(Reading time: 12 - 23 minutes)

“மற்ற யார் சொல்வதை விடவும், நீங்க சொன்னால் அத்தான் எல்லாமே கேட்பார் தானே அத்தை. ?”

“அப்படி இல்லை மித்ரா. அவனுக்கு சரி என்று தோன்றும் விஷயங்களில் மட்டும் தான் எனக்காக செய்வது போல் செய்வான். மற்றபடி அவன் நினைத்தது தான் செய்வான்”

“உங்களுக்கு பயமா இல்லையா?

“பயம் தான். ஆனால் ரிஸ்க் என்பது எல்லாத்திலும் தான் இருக்கு. அவன் இதை தொழிலாக செய்யவில்லை. ஆசைக்காக செய்கிறான். அதனால் அவனுடைய பாதுகாப்பை அவன் நிச்சயப் படுத்திக் கொள்வான். நானும் முதலில் தெரிந்த பின்பு உன்னை மாதிரி பயந்தேன். உன் ராம் மாமா தான் என்னைக் கூட்டிக் கொண்டு போய் அவன் ரேஸ் செல்லும் இடம், அங்கிருக்கும் ஏற்பாடுகள் எல்லாம் காண்பித்தார். அதற்குப் பின் தான் அவனை ஒன்றும் சொல்வதில்லை”

“ஆனால் இன்றைக்கு அடிபட்டு இருக்கிறதே அத்தை. இது எப்போது வேண்டுமானாலும் ஆகும்தானே?

“படும் தான். ஆனால் அவன் இனிமேல் இன்னும் அதிக கவனத்துடன் இருப்பான். அதோடு அவன் இத்தனை அடியிலும், அங்கிருந்த ஆர்கனைசர் பிடித்து ரைட் விட்டு விட்டுத் தான் வந்து இருக்கிறான். அவனுக்குத் திருப்தி இல்லாத இடங்களில் கலந்து கொள்ள மாட்டான். அதனால் கவலைப் படாமல் இரு. அவனிடம் உன் கவலையை எடுத்துச் சொல்லு. புரிந்து கொள்வான். முழுவதுமாக விட்டு விடாட்டாலும் குறைத்துக் கொள்வான்” என்று கூறினாள்.

ஏற்கனவே சபரியும் இதே போல் கேட்டு இருந்ததால், மைதிலி மித்ராவைச் சமாளித்து விட்டாள்.

அன்று முழுவதும் ஷ்யாம் வலியிலும், களைப்பிலும் அதிக நேரம் தூங்க மட்டுமே செய்தான். மருந்து, சாப்பாடு எல்லாம் மித்ரா கொடுக்க, தெரிந்தாலும் , அதைப் பற்றி யோசிக்கக் கூட முடியாமல் களைத்து இருந்தான்.

அந்த நேரத்திலும் மித்ரா விடாது, அவளின் பயம் பற்றிக் கூறி, இது வேணுமா, ப்ளீஸ் யோசிசுக்கோங்க என்று கெஞ்சவே, அவளை சமாதானப் படுத்தினான்.

மறுநாள் காலையில் கொஞ்சம் வலி குறைந்து இருந்தது. எப்போதும் சீக்கிரம் எழுந்து கொள்ளும் வழக்கம் உள்ளவன் தானே. மித்ரா உறங்கிக் கொண்டு இருக்க, தானே எழுந்து பாத் ரூம் செல்ல முயன்றான். அவனின் அசைவில் முழித்த மித்ரா,

“ஏன் அத்தான்? முழிச்சுடீங்கன்னா என்னை எழுப்ப வேண்டியது தானே? என்று படபடத்தாள்.

“ஹேய்.. மித்துமா, ரிலாக்ஸ். இப்போதான் எழுந்தேன்.”

“ம்ம்.” என்றவள், அவன் ரெப்ரெஷ் செய்து விட்டு வரவும், பிரஷ் செய்ய வைத்தாள்.

எல்லாம் செய்தாலும் அவளின் முகம் கலக்கமாகவே இருந்தது. இந்த முகம் அவளின் சிறுவயதில் பார்த்தது. பிறகு சரவணனோடு திருமணம் என்ற நிலையில் ஒரு சில நாட்கள் இதே போல் இருந்தாள். அது நின்று, ஷ்யாமோடு திருமணம் நடந்த பின், அவளையறியாமலே அந்த பயமும், கலக்கமும் சென்று இருந்தது.

இப்போது ஷ்யாமிற்கு அடி என்றவுடன் பழைய அந்த கலக்கம் முகத்தில் அப்பட்டமாக திறந்தது. ஷ்யாம் அவளிடம் பேச எண்ணினான்.

அதற்குள் ரூம் கதவு தட்டப் படவே, அங்கே வாசலில் ராம், மைதிலி நின்று இருக்க, அவர்களுக்கு வழி விட்டாள் மித்ரா.

அவர்கள் வரவே, தன் நைட் டிரஸ் மேல் ஷ்ராக் அணிந்து கொண்டு வந்தாள்.

ஷ்யாம் ராமிடம் “என்னப்பா , ஜாகிங் போகலையா?

“இல்லைடா. நாளைக்கு போய்க்கறேன். உனக்கு இப்போ எப்படி இருக்கு?

“பெயின் கொஞ்சம் இருக்கு. அதர்வைஸ் பைன் பா.

மைதிலி “ஏண்டா, உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு நியாபகம் இருக்கா இல்லையா? என்று கேட்டாள்.

“அப்படியாம்மா” என்று கேட்டவன் , மித்ராவிடம் கண்ணடித்தான்.

“ஏண்டா. சீரியஸ்சா பேசிட்டு இருக்கேன். இப்போ என்னடா நக்கல்?

“சொல்லுங்க மம்மி, சொல்லுங்கள்” என்றான்.

“ம்ச். டேய் சொல்றத கேட்கறியா?” சற்று டென்ஷனாக மைதிலி கேட்கவும்,

“ஓகே. மாதாஜி. உங்க பையன் இப்போ பொறிலே இருக்கான். நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்க”

“உன் வாய் இருக்கே?” என்று ஆரம்பித்தவர் “ஹ்ம்ம். சரிப்படாது. உன்னைப் பேசாவிட்டா பேசிட்டே இருப்ப. இப்போ நான் சொல்றதைக் கேளு. உன்னை நம்பி ஒரு பொண்ணு வந்துருக்கா. எதிர்காலத்துலே ஒரு குடும்பம் வரும். தானா வர சில விஷயங்களைத் தவிர்க்க முடியாட்டாலும், இதே போல் நீயா போய் சிக்காமல் இருக்காலாம் இல்லியா?

“அதுக்கு இப்போ என்ன செய்யணும்னு சொல்றீங்க?

“ரேஸ்க்கு போறத குறைசுக்கோன்னு சொல்றேன்”

 ஒரு பெருமூச்சு விட்டு “சரிம்மா, ட்ரை பண்றேன்” என, இப்போது மித்ரா, மைதிலி இருவரின் முகத்திலும் சற்றுத் தெளிவு வந்தது.

அப்போது சுமித்ரா வேகமாக வந்தவள், தன் அண்ணன் கையைப் பிடித்துப் பார்த்து விட்டு, ஜுரம் இருக்கிறதா என்று செக் செய்தாள். அவள் வந்ததில் இருந்து எதுவும் பேசாமல் , வேலையில் கண்ணாயிருக்கவே, மற்றவர்கள் அவளையேப் பார்த்து இருந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.