(Reading time: 20 - 40 minutes)

தொடர்கதை - சாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 14 - சிவாஜிதாசன்

Samrat Samyukthan

அத்தியாயம் 1.14 : சதியை வீழ்த்திய மதி

ள்ளே நுழைந்தவனைப் பார்த்த அதிர்ச்சியிலிருந்து பார்த்திபன் இன்னும் விடுபடாமல் தவித்துக்கொண்டிருந்தான். தலையில் ஒரு பாறாங்கல் விழுந்தது போலிருந்தது.

வீரபுரத்தின் ஆணிவேர் என்று மக்களால் போற்றிப் புகழப்பட்ட, காவல் தளபதி தான் அவர்களின் தலைவன் என்று தெரிந்ததும் யார் தான் இயல்பாக இருப்பார்கள். பார்த்திபனின் உள்ளம் சீற்றம் கொண்ட கடல் அலை போல் சினத்தால் பொங்கியது. பற்கள் நறநற வென சத்தமிட்டன.

காவல் தளபதி சம்யுக்தனைப் பார்த்துக்கொண்டிருந்தான். பார்த்திபனின் குரலால் அவன் திரும்பிப் பார்க்க நேர்ந்தது.

"வெட்கமாக இல்லை. சொந்த நாட்டிற்குத் துரோகம் செய்கிறாயே" என்று பார்த்திபன் கொதிப்புடன் கூறினான்.

காவல் தளபதி ஒரு சாந்தப் புன்னகையை உதிர்த்தான். அதில் பரிகாசம் தெரிந்தது. பார்த்திபன் சீறிப் பாயும் சிங்கம் போல் காவல் தளபதியின் மேல் பார்வையாலேயே பாய்ந்துகொண்டிருந்தான்.

சம்யுக்தன் பார்த்திபனைப் பார்த்து, "பார்த்திபா! அமைதியாக இரு!" என்று கூறினான்.

பார்த்திபனின் கோபம் சம்யுக்தனிடம் திரும்பியது.

"சம்யுக்தா! இந்தக் காட்சியைப் பார்த்த பிறகுமா என்னை அமைதியை நாடச் சொல்கிறாய்?".

சம்யுக்தன் பார்த்திபனிடம், "நான் சொல்வதைக் கேள் ! அமைதியாக இரு!" என்று அடக்கினான்.

காவல் தளபதி சம்யுக்தனைப் பார்த்து, "என்ன, வீராதி வீரரே! பயந்துவிட்டீரா? வார்த்தைகளால் வாளை வீசுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்" என்று கூறினான்.

"தேவையில்லாத காரியத்தில் நான் ஈடுபடுவதில்லை" என்று பதிலுரைத்த சம்யுக்தன், "எனக்கு உன்னைப் பற்றிய சில விளக்கங்கள் தேவை. எதற்கு உன் நாட்டிற்கு துரோகம் செய்யத் துணிந்தாய்? எதைக் கொண்டு உன்னை மயக்கினார்கள்? நீயும் மயங்கினாய்?" என்று கேள்விக்கணைகளைத் தொடுத்தான்.

பொறுமையோடு அவன் கூறியதை அலட்சிய முகபாவத்தோடு கேட்ட காவல் தளபதி, "நான் என் நாட்டிற்கு நல்லவை தானே புரிந்தேன்" என்றான்.

"என்ன உளறுகிறாய்?" என்று சம்யுக்தன் அதிர்ச்சியோடு கேட்டான்.

"என் நாடு நாகவனம். இப்பொழுது சொல். நான் என் நாட்டிக்கு நல்லது தானே புரிகிறேன்" என்று சம்யுக்தனை விழுங்குவது போல் பார்த்துக் கூறினான்.

அதைக் கேட்ட சம்யுக்தனும் பார்த்திபனும் சிலையாயினர். பேசுவதற்கு வார்த்தைகள் கிடைக்காமல் திண்டாடினர். அவர்களின் சுவாசம் மட்டுமே உடலில் இருந்து வெளியாகிக்கொண்டிருந்தது. பார்வைகளை மட்டுமே இருவரும் பரிமாறினர்.

"இன்னும் உனக்குப் புரியவில்லையா? என் கதையை ரத்தினச் சுருக்கமாகக் கூறுகிறேன். கேளுங்கள். நீங்கள் விடை தெரியாமலிருப்பது எனக்கே நெஞ்சு விம்முகிறது".

காவல் தளபதி தன் கதையைக் கூற ஆரம்பித்தான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னால், எங்கள் மன்னர் மார்த்தாண்ட சக்ரவர்த்தி இளவரசராக இருந்த காலம். அவர் தந்தை நாகேந்திர சக்ரவர்த்தி ஆட்சி செய்துகொண்டிருந்தார். அவருடைய ஆசை, வீரபுரத்தை எப்படியாவது கையகப்படுத்துவது. அவருடைய இறுதி ஆசையும் கூட. அதற்காக ஒரு திட்டத்தை உருவாக்கினார். அதைச் செயல்படுத்த வெகுகாலம் ஆகும். ஆனாலும் அவருடைய திட்டம் வெற்றியடையும் என்று கனவு கண்டார். என்னுடைய தந்தை நாகவன ராஜ்யத்தின் சிறந்த வீரர். பல போர்ப் பயிற்சிகளை மேற்கொண்டவர். ஒரு நாள் என் தந்தையை மன்னர் அழைத்தார். அப்போது எனக்குச் சிறு வயது. மன்னர், என் தந்தையிடம், தன் திட்டத்தைக் கூறினார்.

"வீரபுரத்திற்குச் சென்று வாழ்க்கையை நடத்து. இனி நீ எங்களோடு தொடர்பு கொள்ளக்கூடாது. உன் மகன் பெரியவனானதும் அவனை அரண்மனையில் சேர்த்துவிடு. அவன் அங்கு நடக்கும் விசயங்களை எங்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும். மறந்து விடாதே. உன் பிள்ளை தான் எங்களைத் தொடர்புகொள்ளவேண்டும். அதுவும் அவன் வாலிபனான பிறகு தான். மறவாதே. யாருக்கும் உங்கள் மேல் சந்தேகம் வருவது போல் நீங்கள் நடந்துகொள்ளக் கூடாது"

அவர் ஆணைப்படியே நாங்கள் வீரபுரத்திற்கு வந்து வாழ ஆரம்பித்தோம். ஏழ்மையில் வாடினோம். இருந்தும், எந்த நோக்கத்திற்காக வந்தோமோ அதைச் செயல்படுத்தத் துவங்கினோம். என் தந்தை தான் கற்றுத் தேர்ந்த வித்தைகளை எனக்கும் கற்றுக்கொடுத்தார். நான் வாலிபனாகி அரண்மனை வீரனானேன். எங்களுடைய திட்டம் துளிர்த்து மரமாக வளர்ந்தது. எங்கள் மன்னர் நாகேந்திர சக்ரவர்த்தியின் மறைவுக்கு பின், மார்த்தாண்ட சக்ரவர்த்தி நாகவன அரசராக முடிசூடினார். நான் படிப்படியாக உயர்ந்து வீரபுரத்திற்கே காவல் தளபதி ஆனேன். மன்னர் மற்றும் ராஜகுருவின் விசுவாசத்தைப் பெற்றேன். நாட்டு மக்கள் என்னைப் புகழ்ந்தார்கள்.

"கேள், சம்யுக்தா! உங்கள் நாட்டு மக்கள் தான் புகழ்ந்தார்கள்" என்று அழுத்தமாகவும் பரிகாசமாகவும் கூறினான். சம்யுக்தனின் கண்கள் ரத்தச் சிவப்பாக மாறின.

நான் எல்லோரிடமும் நன்மதிப்பைப் பெற்றேன். பிறகு எங்கள் திட்டத்தை செயல்படுத்தத் துவங்கினேன். நாகவன விசுவாசிகளை வீரபுரத்தில் ஊடுருவவிட்டேன். எங்கள் அரசர் கொடுத்த கட்டளையைச் செவ்வனவே செய்துகொண்டிருக்கிறோம். இது தான் என் கதை, சம்யுக்தா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.