தொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 19 - மது
AT THE END OF INFINITY

“ஹே கரம் மசாலா. என்ன கேட்டுட்டு இருக்க நீ” ஹரிணியின் முகத்தைப் பார்த்த பூர்வி இடைபுகுந்து கணேஷை அதட்டினாள்.
“செர்ரியும் பாஸும் ஏன் இன்னும் மேரேஜ் செய்துக்கலன்னு கேட்டேன். ஏன் இதில என்ன இருக்கு. மோன் செர்ரி நீ சொல்லு”
“லூசா நீ, அக்காவே இப்போ தான் நார்மல் ஆகிட்டு இருக்கா. நல்ல வேளை அண்ணா இப்போ இங்க இல்ல” பூர்வி சொல்லவும் கணேஷ் திருதிருவென விழித்துக் கொண்டிருந்தான்.
“ராம் ஐ ஆம் அல்ரெடி மாரீட்ன்னு உனக்கு....” ஹரிணி முடிக்கவில்லை.
“வாட்” அதிர்ந்து போய் எழுந்தே விட்டிருந்தான்.
இத்தனை நாள் அதை அறியவில்லையா அவன். அன்று என்ன ஏது என்று தெரியமாலே அவ்வளவு உதவிகள் செய்தானா.
ஹரிணி சுருக்கமாக அனைத்தையும் சொன்னாள்.
ஹர்ஷா, பூர்வி இருவரும் பாலா என்ற பெயரைக் குறிப்பிட்டு சொன்னது அன்றைய பரபரப்பில் அவனின் கருத்தில் பதியவில்லை.
ஒரே ஒரு முறை பூர்வி அவன் தோளில் சாய்ந்து அழுத போது கூட யார் என்ன என்று எல்லாம் தூண்டித் துருவி கேட்கவில்லை அவன்.
“மோன் செர்ரி ஐ ஆம் சோ சாரி” மிகவும் உணர்ச்சிவசப் பட்ட நிலையில் இருந்தான் கணேஷ்.
ஹரிணி அவனை தட்டிக் கொடுத்து சமாதானம் செய்தாள்.
“உண்மையில் உனக்கு நான் ரொம்ப தாங்க்ஸ் சொல்லணும் ராம்” மிகுந்த நெகிழ்ச்சியோடு கூறினாள்.
‘அவன் மட்டும் அன்று ஹர்ஷாவின் நிலை பற்றி சொல்லியிருக்காவிட்டால்’ இப்போது நினைத்தாலும் ஹரிணியை உலுக்கியது.
நான்கு சுவற்றுக்குள் தன்னைத் தானே அவள் சிறை வைத்துக் கொண்ட போது அறியாமல் தான் போனாள். அங்கே பறிபோனது அவனது சுதந்திரம் என்று. வெளிச்சம் மறுத்து இருட்டை போர்த்திக் கொண்டவளுக்குத் தெரியாமல் தான் போனது. அவனது அகப்பார்வையை இழந்து விட்டான் என்று.
அவர்களது பாதைகள் வெவ்வேறு தான், ஆனால் பயணம் ஒன்றல்லவா. இனி நான் முன்னேறி செல்ல மாட்டேன் என்று அவள் நின்று விட்ட போது முடங்கிப் போனது அவனது கால்களும் அல்லவா.
தனது சுயத்தைக் காண மறுத்து பிடிவாதமாய் திரையிட்டு இருந்தவள் முன் கண்ணாடியைக் கொண்டு வந்து வைத்தவன் கணேஷ் ராம். அதற்கு அவனுக்கு மனதார நன்றி சொன்னாள்.
“அண்ணா எப்போ வராங்க அக்கா” பூர்வியின் குரலில் சிந்தனை களைந்தாள் ஹரிணி.
“நைட் வந்திருவான்டா. ராம் ஆர் யூ ஒகே”
“செர்ரி எனக்கொரு வேண்டுகோள் இருக்கு” என்றவனை என்ன சொல் என்பது போல் பார்த்தாள் ஹரிணி.
“நீயும் பாஸும் எப்போவுமே ஒன்னா வொர்க் செய்யணும். உங்களுக்குள் இருக்கும் அந்த சிங்க் (sync) அமேசிங். அதனால தான் நான் அப்படி கேட்டேன். பாஸோட ஒவ்வொரு மூவ்வையும் எப்படி துல்லியமாக தெரிஞ்சு வச்சிருக்க செர்ரி”
“நீயும் தான் அவனோட மூவ் எல்லாம் தெரிஞ்சு ரொம்ப அழகா ஆசிஸ்ட் செய்கிறாய்” அவனைப் பாராட்டினாள்.
“ஹும்கும் அதெல்லாம் நிறைய வாங்கி கட்டியிருக்கோம். அதுக்கு அப்புறம் தான் கொஞ்சமா பிடிபட்டிருக்கு. ஆனா நீ முதல் நாளிலேயே எப்படி. அப்போவே கேட்கணும்ன்னு நினச்சேன். இங்க உள்ள முறைகள் பாஸ்ஸோட டெக்னிக் எல்லாம் எப்படி தெரியும். அதுவும் வித் டைமிங்”
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
“ஹரியோட ஒவ்வொரு அசைவும் எனக்கு தெரியும் என்று இவனிடம் எப்படி சொல்வது. அவனோட அசைவை வைத்தே அவனது மனநிலையும் புரியும்ன்னு எப்படி உணர்த்துவது. முதன் முறையாக அனாடமி வகுப்பில் அவன் கையில் ஸ்கேல்பலைப் பிடித்த நாள் முதலே அவனுடன் இருப்பவள் அல்லவா நான்”. நினைத்துக் கொண்டவள் “போன்ல பேசும் போது டிஸ்கஸ் செய்திருக்கோம்” என்று மட்டும் சொன்னாள். .
“ஹ்ம்ம் அதானே பார்த்தேன்” அந்த பதிலேயே திருப்தி அடைந்தான்.
“பாஸ் இஸ் எ ப்ரில்லியன்ட் சர்ஜன். ஆனா அவரோட சூப்பர் ப்ரில்லியன்ஸ் நீ கூட இருக்கும் போது தான் வெளிப்படுது” சிலாகித்தான்.
“நானும் இதை வழிமொழிகிறேன். அக்காவும் அண்ணாவும் வொர்க் செய்யும் போது ஒரு கவிதை மாதிரி இருக்கு. யூனிட்ல எல்லோரும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. அப்புறம் தெரியுமா அக்கா. மியுசிக் திரப்பி பத்தி ரொம்ப நல்ல பீட்பேக் கிடைத்திருக்கு” பூர்வி சொல்ல ஹரிணி இருவரையும் தட்டிக் கொடுத்தாள்.
சொன்ன சொல் மாறாது ஹர்ஷாவை சந்தித்த அடுத்த வாரமே ஜெய்பூர் சென்று ஸ்வாதியை சந்தித்தான் ஆர்சி.
“இது குடும்பச் சொத்து, குடும்பத் தொழில். எல்லோரும் சம்மதம் சொன்னா தான் நான் இதில ஏதும் செய்ய முடியும்” ஆர்சி சொல்லவும் ஸ்வாதிகாவும் ஒத்துக் கொண்டாள்.