அவன் கூறிய கதையைக் கேட்டு சம்யுக்தனின் முகம் இறுகியது.
"எப்படி எங்கள் திட்டம்?" என்று பெருமையோடு காவல் தளபதி சாதித்த புன்னகையோடு சம்யுக்தனைப் பார்த்து கேட்டான்.
சம்யுக்தன் தன் இரு கண்களையும் மூடி தூணில் தலையைச் சாய்த்தவாறு மறுமொழி பேசாமல் அமைதி காத்தான்.
பின், தன் இரு கண்களையும் திறந்து காவல் தளபதியை வெறுமையோடு பார்த்தான். துளியும் பயமில்லாத அப் பார்வை காவல் தளபதியை எரிச்சலூட்டியது. அவன் கண்களில் கோபம் கொப்பளித்தாலும் கட்டுப்பாடோடு பேசினான்.
"நீ இவ்வுலகை விட்டுச் செல்லும் நேரம் வந்து விட்டது. உன்னை எப்படிக் கொல்லப்போகிறோம் என்று கூறுகிறேன், கேள். உன் நண்பர்களை இதுவரை ஏன் கொல்லாமல் விட்டுவைத்திருக்கிறோம் என்பதும் உனக்குப் புரியும். காட்டில் இருந்து உன்னைத் தூக்கிக்கொண்டு வந்தது, சில வீரபுர வீதிக் காவலர்களுக்கும் தெரியும். உனக்கு விபத்து ஏற்பட்டதாகவும் அதிக காயப்பட்டிருப்பதாகவும் வைத்தியரிடம் அழைத்துச் செல்வதாகவும் பொய் கூறி உன்னைக் கடத்தி வந்திருக்கிறோம். எங்களின் திட்டப்படியே இது வரை எல்லாம் சரியாக நடந்தது.
இனி, நீ மரணம் அடைந்த பிறகு நான் மற்றவர்களிடம் என்ன கூறப்போகிறேன் என்பதைச் சொல்கிறேன், கேள்.
உன்னைத் தூக்கிக்கொண்டு வரும் வழியில் நான் இவர்களைச் சந்தித்தேன். உனக்கு விபத்து ஏற்பட்டதாக என்னிடம் கூறினார்கள். உன் நிலைமையோ கவலைக்கிடமாக இருந்தது. வைத்தியரின் வீடோ அதிகத் தொலைவில் இருந்தது. அதனால் சில வீரர்களை அனுப்பி வைத்தியரை அழைத்து வரும்படியும் அது வரை பக்கத்தில் இருக்கும் என் வீட்டில் உன்னை வைத்திருக்கும்படியும் கூறினேன். சில நாழிகையில் வைத்தியரையும் அழைத்து வந்தார்கள்" என்று கூறி ஒருவனைப் பார்த்தான்.
உடனே, அவன் வெளியே பூட்டப்பட்டிருந்த அறையைத் திறந்து உள்ளே சென்றான். வெளியே வரும்போது, "என்னை எதுவும் செய்யாதீர்கள்!" என்ற குரல் கேட்டு எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள்.
வைத்தியரின் கழுத்தைப் பிடித்து முன்னே தள்ளிக்கொண்டு வந்தான் அவன். வைத்தியரின் முகத்தில் மரணபயம் அப்பட்டமாகத் தெரிந்தது. வைத்தியரைப் பார்த்த சம்யுக்தன் தன் தலையை காவல் தளபதியை நோக்கித் திருப்பினான். காவல் தளபதி தான் கூறப்போகும் பொய்க்கதையை மீண்டும் கட்டவிழ்த்துவிடத் துவங்கினான்.
"வைத்தியர் உனக்குத் தீவிரமாக சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தபோது திடீரென்று உன் நண்பர்கள் உள்ளே வந்தார்கள். எல்லோரையும் தாக்கி உன்னையும் கொன்றார்கள். வேறு வழியில்லாமல் நாங்களும் அவர்களைத் தாக்க ஆரம்பித்தோம். அதில் அவர்கள் இறந்து போனார்கள். அவர்கள் உடலைச் சோதனை செய்தபோது நாகவன நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன" என்று கூறி மீண்டும் ஒருவனைப் பார்த்தான்.
அவன் ஒரு பொன்முடிப்பை நீட்டினான். பொன்முடிப்பில் கையை விட்டு பொற்காசுகளை அள்ளி சம்யுக்தன் மேல் வீசினான். சம்யுக்தன், நெருப்பு பட்டது போல் உடம்பை உதறினான்.
"இந்த யுத்தத்தில் ஒரு வீரனும் இறந்து போய்விட்டான்" என்று கூறி பக்கத்தில் நின்ற ஒருவனின் தலையை வெட்டிச் சாய்த்தான்.
சம்யுக்தன் அருகே சென்று, "எப்படி நான் ஜோடித்த கதை. பிரம்மாதமாக உள்ளதல்லவா?" என்று கூறி அந்தக் கூடமே அதிரும்படி சிரித்தான்.
"என் சுயரூபம் கண்டு பயந்துவிட்டாயா?"
"நீ ஒரு விஷப்பாம்பு என்று முன்னரே தெரியும்" என்று சம்யுக்தன் கூறிய பதிலால் காவல் தளபதி திடுக்கிட்டாலும் அதை வெளிக்காட்டாமல் மறைத்துக்கொண்டு, புருவத்தை உயர்த்தி, "முன்னரே தெரியுமா, எப்படி?" என்று கேட்டான்.
"நீ ஒரு கதை சொன்னாயல்லவா? இப்போது நானும் ஒரு கதை கூறுகிறேன்" என்று பகைவர்கள் அனைவரையும் ஒரு முறை நோட்டமிட்டு கதையைக் கூற ஆரம்பித்தான்.
"அன்று, என் நண்பர்கள் ஏதோ ஆபத்தான சூழ்நிலையில் மாட்டியிருக்கிறார்கள் என்றெண்ணி உங்கள் உதவியை நாடினோம். நீங்களும் சில வீரர்களை ஏவி விட்டீர்கள். ஆனால் நீங்கள் அனுப்பிய வீரர்கள், காட்டையே அலசிவிட்டோம். மூன்று பேரையுமே காணவில்லை என்று அரசர் முன்னிலையில் கூறினார்கள். அதைக் கேட்டு நான் ஸ்தம்பித்தேன்.
உங்களுக்குத் தெரியாத விஷயம் இன்னொன்று இருக்கிறது. அது என்னவென்றால், தப்பி வந்த என் நண்பர்களில் ஒருவன், எஞ்சிய மூன்று நண்பர்களில் ஒருவன் ரத்த வெள்ளத்தில் மாண்டு கிடப்பதாகக் கூறியிருந்தான். ஆனால் நீங்கள் அனுப்பிய வீரர்கள் அந்த உடலைக் கண்டெடுக்கவில்லை. உயிரற்ற உடலை வைத்து எதிரிகள் என்ன செய்யப்போகிறார்கள். அப்படி என்றால், அவன் இறக்கவில்லை. மயக்கத்தில் இருந்திருப்பான். பயத்திலிருந்த, தப்பி வந்த என் நண்பன் அவன் இறந்துவிட்டதாகத் தவறாகப் புரிந்திருப்பானோ என்று என் மனதில் ஒரு சிந்தனை உதித்தது".
சம்யுக்தன் கூறியதை காவல் தளபதி தன் செவிகளைத் தீட்டிக்கொண்டு கேட்டான். சம்யுக்தன் தொடர்ந்தான்.