(Reading time: 20 - 40 minutes)

இளவரசன் சிறந்த வீரனாக இருக்கலாம். ஆனால் காவல் தளபதியிடம் போட்டி போடும் அளவுக்கு  இன்னும் வளரவில்லை. இளவரசன் தடுமாறி தன் வாளை எடுத்தான். உடலில் மீதம் இருந்த சக்தியை வைத்து போராடினான். ஆனால் மீண்டும் தோல்வியைத் தழுவினான்.

காவல் தளபதி அவனுடைய தோள்களில் பலமாகத் தாக்கினான். இளவரசன் நிலைகுலைந்தான். காவல் தளபதி அவனைத் தன் இரு கைகளால் உயரத் தூக்கித் தூர எறிந்தான்.

இளவரசன் சம்யுக்தனின் அருகில் போய் விழுந்தான். அப்போது வீரபுர அரண்மனை வீரன் காவல் தளபதியைத் தாக்க வந்தான். காவல் தளபதி அவனுடன் மோதினான்.

தன் அருகில் விழுந்து கிடந்த இளவரசனின் நிலைமையைக் கண்டு  சம்யுக்தன் அவனைப் பரிதாபக் கண்களோடு பார்த்தான். அவனுக்குத் தன் உதவி தேவை என்பதையும் உணர்ந்தான்.

இளவரசனிடம், "என்னை விடுதலை செய். சீக்கிரம் வா" என்று சம்யுக்தன் கூறினான்.

இளவரசன் சம்யுக்தனை நோக்கினான். பிறகு தன் உடலைக் கஷ்டப்பட்டு நகர்த்திச் சென்று சம்யுக்தன் கட்டப்பட்டிருந்த தூணின் அருகே சென்று சங்கிலியின் பிணைப்பைத் தளர்த்தப் போராடினான். அது சிறிது சிறிதாக அவன் வழிக்கு வந்தது.

அதற்குள் இளவரசனை நெருங்கிய காவல் தளபதி அவனை மீண்டும் தாக்க முயன்றான். இளவரசன் அவனுடன் போராடினான்.

சங்கிலியின் பிணைப்பு சிறிது தளர்ந்திருந்ததால், சம்யுக்தன் தன் வலுவைப் பயன்படுத்தி பிணைப்பிலிருந்து விடுபட முயற்சி செய்தான். அதற்குச் சிறிது நேரமானது. பகைவர்களுடன் அரண்மனை வீரர்கள் மோதுவதைப் பார்த்துக்கொண்டே, முழுவதுமாக சங்கிலியிலிருந்து விடுபட்டான்.

சம்யுக்தன், உயிரைக் காக்கப் போராடிக்கொண்டிருந்த இளவரசனைக் காப்பாற்ற, காவல் தளபதியின் மார்பில் எட்டி உதைத்தான். திடீரென்று நிகழ்ந்த தாக்குதலால் தளபதி தடுமாறினான். அவன் சுதாரிப்பதற்குள் சம்யுக்தன் மேலும் அவனைப் பலமாகத் தாக்கினான். அதில் இளவரசனும் இணைந்து கொண்டான். இரண்டு பேரின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் காவல் தளபதி சோர்வடைந்தான். ஆனாலும் அவன் வெறி அடங்கவில்லை.

ஒரு கட்டத்தில் இருவரையும் தள்ளிவிட்டு வாளை எடுத்துக்கொண்டு இளவரசனைக் கொல்லப் பாய்ந்தான். அப்போது பக்கவாட்டில் வேகமாக வந்த சம்யுக்தன் தளபதியின் தலையைச் சீவினான். அது சிறிது தூரம் சென்று விழுந்தது. அங்கு நடந்த சண்டையின் முற்றுப்புள்ளியாக காவல் தளபதியின் தலையில்லா உடல் பூமியில் விழுந்தது.

பகைவர்களின் உயிரற்ற உடல் ஆங்காங்கே கிடந்தது. சிலர் மட்டும் உயிரோடு இருந்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் முகமூடி மனிதனும் இருந்தான்.

வீரபுர வீரர்கள், அங்கே கட்டப்பட்டிருந்த பார்த்திபன், பூபதி, வைத்தியர் மற்றும் மயக்கத்திலிருந்த சம்யுக்தனின் நண்பர்கள் அனைவரையும் விடுவித்தனர்.

இளவரசனின் கண்கள் அதிர்ச்சியில் அகல விரிந்திருந்தன. மரணத்தை வெகு அருகில் கண்டதால் உண்டான பயம் அது. சம்யுக்தனை நன்றியோடு பார்த்தான்.

சம்யுக்தன் இளவரசனிடம், "தாங்கள் எனக்காக மிகப்பெரிய படையுடன் வந்ததற்கு மிக்க நன்றி இளவரசே" என்று கூறினான்.

இளவரசன் இன்னும் பயத்திலிருந்து அகலாதவனாய், "இருக்கட்டும், ரவிவர்மன் என்றே அழைக்கலாம்" என்றான். சம்யுக்தன் அதைப் புன்னகையோடு ஆமோதித்தான்.

"நீ மட்டும் இந்த ஓலையை எழுதியிருக்காவிட்டால் நான் படையோடு இங்கே வந்திருக்க முடியாது" என்று கூறி அந்த ஓலையை சம்யுக்தனிடம் கொடுத்தான்.

அவ்வோலையில், "காவல் தளபதி வீட்டிற்குப் படையோடு வரவும்" என்று எழுதியிருந்தது.

"இதையெல்லாம் எப்படிக் கண்டுபிடித்தாய்?" என்று இளவரசன் கேள்வி எழுப்பினான்.

"அதற்கு வெகுநேரம் ஆகும் ரவிவர்மா"

"அப்படியா? ஆனால், என்னால் ஆவலை அடக்க முடியவில்லையே."

சம்யுக்தன் நடந்தவற்றைச் சுருக்கமாகச் சொன்னான்.

அதைக் கேட்ட இளவரசன் பிரம்மித்தான்.

"நீ சொல்வதைக் கேட்டால் கனவு கண்டது போலிருக்கிறது. மிகச் சாமர்த்தியமாய்க் காரியத்தைக் கையாண்டிருக்கிறாய். உன்னுடைய மதி தான் சதியை வீழ்த்தியது. அன்று என் தந்தை உன்னை வசை பாடியதற்கு இப்போது வருந்தப்போகிறார் " என்று இளவரசன் பேசிக்கொண்டே போனான்.

அப்போது ஒரு குரல் அவர்களின் உரையாடலின் இடையில் நுழைந்தது.

"தயவு செய்து என்னைக் கொஞ்சம் கவனிக்கிறீர்களா?" என்று பார்த்திபன் பரிதாபமாகப் பார்த்தான்.

சம்யுக்தன், "மன்னித்து விடு நண்பா, மறந்தேவிட்டேன்" என்று கூறி அவனைச் சமாதானப்படுத்தும் வகையில் அவன் தோள்களை அணைத்தான்.

பார்த்திபன், சம்யுக்தனை முறைத்துக்கொண்டே, அவன் காதருகே சென்று, "புது சினேகிதமா?" என்று அழுத்தமாகக் கூறினான். சம்யுக்தன் பார்த்திபனைப் பார்த்து புன்முறுவல் செய்தான்.

அப்பொழுது இளவரசன் பார்த்திபனை அழைத்தான். "பார்த்திபா, இங்கே வா!".

பார்த்திபன் திடுக்கிட்டு, சம்யுக்தன் காதுகளில் சொன்னது இளவரசனின் காதுகளிலும் விழுந்திருக்குமோ என்றெண்ணிக்கொண்டே இளவரசன் முன் பவ்யமாக நின்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.