(Reading time: 21 - 41 minutes)

"பூங்கொடியை அவள் இல்லத்தில் விட்டுவிட்டு வா!" என்று கூறி அவன் காதில் ஏதோ ரகசியம் கூறினான்.

"சரி, இளவரசே!" என்று பவ்யமாக இடும்பன் தலையசைத்தான்.

பூங்கொடியைப் பார்த்து இளவரசன், "என் மேல் நம்பிக்கை இருக்கிறது அல்லவா?" என்று கேட்டான்.

அவள் பதில் சொல்லாமல் ஆமாம் என்பது போல் தலையை மட்டும் அசைத்தாள். கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்துகொண்டிருந்தது.

"நான் சம்யுக்தனை அழைத்து வருகிறேன். இப்பொழுது நீ செல். பெண் பிள்ளைகள் இரவு நேரத்தில் வீதியில் இருக்கக்கூடாது" என்று இளவரசன் கூறினான்.

கலக்கமான முகத்தோடு இடும்பனுடன் அங்கிருந்து பூங்கொடி புறப்பட்டுச் சென்றாள். இருட்டில் அவர்கள் கரையும் வரை இளவரசன் பார்த்துக்கொண்டே இருந்தான். அவர்கள் மறைந்த பிறகு, குதிரையில் ஏறி காட்டுப் பகுதிக்கு வேகமாகச் சென்றான்.

காட்டிற்குள் நுழைந்ததும் புகையின் நெடி அவன் மூக்கினுள் நுழைந்தது. சம்யுக்தன் பகைவர்களிடம் மோதும் பொழுது அவனால் எரிக்கப்பட்ட மரத்தின் புகை நாற்றம் தான் அது. அதைப் பின்தொடர்ந்துகொண்டே இளவரசன் சென்றான்.

ஏதோ விடை தெரியா கேள்வியினுள் நுழைந்தது போல் இருந்தது அவனுக்கு. எதிரிகள், திட்டங்களைக் கச்சிதமாக வகுத்து செயல்படுத்தி  இருக்கிறார்கள். இப்பொழுது அவன் அவர்களின் திட்டங்களை முறியடிக்க வேண்டும். சம்யுக்தனுக்கு ஏதும் நேரக்கூடாது. நேராது, நேர விட மாட்டேன். அவனுள் இருந்த வருத்தம் எல்லாம் ஒன்று சேர்ந்து சினமாக மாறியது. வருந்தி பலனில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டான் ரவிவர்மன். இனி நடப்பவற்றில் தான் வெற்றி இருக்கிறது என்று எண்ணினான். அவனுடைய உடல் விறைப்பானது. ஒரு மதயானை போல் அவன் உள்ளம் வெறி கொண்டது.

சிறிது நேரத்தில் அவன் எரிந்த மரத்தின் அருகே சென்றான். புகையும் நெடியும் அவனைச் சூழ்ந்தன. அவன் குதிரையில் இருந்து இறங்கி சென்றான். பரண் விழுந்திருப்பதைப் பார்த்தான். பூமியைப் பார்த்தான். சம்யுக்தன் பகைவர்களுடன் மோதிய இடத்தைப் பார்த்தான். போர் நடந்து முடிந்த இடம் போல் இருந்தது.

சம்யுக்தன் வரைந்த ஓவியம் அவன் நினைவிற்கு வந்தது. "குதிரை...போர்க்களக் காட்சிகள்...அலங்கோலமாக எரிந்த நிலையில் ஒரு பட்ட மரம்" இவை எல்லாம் இளவரசனுக்கு ஞாபகம் வந்தது. சம்யுக்தன் எதைச் சொல்ல நினைத்திருக்கிறான் என்று இளவரசன் யோசித்தான்.

அபொழுது செடிகளின் மறைவில் இருந்து இரு கொடிய கண்கள் இளவரசனைக் கண்காணித்துக்கொண்டிருந்தன. மெதுவே அந்த உருவம் ஊர்ந்து செல்லத் துவங்கியது. இளவரசரின் அருகில் வந்துகொண்டிருந்தது.

சிந்தனையில் ஆழ்ந்திருந்த இளவரசன், தன்னை ஏதோ ஒன்று கண்காணிக்கிறது என்று உணர்ந்து கொண்டான். மெதுவாகத் தலையைத் திருப்பிப் பார்த்தான். ஒரு செடி அசைந்துகொண்டிருந்தது. அது காற்றில் அசையவில்லை என்று அவன் மனம் சொல்லியது. உறையில் இருந்த வாளை உருவி இரையை நெருங்கும் புலியைப் போல் அடி மேல் அடி வைத்து பாய்வதற்குத் தயாராக அந்த இடத்தைப் பார்த்தான். ஆனால், அங்கு யாரும் இல்லை.

திடீரென்று இளவரசனின் பின்னால் ஏதோ ஓடியது போல் இருந்தது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். அங்கும் யாரும் இல்லை. அவனுடைய கண்கள் நான்கு திசைகளையும் பார்த்தன. வாளைப் பிடித்திருந்த கைகளின் இறுக்கம் கூடியது. ஏதோ ஒரு மிருகத்தை வேட்டையாடுபவனைப் போல் எச்சரிக்கையோடு வாளை வீசத் தயாராக இருந்தான்.

அப்போது, அவன் பின்னால் ஓர் உருவம் ஓடி வந்து அவனுடைய் தோள்களில் குத்தியது. "ஆஆஆ...." என்று இளவரசன் அலறினான். அவனுடைய உடலைக் கிழித்துக்கொண்டு குருதி தோள்பட்டையை நனைத்தது. தோள்பட்டையைத் தன் கையால் பிடித்துக்கொண்டு திரும்பிப் பார்த்தான். அவன் எதிரே ஓர் உருவம் கொடிய பாம்பின் கண்களோடு அவனை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தது. அது...காளிங்கன்!

இளவசரன் காளிங்கனையே பார்த்தான். வலியை அனுபவித்தபடி, "நீ நாகவனத்தைச் சேர்ந்தவன் தானே?" என்று கேட்டான்.

"கண்டுபிடித்து விட்டாயா?" என்று காளிங்கன் சிரித்தான். அச் சிரிப்பு பொல்லாத நரி ஒன்று ஊளையிடுவது போலிருந்தது.

"முதுகில் குத்துவது தான் உங்களுக்கு குலத்தொழில் ஆயிற்றே. நேரே வந்தால் வெல்ல முடியாது என்ற பயமோ?" என்று இளவரசன் வலியோடு ஒரு சிரிப்பை உதிர்த்தபடி சொன்னான்.

"உன் மரணத்திற்கு நேரம் வந்து விட்டது. தயாராகிக்கொள்".

"அப்படியா? எனக்கு அப்படித் தோன்றவில்லையே. உன் இறப்பைப் பற்றி சொல்கிறாயோ?" என்று இளவரசன் கேட்டான்.

காளிங்கன் ஓநாயைப் போல் இளவரசன் மேல் பாய்ந்தான். இளவரசன், அடிபட்ட புலி வெறியோடு பாய்வது போல் அந்தரத்திலே பாய்ந்து அவன் நெஞ்சில் தன்னுடைய வாளை இறக்கினான். காளிங்கன் பூமியில் வீழ்ந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.