(Reading time: 21 - 41 minutes)

தொடர்கதை - சாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 12 - சிவாஜிதாசன்

Samrat Samyukthan

அத்தியாயம் 1.12 : ஓலை சொன்ன செய்தி என்ன?

கடந்த அத்தியாயத்தில்...

சம்யுக்தனைத் தேடி காட்டுக்குச் சென்ற பூபதி அவர்களுடன் இணைந்து கொண்டான். சம்யுக்தன் எவ்வளவு சொல்லியும் பூபதி அங்கிருந்து செல்லவில்லை. பகைவர்கள் அவர்களின் இருப்பிடத்தை நோக்கி வந்தார்கள். சம்யுக்தனும் பார்த்திபனும் அவர்களுடன் யுத்தம் செய்தார்கள்; இறுதியில் வீழ்ந்தார்கள். பகைவர்கள் சம்யுக்தனையும் மற்ற இருவரையும் அங்கிருந்து கடத்திச் சென்றார்கள். சம்யுக்தனின் குதிரை பூங்கொடியின் வீட்டின் அருகில் சென்று கனைத்தது. பூங்கொடி திகைத்து வெளியே சென்று பார்த்தாள். மீண்டும் சம்யுக்தன் வரைந்த ஓவியத்தைக் காணுகிறாள். அங்கிருக்கும் செடியின் கீழே ஓர் ஓலை புதைக்கப்பட்டிருப்பதைக் கண்டெடுக்கிறாள்.

இனி...


ளவரசன் ரவிவர்மன் மனதில் ஒரு சிறு கலக்கத்துடன் காவல் புரிந்து கொண்டிருந்தான். ஏதோ தவறு செய்கிறோம் என்று அவன் உள்ளுணர்வு குத்தியது. சகுந்தலையுடன் பேசிய நினைவுகளை ஒரு முறை அசை போட்டுப் பார்த்தான்.

தான் இருக்கும் தைரியத்தில் தான் அவள் சற்று நம்பிக்கையுடன் கிளம்பிச் சென்றாள். அந்த நம்பிக்கையைத் தான் காப்பாற்றாமல் அறிவீனமாக நடந்து கொண்டிருப்பதை எண்ணி அவன் உள்ளம் துடித்தது. சம்யுக்தனுக்கு ஏதேனும் நேர்ந்தால், அவள் முகத்தில் எப்படி விழிப்பேன்? வாழும் காலம் முழுவதும் குற்ற உணர்ச்சியுடன் வாழ நேரிடுமே. இன்று ஒரு நாள் சம்யுக்தன் இருக்கும் இடத்திற்குச் சென்று அவனுக்குத் துணையாக நின்றால் என்ன நேர்ந்துவிடப்போகிறது? என்னைப் பற்றி அவனும் அவனைப் பற்றி நானும் புரிந்து கொள்வதற்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்தால் நல்லது தானே? நாங்கள் இருவரும் சேர்ந்திருந்தால்தானே சகுந்தலையும் மிகவும் சந்தோசம் அடைவாள். இப்படி பல எண்ணங்கள் அவனுள் சுழன்றடித்தன.

யோசிப்பதால் நேரம் தான் விரயம் ஆகிறது. உடனே காரியத்தில் இறங்க வேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டு இளவரசன் பரணில் இருந்து கீழே இறங்கி வந்தான். "இடும்பா!" என்று அவசரக் கூக்குரலிட்டான்.

காவல் புரிந்துகொண்டிருந்த வீரர்களின் சலசலப்பு ஒரு கணம் நின்றது. எல்லாருடைய விழிகளும் ரவிவர்மனையே மொய்த்தன. இடும்பன் அவசர அவசரமாக ரவிவர்மனை நோக்கி ஓடி வந்தான். இளவரசனின் முன் பவ்யமாக நின்றான்.

"இடும்பா, என் மனது இன்று ஏனோ நிம்மதி இல்லாமல் தவிக்கிறது"

"என்ன ஆயிற்று இளவரசே?"

இளவரசன் ஏதும் கூறாமல் மனதில் குடையும் சம்யுக்தன் விஷயத்தை எண்ணிப் பார்த்தான்.

அவர்களின் நடவடிக்கையைப் பார்த்துக்கொண்டிருந்த காளிங்கன், இளவரசனின் பரபரப்பைப் பார்த்து ஏதோ தவறு நடக்கப்போகிறது என்று எண்ணிக்கொண்டே அவர்கள் பார்க்காத வண்ணம் அவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்க அருகில் சென்றான். தான் செய்யும் ஒரு சிறு தவறு மிகப் பெரிய திட்டத்தையே பாழ்படுத்திவிடும் என்பதால் காளிங்கன் மிகவும் எச்சரிக்கையுடன் அவனது நடவடிக்கைகளை மேற்கொண்டான்.

"இளவரசே!" என்று இடும்பன் இளவரசனது எண்ண ஓட்டத்தைத் தடுத்தான்.

"இடும்பா! இன்று மட்டும் நாம் சம்யுக்தன் காவல் புரியும் இடத்திற்கு செல்வோமே"

இடும்பன் ஏதோ கூற விழைய முற்பட்டபோது, "தயவு செய்து எதுவும் கூறாதே. மற்றவர்கள் கூறுவதைக் கேட்டுக் குழம்பிப் போனது தான் மிச்சம். நாம் சம்யுக்தன் இருக்கும் இடத்திற்கு இப்பொழுதே செல்ல வேண்டும்" என்று அதிகாரத்தோடு இளவசரன் கூறினான்.

இடும்பன் மறுபேச்சு ஏதும் கூறாமல் அவசரமாகக் கிளம்புவதற்கு ஆயத்தமானான். இளவரசன் தன் குதிரையில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான். இடும்பனும் பின்தொடர்ந்தான். இளவரசர் எங்கே போகிறார் என்று அங்கிருந்த வீரர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு தங்களுக்குள் முணுமுணுத்துக்கொண்டனர்.

காளிங்கன் எல்லோர் மீதும் ஒரு பார்வையை வீசி தன்னை யாரும் கவனிக்கவில்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டான். அங்கிருந்து ஒரு பாம்பு ஊர்ந்து செல்வது போல இருட்டினுள் சென்று மறைந்தான்.

இளவரசன் தன் குதிரையை எவ்வளவு வேகமாக செலுத்தமுடியுமோ அவ்வளவு வேகமாகச் செலுத்தினான். இடும்பனும் இளவரசனின் இந்தத் திடீர் முடிவால் குழம்பி இருந்தாலும் இளவரசனின் வேகத்திற்கு ஈடு கொடுத்து பின்னே சென்றுகொண்டிருந்தான்.

ம்யுக்தனையும் மற்ற இருவரையும் தூக்கிக்கொண்டு பகைவர்கள் காட்டை விட்டு வேகமாக வெளியே சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் சென்ற வழியில் யாரும் இல்லை. அங்கு நிலவிய நிசப்தத்தை குதிரைகளின் காலடிச் சத்தங்கள் கிழித்தன.

சம்யுக்தன் சுயநினைவு இல்லாமல் குதிரையில் படுத்திருந்தான். அவனுடைய உடல் பலவீனமாக இருந்தது. மூச்சுக் காற்றை வெளியேற்ற அவன் போராடினான். குதிரையில் அசையாமல் படுத்திருந்ததால் அவன் விலா எலும்புகள் வலியால் துடித்தன. அவனுடைய கண்கள் மயக்கத்தில் திறக்கமுடியாமல் இருந்தன. அவனுடைய நெற்றியில் இருந்து கன்னத்தின் வழியாக வழிந்த குருதி பூமியில் விழுந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.