(Reading time: 21 - 41 minutes)

சம்யுக்தனின் உடலில் ஏதேனும் வெட்டுக் காயங்கள் இருக்கிறதா என்ற சந்தேகத்தில் தான் பாதுகாவலன் அவ்வாறு ஆராய்கிறான் என்று முகமூடி மனிதனுக்கு நன்றாகவே தெரியும். வெட்டுக்காயங்கள் இருந்தால் தாங்கள் பகைவர்கள் என்று ஊர்ஜிதமாகிவிடும்; அதன் பிறகு தங்களின் உயிர் அந்த இடத்திலேயே பிரிந்து விடும் என்று நினைத்தான். ஆனால், பாதுகாவலனால் சம்யுக்தனின் உடலில் வெட்டுக் காயங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனென்றால், முகமூடி மனிதன் தன் சமயோசித புத்தியால் முன்னெச்சரிக்கையாக, எக்காரணம் கொண்டும் சம்யுக்தனுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் வெட்டுக்காயங்களை உருவாக்கக்கூடாது என்று தன் சகாக்களுக்குக் கட்டளையிட்டிருந்தான்.

பாதுகாவலன் பார்த்திபனையும் பூபதியையும் ஆராய்ந்த பிறகு முகமூடி மனிதனைப் பார்த்து, "இது எப்பொழுது நடந்தது?" என்று கேட்டான்.

"சில நாழிகை முன்னே"

"நீங்கள் எந்த திசையில் காவல் புரிபவர்கள்?" என்று பாதுகாவலன் விடாமல் கேள்வி அம்புகளைத் தொடுத்தான்.

"நாங்கள் வட திசையில் காவல் புரிபவர்கள். சம்யுக்தன் காட்டுப் பகுதியில் காவல் புரிவதால் எங்களையும் துணைக்கு அழைத்தார்கள். நாங்களும் சென்றோம். பரண் அமைத்துக் காவல் புரிந்துகொண்டிருந்தபோது பரண் முறிந்தது"

"உங்களுடைய அடையாளங்களை காட்டுங்கள்!"

எல்லோரும் தங்கள் உடைகளில் மறைத்து வைத்திருந்த, அரண்மனை முத்திரையை எடுத்துக் காட்டினார்கள். அரண்மனை வீரர்கள் என்கிற உத்திரவாதம் தான் அது. அதைப் பார்த்ததும் பாதுகாவலனுக்கு அவர்கள் மேலிருந்த சந்தேகம் வலுவிழந்தது.

"இப்பொழுது நீங்கள் வைத்தியரிடம் தானே செல்லப்போகிறீர்கள்?"

"ஆம்".

"நீங்கள் புறப்படலாம்" என்று கூறி மற்ற பாதுகாவலர்களை நோக்கி சமிக்ஞை செய்தான். மற்ற பாதுகாவலர்கள் அவர்களுக்கு வழி விட்டார்கள்.

பகைவர்கள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டார்கள்.

ளவரசன் ரவிவர்மனும் இடும்பனும் காட்டுப் பகுதியை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். இளவரசன் காரிருளைக் கடந்து கொண்டிருந்தான். மழைத் துளிகள் ஒவ்வொன்றாக அவன் உடலில் விழுந்தது. அவனுக்கு மழை என்றால் மிகவும் பிடிக்கும். தன்னுடைய சிறந்த தோழர்கள் என்று மழைத் துளிகளைக் குறிப்பிடுவான். ஆனால், அப்பொழுது அவனால் அதை ரசிக்க முடியவில்லை.

ரவிவர்மனுடைய முகம் வாட்டமாக இருந்தது. ஏதோ நெருப்பில் நிற்பவன் போல அவனுடைய உடல் கொதித்தது. ஏதோ தவறு நிகழ்ந்து விட்டது என்று அவன் உள்ளத்தில் ஒரு முள் குத்தியது. தன்னைத்தானே நொந்து கொண்டான்.

சிறிது தொலைவே அவன் அடையப் போகும் இடம். இருந்தாலும் நீண்ட தூரம் போல் அவனுக்குத் தோன்றியது. அவனுடைய மூச்சுக் காற்று வேகமாக வெளியே வந்துகொண்டிருந்தது. பின்னால் திரும்பி இடும்பனைப் பார்த்தான். சிறிது தூரத்தில் தன்னைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறான் என்று உறுதி செய்த பிறகு தன் முன்னே இருக்கும் வழியைப் பார்த்தபடி சென்றுகொண்டிருந்தான்.

காட்டுக்குள் செல்ல இன்னும் இரண்டு வீதிகளே மீதம் இருந்தன. இன்னும் சிறிது நேரம் தான் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டான். அது அவனுக்கு சற்று நிம்மதியைத் தந்தது. ஒரு வீதியின் வளைவைக் கடந்து இன்னோர் வீதிக்குச் செல்லும் போது இரவுக் காவலர்கள் இளவரசரை மடக்கினார்கள்.

இளவரசன், குதிரையை அவசரமாக நிறுத்தினான். அது சிறிது தூரம் சென்ற பிறகே நின்றது. இடும்பனும் இளவரசன் பின்னாலேயே நின்றான்.

பாதுகாவலர்கள் தீப்பந்த ஒளியை இளவரசன் மேல் ஓட விட்டனர். "இளவரசரே! தாங்களா? மன்னிக்கவும். வேறு யாரோ என்று நினைத்து இப்படி செய்து விட்டோம்" என்று கூறினார்கள்.

இளவரசன் அவர்களுடைய மன்னிப்பைக் காது கொடுத்துக் கேட்காமல் "நான் செல்ல வேண்டும். வழியை விடுங்கள்!" என்று கூறினான்.

அவர்கள் இளவரசன் போக வழி விட்டனர்.

இளவரசர் குதிரையை விரட்ட ஆயத்தமான போது "இளவரசே! பொறுங்கள்! பொறுங்கள்!" என்று ஒரு பாதுகாவலன் குரல் அவனைத் தடுத்தது.

"என்ன?" என்று அவசரமாகவும் கோபமாகவும் இளவரசன் கேட்டான்.

"ஒரு அவசரமான மிகவும் முக்கியமான விஷயம் இளவரசே!"

தன் அவசரம் புரியாமல் அவன் தாமதப்படுத்துவதாய் எண்ணி "என்ன? சீக்கிரம் சொல்!" என்று எரிச்சலோடு ரவிவர்மன் சொன்னான்.

"சம்யுக்தனுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் பலத்த காயம் இளவரசே! அவர்களை வைத்தியரிடம் அழைத்துச் சென்று இருக்கிறார்கள்" என்று கூறினான்.

அதைக் கேட்டதும் இளவரசன் குதிரையில் இருந்து கீழே இறங்கி விட்டான். "என்ன சொல்கிறாய்? எப்பொழுது?" என்று அதிர்ச்சியோடு கேட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.