“சரி முடிஞ்சதும் கால் செய்” என்றவன் பூர்வியிடம் தகவலைச் சொல்ல சென்றான்.
ஏஞ்சியோபிளாஸ்டி முடிந்து டாக்டர் துரையை ஐஸியூவிற்கு மாற்றினர். ஹர்ஷா டாக்டர் துரையுடன் போனில் பேச, “ஐ ஆம் ப்ரவுட் ஆப் யூ” என்று அவனை பாராட்டிக் கொண்டிருந்தார்.
டாக்டர் துரை அடுத்த நாளே டிஸ்சார்ஜ் ஆகிவிட பூர்வியின் திருமணமும் நிறைவாக முடிந்தது. ஹர்ஷா உடனடியாக சென்னை புறப்பட்டு வந்தான்.
ஒரு வாரம் அங்கேயே இருந்து டாக்டர் துரையின் நலத்தைக் கவனித்தனர் இருவரும்.
பெற்றால் தான் பிள்ளையா. ஒரு சிறந்த ஆசிரியனுக்கு அவரது ஒவ்வொரு மாணவனும் பிள்ளை தான் என ஹர்ஷாவும் ஹரிணியும் உணர்ந்தினர்.
டாக்டர் துரையைக் கண்டு நலம் விசாரிக்க வந்த பலரும் ஹர்ஷா ஹரிணி இருவரையும் அங்கே கண்டு அவர்களது சிறப்பான பணியை சிலாகித்துச் சென்றனர்.
“மினி நான் சொன்ன ஆருடம் பலித்தது பாரு” அவர் சொல்லவும் என்ன ஆருடம் என்று கேட்டாள் ஹரிணி.
பெரியவர்கள் இருவரும் ரகசியமாய் புன்னகைத்துக் கொள்ள, ஹர்ஷா ஹரிணி இருவருக்கும் அந்த நாள் நியாபகம்.
ஹர்ஷாவும் ஹரிணியும் வாலண்டியர் சர்வீஸாக போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மற்றும் பஞ்சம் வறட்சியால் மிகவும் பின் தங்கிய நாடுகளில் பணி புரிய விருப்பம் தெரிவித்ததை அடுத்து அவர்கள் ஜெனீவாவிற்கு அழைக்கப்பட்டனர்
“ஹரி ஜாயின் செய்யும் முன் பூர்வியைப் பார்த்து விட்டு போகலாம்” சென்னையில் இருந்தே ஜெனீவா செல்ல திட்டம் செய்த ஹர்ஷாவிடம் தெரிவித்தாள்.
சாரதாவும் ஸ்வாதியும் சென்னை வந்து ஹர்ஷாவையும் ஹரிணியையும் சந்தித்துச் செல்ல ஹரிணியின் பெற்றோரிடமும் ,கல்யாணியிடமும் ஆசி பெற்று விடைப் பெற்றனர்.
ஹர்ஷாவின் பெயர் மருத்துவ உலகில் பிரபலம் என்பதால் அவனது இந்த முடிவு பலரையும் வியப்புக்குள் ஆழ்த்தியது.
ஹரிணியும் அவனும் ஒன்றாக பணி செய்ய விருப்பம் தெரிவிக்க அதை ஏற்றுக் கொண்டிருந்தனர்.
ஏதோ ஒரு தனி உலகத்திற்குள் நுழைந்தது போலத் தான் இருந்தது ஹரிணிக்கு.
இந்த இடங்கள் எல்லாம் பூமியில் தான் இருகின்றனவா. நாம் டிவியில் பார்ப்பத்தும் கேட்பதும் ஒன்றுமே இல்லை எனும் போல முற்றிலும் வேறாக இருந்தன அந்த அகதிகள் முகாம்களும் அங்குள்ள சூழ்நிலைகளும்.
இந்த மனிதர்களும் நம்முடைய காலகட்டத்தில் வாழ்கிறார்கள் என்று நினைக்கும் போது மனம் வெதும்பிப் போனாள்.
ஏன் நடக்கின்றன இந்தப் போர்கள். அதனால் யார் என்ன சாதித்து விடுகிறார்கள். அப்படியே அவர்கள் சாதித்தாலும் அவர்கள் ஒன்றும் அமரத்துவம் பெற்றவர் அல்லவே. அவர்களும் இதே மண்ணோடு ஒரு நாள் கலந்து போகப் போகிறவர்கள் தானே.
என் நாட்டின் எல்லை இது, இது என் நாட்டின் வளம், இது எனக்கு சொந்தம் உனக்கு சொந்தம்’ மனிதன் மட்டும் ஏன் இப்படி இருக்கிறான். சூரியனும், வான் மேகமும், காற்றும் என்ன எல்லைப் பிரித்துக் கொண்டா இருக்கிறது.
உயிர்ச்சங்கிலியின் உயர்ந்த இடத்தில் இருப்பதால் ஆணவமும் அகம்பாவமும் தலைக்கேறிய மனிதன் இவ்வாறான செயல்களால் உண்மையில் கீழ்நிலைக்கு இறங்கி விடுகிறான் என்று உணர்வதில்லை.
விலங்குகள் கூட தங்கள் பசிக்கும் தற்காப்பிற்காகவும் தான் இன்னொரு உயிரை வேட்டையாடுகின்றன. ஆனால் எந்தப் பசிக்கு இப்படி மலர்களையும், பிஞ்சுகளையும் நசுக்குகிறான்.
இவ்வாறான சிந்தனைகள் ஹரிணியை பெரிதும் அலைக்கழித்தன. தனிமனிதனாக நான் என்ன செய்ய முடியும் என்று ஹர்ஷாவிடம் விவாதித்தாள்.
“நாம் டாக்டர்ஸ். ஹிப்போக்ரடிக் உறுதிமொழி எடுத்திருக்கிறோம். மனிதன் அவன் யாராக இருந்தாலும் எந்த பேதமும் இன்றி எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி அவன் வலியைப் போக்க அவன் பிணியை குணமாக்க நம்மால் முயற்சி செய்ய முடியும். இந்தப் போர்கள். இவற்றை தடுத்து நிறுத்தும் சக்தி இல்லைனாலும் அதிலே பாதிக்கப்பட்டவர்கள் உயிரைக் காப்பாற்ற முழு முயற்சி செய்ய முடியும்” அவளது எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்தான்.
தான் முதன் முதலில் பார்த்த ஹர்ஷவர்தன் இவன் தானா. வியந்து பார்த்திருந்தாள் ஹரிணி.
ஹவுஸ் சர்ஜன் பயிற்சியின் போது கூட தனியறையைப் பெற்று அதில் சகல வசதிகளோடு இருந்தவன் இந்த டென்ட்களிலும், கான்க்ரீட் பெஞ்ச்களிலும் உறங்குகிறான். உணவுக்காக கான்டீனில் வரிசையில் தட்டை ஏந்தி நிற்கிறான்.
சேவையாக பணி புரிந்ததும் இல்லமால் மருத்துவனாய் அவனது செல்வாக்கைப் பயன்படுத்தி நன்கொடைகள் பெற்று அங்கிருந்த ஹெல்த் சென்டர்களில் அடிப்படை வசதிகளை செய்தான்.
“கணேஷ் வரணும்னு சொல்றான். நிறைய டொனேஷன்ஸ் கலெக்ட் செய்திருக்கான். செட் அப்பை இன்னும் கொஞ்சம் நல்லா ஆக்கிட்டோம்னா அவன் வந்ததும் பேக் டு பேக் வி கேன் வொர்க்”