(Reading time: 21 - 41 minutes)

அவன் வலியால் புழு போல் துடித்தான். இளவரசன் அவன் அருகே சென்று "நீ என்னை முதுகில் குத்தினாலும் உன் மார்பிலே அல்லவா வாளைப் பாய்ச்சியிருக்கிறேன். இது தான் வீரபுரத்தின் சிறப்பு. எதிரிக்கும் ஒரு அங்கீகாரத்தைக் கொடுப்போம்" என்று கூறினான்.

காளிங்கன் அதைக் கேட்டு மரணத்தருவாயிலும் சிரித்தான்.

"சம்யுக்தனை எங்கே வைத்திருக்கிறீர்கள்?"

காளிங்கன் இளவரசனை அருகில் அழைத்தான். இளவரசன் காளிங்கனின் அருகில் சென்றான். காளிங்கன் தன் உடலை மெல்லத் தூக்கி இளவரசனின் காதருகில் சென்று "சொல்ல முடியாது" என்று கடைசியாக ஒரு சிரிப்பை சிரித்து உயிரை விட்டான்.

இளவரசன், அவன் உடலில் சொருகியிருந்த வாளை எடுத்தான். அவனுடைய குருதி வாளில் வழிந்துகொண்டிருந்தது. காளிங்கனை ஒரு பார்வை பார்த்து, மீண்டும் அவ்விடத்தை நோட்டமிட்டான்.

அப்போது அவன் கண்களில் செடியில் தொங்கிக்கொண்டிருந்த முத்துமாலை நிலவு வெளிச்சத்தில் மின்னியது. அதனருகே சென்று முத்துமாலையைக் கையில் எடுத்து அதை வெறித்தான். பூங்கொடி, முத்துமாலையின் கீழ் ஓலை புதைக்கப்பட்டிருந்ததாகக் கூறியது அவன் நினைவுக்கு வந்தது. உடனே சிறிதும் தாமதிக்காமல், பூமியைச் சிறிது தோண்டினான். ஓர் ஓலை புதைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தான். அதை எடுத்து நிலவின் ஒளியில் படித்தான். அதைப் படித்து முடித்த பின், இளவரசனின் முகம் ஆச்சர்யத்தில் உறைந்து போயிருந்தது.

"சம்யுக்தனுக்கு நிகர் சம்யுக்தனே!" என்று வாய்விட்டே கூறினான்.

ஏதோ சாதித்து விட்டதைப் போல் இளவரசனின் முகம் மலர்ந்தது. மீண்டும் ஒரு முறை அவ்விடத்தை நோட்டமிட்டான். புகையின் நெடி சற்று குறைந்திருந்தது.

திடீரென்று, பிரளயம் வந்தது போல் ஓர் அதிர்வு ஏற்பட்டது. குதிரைகள் கனைக்கும் சத்தமும் மனிதர்களின் குரல்களும் ஒலித்தன. குறுகிய நேரத்திலேயே ஒரு பெரிய படை இளவரசனைச் சுற்றி நின்றது. இளவரசன் எந்த பரபரப்பும் இல்லாமல் படையை வெறித்தான்.

வந்தது அரண்மனை வீரர்கள் தான். தான் சொன்னதை இடும்பன் வெகு விரைவிலேயே செய்து விட்டான் என்று மனதினுள் எண்ணினான். இடும்பன் இளவரசனை நோக்கி ஓடி வந்தான்.

இளவரசனின் தோள்களில் வழிந்திருந்த குருதியைப் பார்த்து, "இளவரசே! என்ன இது?" என்று பதற்றத்தோடு கேட்டான்.

இளவரசன் ஓலையைத் தன் ஆடையில் சொருகியபடி காளிங்கனின் உடலைப் பார்த்துக் கை காட்டினான்.

இடும்பனுக்கு எல்லாம் கண நேரத்தில் புரிந்து போனது. "ஐயோ! இளவரசே தவறு செய்து விட்டேன். இவன் மேல் அப்பொழுதே சந்தேகம் எழுந்தது. நான் உங்களை எச்சரிக்கை செய்திருக்கவேண்டும். எல்லாம் என் தவறு" என்று பதறினான்.

ரவிவர்மன், அதைப் பொருட்படுத்தாமல், "நான் சொன்னதைச் செய்தாயா?" என்று கேட்டான்.

"செய்தேன் இளவரசே! நீங்கள் சொன்னது போல் பூங்கொடியை அவளுடைய இல்லத்தில் விட்டுவிட்டு படையைத் திரட்டச் சென்றுகொண்டிருந்தபோது வழியில் பாதுகாவலர்களைப் பார்த்தேன். அவர்கள், வைத்தியரின் வீட்டில் சம்யுக்தனையும் காணவில்லை; வைத்தியரையும் காணவில்லை என்று கூறினார்கள். அவர்கள் சம்யுக்தனைத் தேடிக் கண்டுபிடிக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள்" என்று இடும்பன் கூறினான்.

இளவரசன் அமைதியாக அவன் கூறியவற்றைச் செவிமடுத்தான்.

இடும்பன், "சம்யுக்தனை எப்படிக் கண்டுபிடிப்பது இளவரசே?" என்று கேட்டான்.

இளவரசன் இடும்பனைப் பார்த்து சிறு புன்னகையை வீசி, "அவன் எங்கே இருக்கிறான் என்று எனக்குத் தெரியும்" என்று கூறி "படைகள் தயாரா?" என்று கேட்டான்.

"எல்லாம் தயார் இளவரசே!"

"கிளம்புவோம்" என்று கூறி இளவரசன் தன் குதிரையை நோக்கி வேகமாக நடந்தான்.  

தொடரும்...

பாகம் - 01 - அத்தியாயம் 11

பாகம் - 01 - அத்தியாயம் 13

{kunena_discuss:1135}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.