாரணமாக வீழ்ந்ததை எண்ணி அவன் ஆச்சர்யப்பட்டான். ஏனென்றால் சம்யுக்தனால் அவர்களை எதிர்த்திருக்க முடியும். பிறகு, ஏன் அவன் வீழ்ந்தான் என்று அவன் சிந்தனையை ஓட விட்டுக்கொண்டிருந்தான்.

பகைவர்கள் ஊருக்குள் சென்று கொண்டிருந்தார்கள். மக்கள் தங்கள் இல்லத்தில் நிம்மதியாகக் கண்ணுறங்கிக் கொண்டிருந்ததால் வெளியில் யாரும் இல்லை. நிலவு மட்டும் அவர்களைப் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது.

முகமூடி மனிதன் எதையோ சாதித்துவிட்டதைப் போல் முகத்தை வைத்திருந்தான். ஒரு பெரிய இரையைப் பல ஓநாய்கள் ஒன்றாக சேர்ந்து அடித்துச் சாப்பிடுவது போல் இருந்தது அவனுடைய கண்கள்.

அவர்கள் ஒரு நீண்ட தெருவில் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் முன் இருள் சூழ்ந்திருந்தது. இருந்தும் அவர்கள் வேகத்தைக் குறைக்காமல் சென்றார்கள். அப்போது, அவர்களுக்கு நேர் எதிர்த் திசையில் சில குதிரைகளின் காலடிச் சத்தம் கேட்டது. அதைக் கேட்ட பகைவர்கள் ஒரு கணம் திகைத்தார்கள்.

இருந்தும் முகமூடி மனிதன், "யாரும் எக்காரணத்தைக் கொண்டும் பயப்படாதீர்கள்" என்று கூறினான். அவன் கூறி முடிப்பதற்குள் குதிரையில் வந்த சிலர் அவர்களைச் சூழ்ந்தார்கள். .

இரவுப் பாதுகாவலர்கள் என்று அவர்களை அழைப்பார்கள். அவர்களின் வேலை வீதிகளைக் கண்காணிப்பது. சம்யுக்தன் அரண்மனையில் அரசரிடம் கொடுத்த ஓலையால் ராஜகுரு பாதுகாப்பை இரட்டிப்பாக்கியிருந்தார். ஊருக்குள் யாரும் அத்துமீறி நுழையாமல் தடுக்க எல்லா வீதிகளையும் கண்காணிக்க கட்டளையிட்டிருந்தார்.

இரவுப் பாதுகாவலர்கள் பகைவர்களின் வழியை மறித்துக்கொண்டு நின்றார்கள். வீரர்களில் ஒருவன் தீப்பந்தத்தை எடுத்து உயரே பிடித்து பகைவர்களின் முகங்களைப் பார்த்தான். சம்யுக்தன் குதிரையில் படுத்துக் கிடப்பதையும் பார்த்தான்.

அதிகாரத் தோரணையில், "யார் நீங்கள்? குதிரையில் படுத்துக் கிடப்பது யார்?" என்று கேள்வி அம்புகளை வீசியபடி குதிரையில் இருந்து இறங்கி அவர்கள் அருகில் சென்றான்.

பகைவர்கள் பேசாமல் அமைதி காத்தனர். அவர்களின் கண்களில் துளியும் அச்சம் இல்லை. முகமூடி மனிதன் பதிலளிக்கும் தொனியில் குரலைத் தாழ்த்தி பேசினான்.

"நாங்களும் அரண்மனைப் பாதுகாவலர்கள் தான். சம்யுக்தனும் அவனுடைய நண்பர்களும் காட்டுப் பகுதியில் காவல் காத்துக்கொண்டிருந்தபோது பரண் முறிந்து கீழே விழுந்து விட்டார்கள். அதனால் அவர்களை வைத்தியரிடம் அழைத்துச் செல்கிறோம்" என்று கூறினான்.

பாதுகாவலன் சம்யுக்தனின் முகத்தைத் தூக்கிப் பிடித்தபடி பார்த்தான். அவனுடைய நெற்றியில் வழியும் குருதியைப் பார்த்துவிட்டு, உடலைக் கண்களால் ஆராய்ந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.