(Reading time: 15 - 29 minutes)

தொடர்கதை - சாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 13 - சிவாஜிதாசன்

Samrat Samyukthan

அத்தியாயம் 1.13 : சம்யுக்தனின் சாதுரியம்

கடந்த அத்தியாயத்தில்... 

இளவரசன், சம்யுக்தன் காவல் புரியும் இடத்திற்கு இடுமபனுடன் சென்று கொண்டிருந்தபோது வழியில் சில வீதி பாதுகாவலர்களைச் சந்திக்கிறான். அவர்கள் மூலமாக, சம்யுக்தனுக்கு அடிபட்டு, அவனுடன் காவல் புரிந்த வீரர்கள் சிலரால் வைத்தியரின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதை அறிகிறான். பிறகு அங்கு வந்த பூங்கொடி, தான் கண்டெடுத்த ஓலையை இளவரசனிடம் கொடுக்கிறாள். அதை வாங்கிக்கொண்டு காட்டுப்பகுதிக்குச் சென்று, அங்கே தன்னைக் கொல்ல வந்த காளிங்கனின் உயிரைப் பறிக்கிறான். காட்டுப்பகுதியில் சம்யுக்தன் புதைத்து வைத்த ஓலையைக் கண்டெடுக்கிறான். படையுடன் வந்த தன் நண்பன் இடும்பனுடன் சம்யுக்தனைத் தேடி புறப்படுகிறான்.

இனி....


ரு பெரிய மாளிகையின் விசாலமான கூடம். அந்தக் கூடத்தின் நடுவே ஒரே ஒரு விளக்கு மட்டும் எரிந்துகொண்டிருந்தது. அது பிரகாசமாக எரிந்தாலும், அப் பெரிய கூடத்திற்குச் சிறு வெளிச்சத்தை மட்டுமே தர முடிந்தது. ஆனால், அதுவே பகைவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. சம்யுக்தனைக் கடத்தியவர்கள் அக்கூடத்தில் அங்கும் இங்கும் நடந்துகொண்டும் அவர்களைக் கண்காணித்துக்கொண்டும் நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருந்தனர். அவர்கள் ஒரு சிறிய பதற்றத்தோடு யாரையோ எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

கூடத்தில் சம்யுக்தன் சுயநினைவின்றி சுருண்டு கிடந்தான். அவன் தன் கண்களைத் திறக்கப் போராடி இறுதியில் வெற்றியடைந்தான். அவனுடைய இமைகள் வலியால் துடித்தன. உடலின் சக்தி வெகுவாகக் குறைந்திருந்தது. அவன் தன் சுயநினைவுக்குள் நுழைய சில நாழிகைகளைக் கடக்க வேண்டியிருந்தது.

சுயநினைவுக்குள் நுழைந்ததும் துவண்டிருந்த அவன் எழுந்திருக்க ஆசைப்பட்டபோது அவனுடைய கைகள் ஒரு தூணில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்ததை உணர்ந்தான். தான் எங்கிருக்கிறோம் என்று அவனுடைய கண்கள் அவ்விடத்தை நோட்டமிட்டன. பயங்கர பூதம் போல் தூண்கள் ஒரு பெரிய மாளிகையைத் தாங்கி இருப்பது அவன் கண்களில் தென்பட்டது. சுற்றும் முற்றும் பார்த்தான்.

அவன் எதிரில் இருந்த தூண்களில் பார்த்திபனும் பூபதியும் அவனைப் போலவே சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தார்கள். இன்னும் அவர்களுக்கு மயக்கம் தெளியவில்லை. வலியோடு இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த சம்யுக்தன் ஓர் ஆச்சர்யத்தைக் கண்டான். காணாமல் போன அவன் நண்பர்கள் அங்கே சுயநினைவு இல்லாமல் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய மெலிந்த தேகமும் ஒட்டிய கன்னங்களும் அவர்கள் புசிப்பதற்கு உணவு ஏதும் வழங்கப்படவில்லை என்பதை உணர்த்தின.

அங்கிருந்த பகைவர்களை சம்யுக்தன் தன் கூரிய விழிகளால் பார்த்தான். பகைவர்களில் ஒருவன் சம்யுக்தன் கண் விழித்ததைப் பார்த்துவிட்டு அதைப் பொருட்படுத்தாமல் தன் வேலையைத் தொடரலானான். சம்யுக்தன், தான் கட்டப்பட்டிருந்த தூணை ஒரு முறை தலைநிமிர்த்திப் பார்த்தான். பிரம்மாண்டமாக எழுந்து நின்ற தூணைப் பார்த்ததும் அங்கிருந்து தப்பிக்கலாம் என்ற ஆசை பாதி அழிந்துவிட்டது. வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்று யோசித்த அவன் தன் கைகளில் பிணைக்கப்பட்டிருந்த சங்கிலியின் பலத்தைச் சோதித்துப் பார்த்தான். மீதி ஆசையும் கரைந்து போனது. சோர்வோடு ஒரு பெருமூச்சை வெளியேற்றினான்.

பகைவர்களின் திட்டம் என்னவாக இருக்கும் என்ற நினைவலைகளுக்குள் அவன் விழுந்தான். பல யோசனைகளை அவன் அறிவுக்கூர்மை கூறினாலும் அவன் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது. நினைவுகளோடு நீந்திய அவன் களைப்படைந்து கரைக்கு வந்தான். மீண்டும் அக்கூடத்தை ஒரு நோட்டமிட்டு வெற்றுப்புன்னகையை இதழ்களில் தவழவிட்டான்.

அதைக்கண்ட பகைவர்களில் ஒருவன் திடுக்கிட்டான். சம்யுக்தனின் அருகில் புயலாய் சென்றான். "ஏய்! எதற்காகச் சிரிக்கிறாய்?" என்று சம்யுக்தனை அதட்டினான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

சம்யுக்தனோ அவனை ஒரு விசித்திர ஜந்துவைப் போல் பார்த்து மேலும் சிரித்தான்.

அதனால் கொதிப்படைந்த பகைவன், "இப்போது சொல்லப்போகிறாயா, இல்லையா?" என்று பாறைகள் ஒன்றோடு ஒன்று மோதுவது போன்ற கரகரப்பான குரலில் கேட்டான்.

"காரணம் தெரியவேண்டுமோ?" என்று தன் இயல்பான குரலில் அவனுக்குப் பதில் கூறத் தயாரானான் சம்யுக்தன்.

சம்யுக்தனின் பதிலை எதிர்பார்த்திருந்த அவன் ஆவல் மேலோங்க சம்யுக்தனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

சம்யுக்தன் ஏதோ கூற விழைவது போல் முன்னே வந்து பகைவனின் முகத்தை கண்களால் ஆராய்ந்து "தெரியவில்லை. என் நிலையைக் கண்டு எனக்கே நகைக்க வேண்டும் போலிருந்தது" என்று கூறி மீண்டும் நகைத்தான்.

கேட்டவனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. "எவ்வளவு திமிரடா உனக்கு! இன்னும் சில நாழிகைகள் தானே. நாங்கள் உன் உயிரை எடுத்த பிறகு எப்படிச் சிரிக்கிறாய் என்று பார்க்கிறேன்" என்று கூறி அங்கிருந்து அகன்றான். மீண்டும் சில நாழிகைகள் மௌனத்தால் கடந்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.