(Reading time: 15 - 29 minutes)

சம்யுக்தன் அவன் பேச்சைக் கேட்டு சற்றும் பயம் கொள்ளாமல் ஒரு கேலிப்புன்னகையை உதிர்த்தான். அடுத்து தன் பேச்சை லாவகமாகத் துவங்கினான்.

"அடுத்து உங்கள் திட்டம் தான் என்ன?".

கேள்வி கேட்டு முடித்ததும் முகமூடி மனிதன் என்ன சொல்லப் போகிறான் என்று அவனுடைய முகத்தைக் கூர்மையாக நோக்கினான். அது போன்ற கேள்விகளால் முகமூடி மனிதன் திண்டாடுவதை சம்யுக்தனால் உணர முடிந்தது.

"நான் தான் உயிரை விடப்போகிறேனே? உங்கள் திட்டம் என்ன என்று என் மனதில் மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்திருக்கிறது. அதற்குப் பதில் தந்தால் இறக்கும்போது மனநிறைவோடு இறப்பேனே".

சம்யுக்தன் கூறிய வார்த்தைகளால் முகமூடி மனிதன் மனதளவில் பாதி விழுந்துவிட்டான். இருந்தும் சொல்லலாமா, வேண்டாமா என்று இருதலைக்கொள்ளி எறும்பாய்த் தவித்தான். சம்யுக்தனும் விடாமல் தூபம் போட்டுக்கொண்டே இருந்தான்.

"நீங்கள் ஜெயிக்கப்போவதுதான் உறுதியாகிவிட்டதே. பிறகு என்ன?"

அந்த வார்த்தைகளில் முகமூடி மனிதன் முழுவதுமாக விழுந்தான்.

"எங்களுக்குத் தேவையெல்லாம் உங்கள் நாடு தான். எங்களுக்கு அடிபணிந்து உங்கள் நாட்டு மக்கள் நடக்க வேண்டும். அது தான் எங்களுக்குத் தேவை. எங்கள் நாட்டின் பக்கத்தில் உள்ள மற்ற இரு நாடுகளும் எங்களுக்கு அடிபணிந்து தான் நடக்கின்றன. ஆனால், வீரபுரம் மட்டும் தான் எங்களுக்குப் பெரும் தலைவலியாக இருக்கிறது".

"அதற்கு உங்களின் திட்டம்....?"

"அது எனக்குத் தெரியாது. எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் தான் செய்துகொண்டிருக்கிறேன். அரசருக்குத்தான் எல்லாம் தெரியும்."

"ஒரு பெரிய போர்ப்படையுடன் வந்திருக்கலாமே. அதை விடுத்து இப்படி சூழ்ச்சியுடன் வந்திருப்பது கோழைத்தனமாக உள்ளதே"

"இது கோழைத்தனம் அல்ல நண்பா. சாணக்கியத்தனம். எங்கள் அரசர் சூழ்ச்சி செய்வதில் வல்லவர். அதுவும், உணர்ச்சிகளோடு விளையாடுவதில் மிகவும் வல்லவர்."

ஒரு ரகசியத்தை அவனையறியாமல் உளறியதை சம்யுக்தன் பிடித்துக்கொண்டான்.

"உணர்ச்சிகளோடு விளையாடுவது என்றால்....?" என்று கேள்வியை முடிக்காமல் கேள்விக்குறியோடு விட்டான்.

"போரிலே, நீ ஒருவன் கையால் நீ வீரமரணம் அடைந்தால் நீ வருத்தப்படமாட்டாய். உன் தகப்பனாரும் வீரமரணம் அடைந்தால் அதுவும் உனக்குப் பெருமை தான். ஆனால், உன் கண்ணெதிரே உன் தந்தை விஷம் அருந்தி துடி துடித்தால் உன் உள்ளம் எப்படி பதறும்" என்று கூறியபடி தன் முகத்தை சம்யுக்தனின் அருகில் கொண்டு சென்றான்.

சம்யுக்தன் ஒரு கணம் ஆடிவிட்டான்.

"என்ன நண்பா! கேட்கும் போதே உடல் உதறுகிறதா? உன் உணர்ச்சியில் விளையாடுவது என்றால், அது உன்னைச் சார்ந்தவர்களைப் பாதித்தால் தான் அது உன்னைப் பாதிக்கும். இம்மாதிரியான விளையாட்டுக்களை எங்கள் அரசர் மிக நுட்பமாகத் திட்டமிட்டு காரியத்தில் வெற்றியடைவார்." என்று பெருமையோடு கூறினான்.

சம்யுக்தனுக்கு மூளையில் ஏதோ பொறி தட்டியது. ஒரு பெரிய திட்டம் கசிந்து விட்டதாக எண்ணினான். அத்திட்டம் ஒரு விடுகதையாக விழுந்திருக்கிறது. அதற்கு விடை காண வேண்டும் என்று தீர்மானித்தான்.

மீண்டும் ஏதோ சொல்ல வாயெடுத்தபோது முகமூடி மனிதனின் முகம் விறைப்பானது. அதிர்ச்சியோடு சம்யுக்தனை நோக்கினான்.

"நண்பா! பயங்கரமான ஆள் தான் நீ. என்னையே வசியப்படுத்தி உண்மைகளை என் வாயிலிருந்து வரவழைக்கப் பார்த்தாயே. உன் அருகில் அமர்ந்தது பெரிய தவறாக இருக்கிறதே. உன் உயிர் பிரிந்துவிட்டாலும் உன் உடலோடு பேசுவது கூட ஆபத்தானது தான்." என்று கூறி எழுந்தான்.

"இன்னும் ஒரு கேள்வி பாக்கி இருக்கிறதே" என்று சம்யுக்தன் அவனை நிறுத்தினான்.

"இனி என்னிடம் இருந்து எதுவும் எதிர்பார்க்காதே நண்பா!"

"இது மறைமுகமில்லாத நேரடியான கேள்வி தான். நீ வந்த பிறகு ஒருவன், நம் தலைவர் எப்போது வருவார் என்று கேட்டானே. யார் அது?" என்று அழுத்தமாகக் கேட்டான்.

"இறக்கும் முன் கண்டிப்பாகப் பார்ப்பாய்" என்று முகமூடி மனிதன் விஷமப் புன்னகையை உதிர்த்து அங்கிருந்து அகன்றான்.

சம்யுக்தன், முகமூடி மனிதன் சொன்ன வார்த்தைகளை மனதினுள் ஒவ்வொன்றாக அடுக்கினான். இதில் புதைந்திருக்கும் மர்மம் என்ன என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டான். இன்னும் சிறிது நேரம் முகமூடி மனிதன் பேசியிருந்தால் மேலும் சில உண்மைகளைத் தெரிந்துகொண்டிருக்கலாமே என்று சற்றே கவலைப்பட்டான்.

நடுசாமம் ஆகியிருந்தது. விளக்கின் ஒளி மங்கத் தொடங்கியது. தீபத்தின் ஒளி காற்றில் அசைந்தாடியது. அசைந்தாடும் அந்த தீப ஒளியை சம்யுக்தன் பார்த்துக்கொண்டிருந்தான். விட்டுச்சென்ற அவனுடைய பலம் எல்லாம் மீண்டும் அவன் உடலில் சேரத் துவங்கியது. அடிக்கடி தன்னைப் பிணைத்திருந்த சங்கிலியின் பலத்தைப் பரிசோதித்துக்கொண்டிருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.