(Reading time: 10 - 19 minutes)

“ரொம்ப தேங்க்ஸ்ண்ணா... காலேஜ் போறதே பயமா இருக்கு... இதுல தனியா வேற எப்படி போறதுன்னு பயந்துண்டே இருந்தேன்... நல்லவேளை நீ வர....”

“நோக்கு வேற ஏதானும் இங்க இருந்து வாங்கிண்டு வரணுமா காயத்ரி....”

“இல்லைண்ணா எதுவும் வேண்டாம்....”

“சரி அம்மாக்கிட்ட நான் வர்றதை சொல்லிடு... நாளைக்கு பார்க்கலாம்....”, காயத்ரியின் அண்ணன் தொலைபேசியை வைக்க தன் அண்ணன் வருவதை அன்னையிடம் சொல்ல விரைந்தாள் காயத்ரி....

மிகுந்த ஆச்சாரமான குடும்பம் காயத்ரியுடையது... காயத்ரியின் தந்தை வைதீகத் தொழிலில் இருந்தவர் ... அதில் வரும் வருமானத்தில்தான் குடும்பம் நடந்து கொண்டிருந்தது... அவளின் அன்னை குடும்பத் தலைவி... மாலை நேரங்களில் தங்கள் வீட்டிற்கு அருகிலிருக்கும் சிறு குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்....

காயத்ரி ஆறாம்  வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது அவளுடைய தந்தை உடல்நலக்குறைவால் காலமானார்.... அதன்பின் சுமாரான ஜீவனம் கஷ்ட ஜீவனமாக மாறியது.... ஆனால் இரு குழந்தைகளும் படிப்பில் படு கெட்டி என்பதால் முழுக்க முழுக்க அவர்கள் படிப்பு ஸ்காலர்ஷிப்பில் ஓடியது... காயத்ரியின் அண்ணன் B.com படித்து முடித்தவுடன் ஒரு சிறிய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துகொண்டு பகுதி நேரமாக மேற்படிப்பை முடித்தான்... தற்பொழுது டெல்லியில் தனியார் நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் உள்ளான்....

காயத்ரி மிகச்சிறந்த மாணவி.... கர்நாடக இசையை தன் அன்னையிடம் கற்றுத் தேர்ந்தவள்... கூடவே தன் அத்தையிடம் வீணையும் கற்றவள்.... தெய்வ பக்தி மிக அதிகம்.... இது எல்லாவற்றையும் விட பயம் என்பது மிக மிக அதிகம்... முழுக்க முழுக்க பெண்கள் பள்ளியிலேயே படித்து வந்தவள்... முதல் முறையாக சென்னையில் புகழ் பெற்ற மருத்துவக்கல்லூரிக்குதன் அன்னை மற்றும் அண்ணனின் கட்டாயத்தால் போகப்போகிறாள்...  அங்கே அவளுக்கு என்ன வைத்திருக்கின்றது என்று பார்க்கலாம்.... 

தே சென்னையின் மற்றொரு பகுதி.....

ஆளுமா டோலுமா ஐசாலங்கடி மாலுமா

தெறிச்சு கலீச்சுனு கிராக்கிவுட்டா சாலுமா

அறிக்கல்லு கரிக்கல்லு கொத்துவுட்டா கலக்கலு

பளுச்சினு பளபளக்குது மிட்டா மேல Local-u

மாடி அறையிலிருந்த ஸ்டீரியோவில் வந்த பாட்டுக்கு ஆடியபடியே வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை கூலிங்கிளாஸுடன் படியில் இறங்கி வந்தான் சக்திவேல்.....

தந்தை மத்திய மந்திரி, தாயார் தந்தை இருக்கும் கட்சியின் மகளிர் அணித் தலைவி... இருவரும்  அரசியல்வாதிகளாக இருந்தாலும் கறைபடியாத கைகளுக்கு சொந்தக்காரர்கள்... பரம்பரை பணக்காரர்கள் என்பதால் பணம் என்பது இவர்களுக்கு ஒரு பொருட்டில்லை....

இவர்களின் ஒரே புதல்வன் சக்திவேல்.... தற்கால இளைஞர்களின் பிரதிநிதி.... MA political science முதல் வருட மாணவன்.... இவனின் குணத்தை கதையில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்....

“வாய்யா வண்டுமுருகா... என்னய்யா விடியக்காலைலையே வந்திருக்க....”

“அண்ணே  என் பேரு வண்டுமுருகன் இல்லை அண்ணே.. பாலமுருகன்.....”

“ஏதோ ஒண்ணு... எல்லாம் முடியறது முருகந்தானேய்யா....”

“அது சரிதான் அண்ணே.... இப்போ மணி பதினொண்ணு....”

“ஆமாய்யா அதுதான் விடியக்காலைன்னு சொன்னேன்... இதே நீ எட்டு மணிக்கு வந்திருந்தேனா நடுராத்திரின்னு சொல்லி இருப்பேன்.... சரி மேட்டர்க்கு வா....”

“என்ன அண்ணே மறந்துட்டீங்களா.... இன்னைக்கு சாயங்காலம் மூணு மணிக்கு என்னோட தொகுதிக்கு நீங்க பிரச்சாரம் பண்ண வரேன்னு சொல்லி இருந்தீங்களே.....”

“அய்யயோ அது இன்னைக்கா.... நான் வேற இன்னைக்கு பக்கத்து தெருல நகைக்கடை திறப்பு விழாக்கு வரேன்னு சொல்லிட்டேனே.... என்னைய்யா பண்றது....”

“அண்ணே உங்களை நம்பி போஸ்டர்லாம் நீங்க வர்றதா அடிச்சு ஒட்டிட்டேன்.... நகைக்கடை திறப்பு விழாவை கான்செல் பண்ண முடியாதா....”

“யோவ் அங்க ரிப்பன் கட் பண்ணப்போறது நயன்தாராய்யா.... உன் பக்கத்துல நின்னு பிரச்சாரம் பண்ணுறது சுப்பர்ரா.... இல்லை நயனோட பக்கத்துல நிக்கறது சூப்பரா.... நீயே சொல்லு....”

“அண்ணே நயந்தாராலாம் இப்போ trendல இல்லைண்ணே.... இப்போ எல்லாரும் கீர்த்தி சுரேஷ் லெவெல்ல இருக்காங்க... இன்னைக்கு நம்ம தொகுதில ஒரு வாட்டர் டான்க் திறக்கப்போறோம்... அதுக்கு அந்தப் புள்ளைய கூப்பிடறேன்... நீங்க அது பக்கத்துல நின்னுக்கோங்க.... இப்போ ஓகேங்களா...”

“இங்க பாருய்யா நான் ஏதோ அந்த கீர்த்தி சுரேஷ்க்காக வரேன்னு நினைச்சுக்காத.... எனக்கு எப்பவுமே கட்சிதான் முதல்ல.... மத்த விஷயம்லாம் அதுக்குப்பிறகுதான்... அதுனாலதான் உன்னோட பிரச்சாரத்துக்கு வரேன்... சரியா... நீ முன்னாடி போ.... கரெக்டா மூணு மணிக்கு அங்க நான் இருப்பேன்...”, ஒரு வழியாக சக்திவேலிடமிருந்து தப்பித்து ஓடினான் பாலமுருகன்.....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.