"ஒரு வேளை அவர்கள் மூவரும் கடத்தப்பட்டிருந்தால், எங்கே கடத்தப்பட்டார்கள்? என்று மனதில் கேள்வியை எழுப்பினேன். மூன்று பேரைக் கடத்திக்கொண்டு வீரபுரத்திலிருந்து வெளியேறுவது அவ்வளவு சுலபமில்லை. அப்படியானால் உள்ளூரிலேயே ஒரு வஞ்சக நரி உலாவிக்கொண்டிருக்கிறது என்று முடிவு கட்டினேன்.
காட்டிலிருக்கும் நரியைக் கண்டுபிடிப்பது மிக எளிது. ஏனென்றால், அதனால் உருவத்தை மாற்ற முடியாது. குணத்தையும் மாற்ற முடியாது. ஆனால், மனித உருவத்தில் இருக்கும் நரி அவ்வாறில்லை. அது இடத்திற்கு ஏற்றாற்போல் குணத்தையும் நடத்தையையும் மாற்றிக் கொள்ளும். கண்டுபிடிப்பதும் கடினம்.
எனக்கு நீங்கள் அனுப்பிய வீரர்கள் மீது சிறு சந்தேகம் உருவானது. அவர்களைப் பற்றி எனக்கு நெருக்கமான சில அரண்மனை வீரர்களிடம் விசாரித்தேன். நீங்கள் அனுப்பிய வீரர்கள் அனைவருமே புதிதாக பணியில் அமர்த்தப்பட்டவர்கள்; உங்களுக்கு மிக நெருங்கியவர்கள் என்றும் கேள்விப்பட்டேன்.
வீரர்கள் மேல் ஏற்பட்ட சந்தேகத்திற்குப் பிறகு என் கவனம் உங்களைச் சுற்றியே இருந்தது. இருந்தும், எந்த தீர்க்கமான முடிவுக்கும் என்னால் வர முடியவில்லை.
பொறுமையோடு காத்திருந்தேன். ஆற்றங்கரையில் மீனின் வரவுக்காக கொக்கு ஒற்றைக்காலோடு நீண்ட நேரமாகத் தவம் புரியுமே, அப்படிக் காத்திருந்தேன். காத்திருந்தது வீண் போகவில்லை.
சுயநினைவின்றி இருந்த என் நண்பனைப் பார்க்க வைத்தியர் வீட்டுக்குச் சென்றேன்.
வைத்தியர், அவன் உடலில் ஏற்பட்ட காயங்களைச் சுட்டிக்காட்டி, "அவன் சுயநினைவே ஸ்தம்பித்துப் போகும் அளவிற்கு ஒரு பிரளயத்தையே சந்தித்திருப்பதாகவும், அவனைத் தாக்கியவன் போர் வித்தைகளைக் கற்றுத் தேர்ந்த வீரனாகவும் மேலும் எங்கே தாக்கினால் உயிர் போகும் என்ற நுட்பத்தையும் தெரிந்தவனாகவும் இருக்கவேண்டும்" என்று கூறினார். "இப்படி தாக்கப்பட்ட ஒருவனுக்கு என் தந்தை சிகிச்சை அளித்தார். ஆயினும் பலனில்லை; அவன் இறந்து விட்டான். அதன் பிறகு இப்பொழுது தான் இப்படித் தாக்கப்பட்டவனைப் பார்க்கிறேன். இவன் உயிர் பிழைத்ததே அதிசயம்" என்றும் சொன்னார்.
அவர் கூறியதையெல்லாம் என் மனதில் பதியவைத்து, காணாமல் போன நண்பர்களைப் பற்றித் தடயங்கள் சேகரிக்க காட்டுப்பகுதிக்குச் சென்றேன். தேடி அலைந்தேன். உடல் களைத்தது. ஆயினும் தேடுவதை நிறுத்தவில்லை.
நீண்ட நேர தேடுதலுக்குப் பின் ஒரு தடயம் எனக்குக் கிடைத்தது. என் உள்ளங்கையில் ஒரு பெரிய திமிங்கலம் மாட்டியது போலிருந்தது. அரசரால் கௌரவிக்கப்பட்டு வழங்கப்படும் "காவல் தளபதி" முத்திரை தான் அது. உடனே, அதை பத்திரப்படுத்தினேன்".
சம்யுக்தன் கூறியதைக் கேட்டு காவல் தளபதியின் முகம் வெளிறிப்போனது. பகைவர்கள் அனைவரும் அசைவற்று நின்று கொண்டிருந்தார்கள். சம்யுக்தன் எல்லோர் முகங்களிலும் ஒரு பார்வையைப் பதித்தான்.
சம்யுக்தன் மீண்டும் தொடர்ந்தான்.
"சிறிது நேரத்தில் அரண்மனை வீரர்கள் சிலர் அங்கே வந்தனர். காணாமல் போன என் நண்பர்களைத் தேடி வந்ததாகக் கூறினார்கள். அவர்கள் பேசியவிதம் என் சந்தேகத்தீயைக் கொழுந்துவிட்டு எரியவைத்தது. அந்த சந்தேகத்தீ இருளில் மறைந்திருந்த இன்னோர் உண்மையை வெளிச்சம் போட்டுக்காட்டியது.
அங்கே வந்த அரண்மனை வீரர்களுக்குத் தலைமை தாங்கி வந்தவன் தான், தன் முகத்தை முகமூடியால் மறைத்து இருமுறை என்னைக் கொல்லவந்தவன் என்று உணர்ந்துகொண்டேன். அவனையறியாமல் நான் விரித்த வலையில் சிக்கிக்கொண்டான்".
"என்ன நண்பா! நான் கூறியது சரி தானே?" என்று கூறி முகமூடி மனிதனை ஓரக்கண்ணால் பார்த்தான்.
முகமூடி மனிதன் சம்யுக்தனின் அறிவுக்கூர்மையை எண்ணி வியந்து போனான். கூடவே அவனைச் சுற்றி ஒரு பய அலை படர்ந்தது. சம்யுக்தனை மேலும் பேச விடாமல் அவன் உயிரைக் குடித்துவிடவேண்டும் என்று எண்ணினான்.
காவல் தளபதியைப் பார்த்து, "தலைவரே! இன்னமும் இவன் உயிரோடு இருப்பது ஆபத்து" என்று கூறி தன் வாளை உருவி சம்யுக்தனைக் கொல்லப் பாய்ந்தான். காவல் தளபதி, முகமூடி மனிதனை தன் கூரிய விழிகளால் நிறுத்தினான். அப்பார்வைக்கு முகமூடி மனிதன் பெட்டிப் பாம்பாய் அடங்கினான். ஆனால், அவன் ஆத்திரம் மட்டும் அடங்கவில்லை. எரிமலை போல கொப்பளித்துக்கொண்டே இருந்தது.
சம்யுக்தன் முகமூடி மனிதனை பரிகாசம் பொங்கப் பார்த்தான். "என்ன நண்பா! என் உயிரைக் குடிப்பதற்கு இவ்வளவு வேகமாகத் துள்ளுகிறாய்? கதை முடியட்டும். என் கதி உன் கையில்" என்று கூறி கதையை மீண்டும் தொடர்ந்தான்.
என் கையில் கிடைத்த காவல் தளபதியின் முத்திரை, என் நண்பர்களைத் தேடிவந்ததாகக் கூறியவர்கள், வைத்தியர் என் நண்பனைத் தாக்கியவனைப் பற்றிச் சொன்ன தகவல்கள் இவை மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவையாக எனக்குத் தோன்றியது. இவை எப்படி பிணைந்திருக்கின்றன என்று கற்பனையைத் தூண்டிவிட்டேன்.