(Reading time: 20 - 40 minutes)

"அன்றிரவு என் நண்பனைத் தாக்கியது காவல் தளபதியாகத்தான் இருக்க வேண்டும். தாக்கும்போது முத்திரையைத் தவறவிட்டிருக்கவேண்டும். பிறகு, முத்திரை காணாமல் போனதை அறிந்து, அதைத் தேடுவதற்குத் தன் ஆட்களை அனுப்பியிருக்கவேண்டும். அதை அவர்கள் தேடி வந்த போதுதான் அவர்கள் என்னைச் சந்தித்திருக்கவேண்டும். ஆனால், அந்த முத்திரை அவர்களுக்கு முன்னால் என் கையில் அகப்பட்டிருக்கவேண்டும்" அவ்வாறாக என் கற்பனைக் கண்ணாடி காட்டியது.

பிறகு தான், சூழ்ச்சியின் ஆணிவேர் காவல் தளபதி தான் என்று உறுதிப்படுத்திக்கொண்டேன். அடுத்து, என் நண்பர்களை எங்கு மறைத்து வைத்திருப்பர்? என்ற கேள்விக்கும் அழகான ஒரு விடை கிடைத்தது. அவர்களை மறைத்து வைக்க காவல் தளபதியின் வீட்டைத் தவிர வேறு பாதுகாப்பான இடம் என்ன இருக்கமுடியும்?

அது மட்டுமல்லாமல், நாகவனம் சென்ற ஒற்றர்களை அவர்கள் எப்படிக் கண்டுபிடித்துக் கொன்றார்கள்?. நாகவனத்தைச் சேர்ந்தவர்கள் வீரபுரத்தில் எப்படி நுழைந்தார்கள்? என்று என்னுள் சில காலமாக புதைந்திருந்த பல புதிருக்கு விடை கிடைக்கத் தொடங்கியது. அந்த விடையின் பெயர் காவல் தளபதி.

பிறகு, நீங்கள் கடத்திய என் நண்பர்களை மீட்டு, சதிகாரக் கும்பலையும் கையும் களவுமாகப் பிடிக்கத் திட்டம் தீட்டினேன். அத் திட்டத்திற்கு நானும் பார்த்திபனும் உயிரையே பணயம் வைத்தோம்" என்று கூறி பார்த்திபனைப் பார்த்தான். பார்த்திபனின் முகத்தில் பெருமை பொங்கியது.

என் திட்டத்தின் மேல் எனக்கு நம்பிக்கை இருந்தது. நீங்கள் நினைத்தது போல் எல்லாம் சரியாக நடந்துகொண்டிருக்கிறது என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள். அதில் ஒரு சிறு மாற்றம். நான் என் மனதில் தீட்டிய திட்டப்படி தான் நீங்கள் செயல்பட்டிருக்கிறீர்கள்.

இப்போது எல்லா நரிகளும் ஒரே இடத்தில் கூடி இருக்கின்றீர்கள். நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று கூறி வெற்றிக்களிப்புடன் கூறினான்.

"ஒரே ஒரு விஷயம் தான் உறுத்திக்கொண்டிருந்தது. வீரபுரத்தைச் சேர்ந்தவன் துரோகியாகிவிட்டானே என்று. நீ நாகவனத்தைச் சேர்ந்தவன் என்று அறிந்ததும் உண்மையிலேயே நான் மகிழ்ந்தேன்" என்று தான் கூறிய கதையை முடித்தான் சம்யுக்தன்.

கைவர்களின் முகத்தில் ஈயாடவில்லை. செய்வதறியாது மரம் போல் நின்றுகொண்டிருந்தார்கள். தங்கள் திட்டம் எல்லாம் தோற்றுவிட்டதைப் போல் ஒரு பிரம்மை அவர்களுக்குள் உருவானது. உலகமே சூனியமானது. சம்யுக்தனின் சிரிப்புச் சத்தம் அவர்களின் காதுகளைச் செவிடாக்கியது.

"நகைப்பதை நிறுத்து!" என்று முகமூடி மனிதன் சம்யுக்தனை எட்டி உதைத்தான்.

சம்யுக்தனின் கண்களில் ஒரு மின்னல் வந்து போனது. இருந்தும் சிரிப்பை இதழ்களில் உதிர்த்துக்கொண்டிருந்தான்.

"என்ன நண்பா! உன் உணர்ச்சிகளில் விளையாடிவிட்டேனா?" என்று முகமூடி மனிதனைப் பார்த்து நகைத்துக்கொண்டே கேட்டான்.

"இவ்விஷயம் எல்லாம் அரண்மனைக்குத் தெரியுமா?" என்று காவல் தளபதி அதிர்ச்சியோடு கேட்டான். அவன் குரலில் பயம் தெரிந்தது.

அப்பொழுது அவ்விடத்தைக் குதிரைகளின் காலடிச் சத்தம் சூழ்ந்தது. அமைதியாக இருந்த இடத்தில் ஒரு பரபரப்பு உண்டானது. காவல் தளபதியும் அவன் ஆட்களும் திகைப்புடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். சம்யுக்தன் காவல் தளபதியின் தோல்வி முகத்தை வெற்றிப் புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்தான்.

காவல் தளபதி, ஒருவனைப் பார்த்து, "வெளியே என்ன நடக்கிறது என்று பார்" என்று கட்டளையிட்டான்.

அவன் கதவின் அருகே சென்று தாழ்ப்பாளைத் தொடும் முன் ஒரு பெரிய மரக்கட்டை கதவை உடைத்துக்கொண்டு அவனைத் தாக்கி தூக்கி எறிந்தது. பத்து பேர் ஒரு பெரிய மரக்கட்டையைத் தாங்கிக்கொண்டு உள்ளே வந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து அரண்மனை வீரர்கள் புயல் போல் உள்ளே புகுந்தார்கள். அவர்களோடு இளவரசனும் இணைந்திருந்தான்.

திடீரென்று அரண்மனை வீரர்கள் உள்ளே புகுந்ததால், பகைவர்கள் அனைவரும் நிலை இழந்தனர். சண்டையிடுவதைத் தவிர வேறு வழியில்லாததால் அவர்களுடன் மோதத் தயாரானார்கள். வாள்கள் ஒன்றோடு ஒன்று மோதிய ஓசை விண்ணை முட்டியது. ஆங்காங்கே மனிதக்குரல்கள் அலறும் ஓலங்கள் கேட்டன.

இளவரசன், சம்யுக்தனைப் பார்த்தபடியே அவனிடம் வந்தான். அவனைப் பிணைத்திருந்த சங்கிலியைக் கழட்டும் நோக்கத்தில் கீழே குனிந்தபோது, காவல் தளபதி இளவரசனை உதைத்தான்.

இளவரசன் நிலைதடுமாறிக் கீழே விழுந்தான். அவனுடைய பிடி தவறி வாள் கைநழுவியது. அதை எடுக்க இளவரசன் விரைந்தபோது காவல் தளபதி மீண்டும் தாக்கினான். இளவரசனின் உடல் செயலிழந்தது போலானது. நகரக்கூட முடியாதபடி வலி அவனை பிடித்திழுத்தது. அவன், தன் கண்களைச் சுற்றி மேயவிட்டான். அதில் உதவி தேவை என்கிற பாவம் இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.