திருமண தேதி நெருங்க பூர்விக்கு ஒரு புறம் மகிழ்சியாகவும் இன்னொரு புறம் பயமாகவும் இருந்தது.
“நீ எதுக்கு பயப்படுற. ரஞ்சன் தான் பாவம்” கணேஷ் பரிகாசம் செய்ய அவனை அதட்டினாள் ஹரிணி.
ஒரு தாயின் ஸ்தானத்தில் இருந்து ஹரிணி அவளை அரவணைத்து அவளுக்கு தகுந்த அறிவுரைகளைக் கூறினாள்.
“உனக்கு எப்போவும் நாங்க இருக்கோம்டா” ஹர்ஷா அரவணைத்துக் கொண்டான்.
திருமணம் மொரீசியசில் நடைபெற இருந்தது. ஏற்பாடுகளை எல்லாம் தான் கவனித்துக் கொள்வதாக சொன்னான் ஆர்சி. அவனுக்குத் தான் உலகத்தில் பல இடங்களில் தொழில் தொடர்பு இருந்ததே.
எல்லோரும் ஒரு வாரம் முன்னே அங்கே சென்று விடுவது என்று ப்ளான் செய்திருந்தனர்.
அப்போது தான் அவசரமாக ஹரிணி சென்னை செல்ல வேண்டியிருந்தது.
“கல்யாணி அத்தை உடனே வரச் சொல்லி போன் செய்தாங்க. ஏதோ பூர்வீக சொத்தாம். கோர்ட்ல இருந்தது நம்ம சைட் தீர்ப்பாகி இருக்காம். நான் நேர்ல வரணும்னு சொன்னாங்க”
“அக்கா மேரேஜ்க்கு வந்திடுவாய் தானே” பூர்வி ஹரிணியின் கைகளை இறுக்கமாய் பிடித்துக் கொண்டாள்.
“வந்திருவேன்டா. உடனே வேலை முடிஞ்சிரும்ன்னு அத்தை சொன்னாங்க” சென்னைக்குப் புறப்பட்டாள் ஹரிணி.
மொரீசியஸின் அந்தக் கடற்கரை ரிசார்ட் விழாக்கோலம் பூண்டிருந்தது. மிகவும் சிறப்பாக அனைத்தையும் ஏற்பாடுகளையும் அவனது சொந்த செலவிலேயே செய்திருந்தான் ஆர்சி.
“சதுண்ணா” என அவனைக் கட்டிக் கொண்டாள் பூர்வி.
கணேஷ், ஸ்வாதி, ஹரிணியின் சகோதரிகள் எல்லோரும் கேலியும் கிண்டலும் செய்த போதும் சங்கீத் மெஹந்தி என்று ஒவ்வொன்றாக நடக்க ஹரிணி இல்லாமல் ஏங்கினாள் பூர்வி.
ஆனால் ஹரிணியால் திருமணத்திற்கு வர முடியாத சூழ்நிலை என்று அறிந்த போது ஹர்ஷாவின் மார்பில் சாய்ந்து அழுதே விட்டாள்.
ஆர்சி பொறுப்பேற்றுக் கொண்டு அறிவுரை கூறி, நகைச்சுவையாக பேசி , கிடாரை மீட்டிப் பாடி அவளை சிரிக்க வைத்தான்.
போனில் பேசிய ஹரிணியிடம் சந்தோஷமாக பேசினாள் பூர்வி.
“ஹர்ஷாண்ணா சொன்னாங்க, உங்க ரெண்டு பேரோட குருவாமே அவங்க. அவங்களுக்கு பிள்ளைங்க இல்லையாமே. பத்திரமா பார்த்துட்டு அவங்களுக்கு சரியானதும் என்னைப் பார்க்க வா அக்கா” திடமாய் அவள் சொல்லவும் ஹரிணிக்கு மிகுந்த நிம்மதியாக இருந்தது.
“தாங்க்ஸ் ஆர்சி” அவன் கைப்பற்றிக் கொண்டு ஹர்ஷா சொல்லவும் “எதுக்கு தாங்க்ஸ் பிரின்ஸ், அவள் எனக்கும் தான் தங்கை” எனவும் ஆனந்த கண்ணீர் வடித்தாள் பூர்வி.
முன்னதாக மொரிசியஸ் செல்ல அதிகாலையில் ப்ளைட் என்பதால் எல்லாம் பேக் செய்து கொண்டிருந்தாள் ஹரிணி.
“எப்போ மா ப்ளைட், எல்லாம் எடுத்து வச்சிட்டியா” கல்யாணி அவளுக்கு உதவிக் கொண்டிருந்தார்.
“காலையிலே ஆறு மணிக்கு அத்தை. நல்ல வேளை எல்லா வேலையும் சரியா முடிஞ்சிருச்சு. இல்லைனா கஷ்டமா போயிருக்கும்” அவள் பேசிக் கொண்டிருந்த போது அவள் மொபைல் அடிக்கவும் எடுத்துப் பேசியவள் உடனே புறப்பட்டு வருவதாக சொன்னாள்.
“என்னாச்சும்மா” கல்யாணி கேட்க, டாக்டர் துரைக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அம்புலன்சில் சென்று கொண்டிருப்பதாக டாக்டர் மீனலோசினி சொன்னதை தெரிவித்தாள்.
“இன்னிக்கு காலையில் தானே போய் பார்த்துட்டு வந்த” கல்யாணியும் பதறினார். தானும் உடன் உதவிக்கு வருவதாக சொல்லவும் அவரையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தாள்.
“மேடம் கவலை படாதீங்க. சாருக்கு ஒன்றும் ஆகாது” ஹரிணி உடன் இருந்தது பெரிய பலமாக உணர்ந்தார் மீனலோசினி.
உடனடியாக ஏஞ்சியோபிளாஸ்டி செய்ய வேண்டும் என்று கார்டியாலஜிஸ்ட் சொல்லவும் ஹரிணியை அறிமுகம் செய்து வைத்தார் மீனலோசினி.
“ஒஹ் தி போர் சாம்பர்ஸ்” என்று ஆச்சரியம் அடைந்தார் அந்த கார்டியாலஜிஸ்ட்.
“யுஎஸ் ல தான் அப்படி சொல்வாங்க. இங்க வரை அது பரவி இருக்கும்னு நினைக்கல” அடக்கத்துடன் சொன்னாள் ஹரிணி.
“நீங்க வேணும்னா உள்ள வாங்க. சார் எப்போவும் போல ஸ்ட்ராங்கா தான் இருக்கார்” என்ற அந்த கார்டியாலஜிஸ்ட் தானும் டாக்டர் துரையின் ஸ்டூடன்ட் என்றார்.
“அத்தை நீங்க மேடம் கூட இருங்க. நான் உள்ள போறேன்” என்று தைரியம் சொல்லிவிட்டு ஸ்க்ரப் ட்ரெஸ் மாற்றிக் கொள்ள சென்றாள்.
ஹர்ஷாவிடம் போன் செய்து விஷயத்தை சொல்ல தான் வரவேண்டுமா என்று பதறினான்.
“வேண்டாம் ஹரி, சிங்கிள் ப்ளாக் தான். நான் இங்க மேனேஜ் செய்துக்கறேன். நீ பூர்வியை பார்த்துக்கோ. ப்ளைட் கேன்சல் செய்திடு”