(Reading time: 6 - 12 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 22 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

ருவருக்கொருவர் பார்த்து கொள்ளாததால் தான் அப்பா இப்படியெல்லாம் பேசுகிறார். ஆனால் நேரில் தன்னை பார்த்த பின்பு அப்பாவால் தனக்கு மகளே இல்லை என்று கூற முடியுமா? பார்த்ததும் ‘சுடர்..” என்று வந்து அன்பாக தன்னை தழுவிக் கொள்ள மாட்டாரா.. என்ற ஒரு எதிர்ப்பார்ப்போடு தான் சுடரொளி லண்டலிருந்து கிளம்பினாள். ஆனால் நேரில் பார்த்த பின்பும் கூட தந்தை மருந்துக்கும் புன்னகைக்காதது அவளது மனதிற்கு மிகவுமே வருத்தமாக இருந்தது. விமான நிலையத்திற்கு கூட புகழேந்தியை கூட்டிக் கொண்டு எழில் தான் வந்திருந்தாள். சுடரொளியிடம் நன்றாகவே பேசினாள். ஆனால் சுடருக்கு தான் அவளுடன் இயல்பாக ஒன்ற முடியவில்லை.

அதன்பிறகு வீட்டிற்கு சென்ற பின்பும் கூட “ஏங்க உங்க பொண்ணு சுடர்..” என்று எழில் சொன்னதுக்கு கதிரிடம் ஒரு சிறு தலையசைப்பு மட்டும் தான் வந்தது. அவளை சரியாக கூட பார்க்கவில்லை. நேராக அவரது அறைக்குச் சென்றுவிட்டார்.

“புவி, தமிழ்.. இது தான் உங்க அக்கா..” என்று இரு சகோதரர்களுக்கும் அறிமுகப்படுத்தி வைத்தும் இருவரும் அவளிடம் பேசவே இல்லை. மொத்தத்தில் எழிலும் விலகியிருந்தால், அந்த வீட்டுக்கு அவள் வேண்டாத விருந்தாளி ஆகியிருப்பாள். ஆனால் அப்படியில்லாமல் எழில் அவளை நன்றாகவே கவனித்துக் கொண்டார். இருந்தும் தந்தை, சகோதரர்கள் வீட்டில் இருக்கும்போது எழில் அவளிடம் அக்கறை காட்டினால், கதிரவன் தேவையில்லாமல் எழிலிடம் எரிந்து விழுவார்.

தந்தை தன்னை முழுவதுமாக வெறுத்துவிட்டார் என்பதே அவளுக்கு கசப்பாக இருந்தது. அனைவரும் வீட்டில் இருக்கும் சமயங்களில் அறைக்குள்ளேயே அடைந்துக் கிடப்பாள்.

எழிலரசிக்கு அவளை கண்டு பாவமாக இருக்கும்.. சரியென்று எப்போதும் பிள்ளைகளை கூட்டிக் கொண்டு பிறந்த வீட்டிற்குச் செல்லும்போது சுடரையும் உடன் அழைத்துச் செல்வார்.

சுடர் வந்தால் ஓட ஓட விரட்ட வேண்டும் என்று மகி சொல்லியிருந்தாலும் அப்படி ஒன்றும் அவன் செய்துவிடவில்லை. அன்று புவியிடம் அவன் அப்படி பேசும்போதே அதை கேட்டுவிட்ட பூங்கொடி,

“இப்படி ஏதாவது செஞ்சு வச்சுடாத மகி.. மாமாக்கு பிடிக்கலங்கிறதால நாம அந்த பொண்ணு வர வேண்டாம்னு நினைக்கலாம்.. ஆனா ஒருவேளை அவர் மனசு மாறுச்சுன்னு வச்சிக்க, நாம இப்படியெல்லாம் நினைச்சோம்.. அந்த பொண்ணுக்கிட்ட இப்படி நடந்துக்கிட்டோம்னு அவருக்கு  தெரிய வந்தா அந்த வருத்தமெல்லாம் கோபமா உங்க அத்தை மேல தான் திரும்பும்.. நம்ம பக்கம் நாம சரியா நடந்துக்கிட்டா போதும்.. நீங்கல்லாம் அந்த பொண்ணுக்கிட்ட பேசலன்னா கூட பரவாயில்ல.. ஓட ஓட விரட்டுறேன்னு சொல்லிட்டு ஏதாச்சும் செஞ்சு வைக்காதீங்க..” என்று நிலைமையை விளக்கி சொன்னதால் அடக்கி வாசித்தவன், எழிலுடன் வரும் சுடரிடம் பேச்சு வைத்துக் கொள்வது கிடையாது.

அவனை பின்பற்றி அருள், அறிவு யாரும் அவளிடம் பேசமாட்டார்கள். அந்த வீட்டில் புகழேந்தியும் பூங்கொடியும் தான் அவளிடம் கொஞ்சம் நன்றாக பேசுவார்கள். அதிலும் புகழேந்தி சில நேரம் வீட்டில் இருக்கமாட்டார். அப்படியே இருந்தாலும், “வாம்மா..” என்று வரவேற்பதோடு சரி.. பின் மாடியில் உள்ள அவரது அறைக்குச் சென்றுவிடுவார். அதோடு சாப்பிடும் நேரம்.. “சாப்பிட வாம்மா..” என்று அழைப்பார்.

சிறியவர்கள் யாரும் அவளுடன் பேசாததால், பூங்கொடியும் எழிலும் இருக்கும் இடத்தில் தான் சுடரொளி இருப்பாள். ஆனால் அங்கேயும் கலையும் பாட்டியும் அவர்களோடு இருந்தால், அங்கே அவர்களோடு இருக்க மாட்டாள். அப்படி அவர்களோடு இருக்க நேர்ந்தால், கலை அவளிடம் ஏதோ பிடிக்காமல் பேசுவது போல் இருக்கும்.. பாட்டி ஏதாவது அவளின் அன்னையை பற்றி கேட்பார். அதுவும் அவளை காயப்படுத்தும் கேள்வியாக தான் இருக்கும். அதனால் பாட்டி இருக்கும் இடத்தில் அவள் இருக்க மாட்டாள்.

பாட்டி என்றாலே இப்படி தான் இருப்பார்களோ என்று கூட அவளுக்கு தோன்றியிருக்கிறது. வடிவும் தன்னிடம் வெறுப்பை காட்டுகிறார். இந்த பாட்டியும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்பதால் அப்படி அவளுக்கு நினைக்க தோன்றினாலும், அவரின் பேரன் பேத்தியிடம் பாசமாக தானே நடந்துக் கொள்கிறார். தன்னை தான் அவருக்கு பிடிக்கவில்லை என்பது அவளுக்கு நன்றாகவே புரிகிறது.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஏன் இந்த வீட்டில் பல பேர் அவளின் வருகையை விரும்பவில்லை என்பது அவளுக்கு புரிந்து தான் இருக்கிறது. அதனால் எழில் இந்த வீட்டிற்கு அழைத்து வரும்போதெல்லாம்.. “நான் இங்கேயே இருந்துக் கொள்கிறேன்.. நீங்க போயிட்டு வாங்க” என்று சாமாளிக்க பார்த்தாலும், எழில் அவளை தனியாக வீட்டில் விட்டுவிட்டு வர முடியாது என்ற காரணத்தால் ஏதாவது சமாதான வார்த்தைகள் கூறி அங்கே அழைத்துச் சென்றுவிடுவார்.

இப்படி அனைவரும் அவளை ஒதுக்குவது மனதிற்கு கஷ்டமாக தான் இருக்கும்.. இப்படி இங்கு இருக்க வேண்டிய அவசியம் என்ன? என்று மனதில் கேள்வி எழும்பினாலும், தந்தையோடு இருக்க வேண்டும் என்று அவளது ஆசை மட்டுமே அவள் இதையெல்லாம் தாங்கிக் கொண்டாள்.

இந்த நேரத்தில் அவளுக்கு கிடைக்கும் ஒரே ஆறுதல் அமுதனுடன் அலைபேசியில் பேசுவது மட்டும் தான்.. இங்குள்ள நிலவரத்தை பற்றி கேட்டால், அவளால் ஒளித்து மறைத்து சொல்ல முடியாது. இங்கு அனைவரும் எப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்று வெளிப்படையாக அவனிடம் கூறி ஆறுதல் தேடிக் கொள்வாள்.

“அப்படி எதுக்கு அங்க இருக்கணும்.. நீ இங்கேயே வந்துடு..” என்று அழைத்தால், “அப்பாக்கூட இருக்க ஆசையா இருக்கு சார்லி..* என்று அவள் சொல்லும்போது அவனுக்கு மறுக்க தோன்றாது. ஆனந்தியும் அவளின் தந்தை ஏக்கத்தை எடுத்து சொல்லி தானே சுடரை அங்கே அனுப்ப ஒத்துக் கொள்ள வைத்தார். எழிலும் இங்கு நடப்பவற்றை ஆனந்தியிடம் சொல்லி தான் வைத்திருக்கிறாள்.

அதனால் “இப்படி எதுக்கும்மா சுடர் அங்க இருக்கணும்..” என்று அமுதன் கேட்டால்,

“கொஞ்ச நாள் பார்ப்போம் அமுதா.. இதே சூழ்நிலை எப்பவும் இருக்குமா.. மாற கொஞ்ச நாள் ஆகும்ல.. அதுக்குப்பிறகும் அப்படியே இருந்தா, அப்போ சுடரை நாம இங்க கூப்பிட்டிக்கலாம்..” என்று சமாதானப்படுத்துவார்.

சுடரின் ஆசையும் அதே தான் என்று அவனுக்கு புரிந்ததால், “சரி நான் வேலை விஷயமா எப்படியோ சென்னைக்கு வரும்படி இருக்கும்.. அப்போ அங்க ஃப்ரீ டைம் உன்கூட தான் இருப்பேன்..” என்று அவளுக்கு ஆறுதல் கூறி அலைப்பேசியை வைக்க, அவளும் அந்த நாளுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

உறவு வளரும்...

Episode # 21

Episode # 23

Go to Nenchodu kalanthidu uravale story main page

{kunena_discuss:1155}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.