(Reading time: 15 - 29 minutes)

பார்த்திபன் மற்றும் பூபதியின் நினைவுகள் ஒருசேர உயிர் பெற்றன. பார்த்திபனின் உடல் ஏதோ புதைகுழியில் அகப்பட்டது போல் நெளிந்தது. பூபதியின் கண்கள் கானல்நீரைக் காண்பது போல் அங்கு நடக்கின்ற காட்சிகளை வித்தியாசமாகப் பார்த்தன.

பார்த்திபன், சம்யுக்தனைப் பார்த்து ஒரு சோகப் புன்னகையை வீசினான். சம்யுக்தனின் கண்கள் காணாமல் போன நண்பர்கள் அங்கிருப்பதைப் பார்த்திபனுக்குச் சுட்டிக்காட்டியது. சம்யுக்தனின் பார்வையைப் பின்தொடர்ந்த பார்த்திபனின் கண்கள் தங்கள் நண்பர்களைப் பார்த்ததும் குளிர்ச்சியடைந்தன. அவனுடைய உடலில் ஒரு புத்துணர்ச்சி துளிர்த்தது; சோகப்புன்னகை சந்தோசப் பூமலராக மாறியது. பார்த்திபனின் கண்கள் மீண்டும் சம்யுக்தனிடம் சென்றன. தங்கள் நண்பர்களைக் கண்ட மகிழ்ச்சியை இருவரும் பார்வையாலேயே பரிமாறிக்கொண்டனர்.

அங்கு சூழ்ந்திருந்த நிசப்தத்தை பூபதியின் குரல் கலைத்தது. "யாரடா நீங்கள்? என்னை எதற்கு இந்தக் குகையில் கட்டி வைத்திருக்கிறீர்கள்?"

பூபதி அவ்வாறு கூறியதும் பகைவர்கள் ஒன்றும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

பார்த்திபன், "அப்படிக் கேளடா பூபதி. நீ ஒரு சிறந்த வீரன் என்று அவ்வப்போது நிரூபிக்கிறாய்" என்று எரியும் நெருப்பில் எண்ணையை வார்த்தான்.

அதைக் கேட்டு புளகாங்கிதம் அடைந்த பூபதி, "உண்மையாகவா? நன்றி பார்த்திபா!" என்று கூறி முடிக்கவும் பகைவன் ஒருவன் பூபதியைத் தன கால்களால் உதைக்கவும் சரியாக இருந்தது.

பூபதி, "என்னை விட்டு விடுங்கள் ! விட்டு விடுங்கள் !" என்று அலறினான்.

அவன் அலறியும் மேலும் சில உதைகள் வாங்கினான். "இன்னொரு முறை நீ வாய் திறந்தால் உன்னைக் கொன்றுவிடுவேன்" என்ற எச்சரிக்கையோடு பகைவன் பூபதியை உதைப்பதை நிறுத்தினான். பூபதி பயத்தால் உடல் நடுங்கியபடி தன் கால்களை மடக்கி முடங்கிக்கொண்டான்.

பார்த்திபன் பகைவனைப் பார்த்து, "என்னால் செய்ய முடியாததை நீ செய்திருக்கிறாய். மிக்க நன்றி நண்பா!" என்றான்.

பூபதி பார்த்திபனை முறைத்தான். பகைவன் அவர்களின் சம்பாஷணையைச் செவிமடுக்காமல் அங்கிருந்து சென்றான். மீண்டும் அங்கே பயங்கர அமைதி நிலவியது.

அந்த அமைதியைக் குலைக்கும் வண்ணம் யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது. ஒருவன் அவசர அவசரமாகச் சென்று தாழ்ப்பாளைத் திறந்தான். வந்தது யாரென்று கதவின் இடுக்கின் வழியே பார்த்தான். வந்தது தங்களில் ஒருவன் என்று தெரிந்ததும் கதவைத் திறந்து அவன் உள்ளே வர வழிவிட்டான்.

உள்ளே வந்தவன் சம்யுக்தனின் முன்னால் கம்பீரமாக நின்றான். தன் முன்னே நிழலாடியதும், சம்யுக்தன் தன் தலையை உயர்த்தி யாரென்று பார்த்தான். முதலில் கூசிய அவனது கண்கள் பிறகு விரிந்து தன் எதிரில் நின்றவனைத் தெளிவாகப் பார்த்தன. அவனுக்குப் பழக்கப்பட்ட முகம் தான்.

ஆஜானுபாகுவான உடலும் பரந்து விரிந்த தோள்களும் இருள் சூழ்ந்த முகமும் கழுகு போன்ற கண்களுமாய் அங்கு நின்றிருந்த முகமூடி மனிதன் விஷமப்புன்னகையோடு சம்யுக்தனைப் பார்த்தான். சம்யுக்தன் அவனைப் பார்க்கப் பிடிக்காததுபோல் தலையைத் திருப்பிக் கொண்டான்.

ஒருவன் முகமூடி மனிதனைப் பார்த்து, "நமது தலைவர் எப்போது வருவார்?" என்று கேட்டான்.

முகமூடி மனிதன் சம்யுக்தனிடமிருந்து பார்வையைத் திருப்பி, "இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார். அதுவரையில் நான் என் நண்பனுடன் பேசுகிறேன்" என்று கூறி சம்யுக்தனின் அருகில் அமர்ந்தான்.

"என்ன நண்பா! எப்படி இருக்கிறாய்? இவர்கள் உன்னை நன்றாகக் கவனித்துக்கொண்டார்களா?" என்று பரிகாசமாகக் கேட்டான்.

சம்யுக்தன் அவனை முறைத்தான்.

"ஏன் முறைக்கிறாய்? பேசு. உனக்கும் பொழுது போகும் அல்லவா? நாம் பார்க்கும் போதெல்லாம் சண்டையிட்டுக்கொண்டே இருந்தோம். இப்போது தான் பேசுவதற்கு சந்தப்பம் கிடைத்துள்ளது. பேசாமல் இருந்தால் எப்படி?"

"பாம்புடன் பழகி எனக்குப் பழக்கம் இல்லையே" என்று அவன் முகத்தில் அடித்தாற்போல் சம்யுக்தன் பதிலுரைத்தான்.

முகமூடி மனிதன் சிரித்துக்கொண்டே, "நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள். அதைப்பற்றி நான் கவலைப்படப்போவதில்லை. ஜெயிப்பது நாங்கள் தான் என்று உறுதியான பிறகு எதற்கு தேவை இல்லாத கோபம்" என்று கூறினான்.

திடீரென்று சம்யுக்தனின் மனதில் ஒரு மின்னல் வெட்டியது. முகமூடி மனிதனிடமிருந்து உண்மையைப் பிடுங்க வேண்டும் என நினைத்தான். முகமூடி மனிதன் மிகவும் சந்தோசமாக இருக்கிறான். பேசும் விதத்தில் பேசினால் உண்மையைக் கறந்துவிடலாம் என்று எண்ணினான்.

"நீங்கள் எங்களை என்ன செய்யப்போகிறீர்கள்? கொல்லப்போகிறீர்களா?" என்று பேச்சைத் துவங்கினான்.

முகமூடி மனிதன் ஒரு கொடிய பார்வையை சம்யுக்தன் மேல் வீசினான். தண்ணீரில் இறங்கிய விலங்கை முதலை ஒன்று பார்ப்பது போலிருந்தது அப்பார்வை.

"உன்னைப்பற்றி எங்கள் நாகவன அரசர் மார்த்தாண்டனிடம் தெரிவித்தோம். உன் வீரம், விவேகம், சாதுரியம் கண்டு அவர் வியந்து போனார். உன்னைத்தான் முதலில் கொல்லவேண்டும் என்று கூறினார்" என்று தன் வார்த்தைகளில் விஷத்தை ஏற்றிக் கூறினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.