(Reading time: 15 - 29 minutes)

தற்குள் அவர்கள் அருகில் வந்துவிட்ட விபாகரன் புவனாவை பார்த்து, “எப்படிம்மா இருக்கீங்க, என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கா..” என்றுக் கேட்டான்.

“நான் நல்லா இருக்கேன் ப்பா.. அப்போ பாலா கூட ரெண்டு மூனு பேர் ஒன்னா வீட்டுக்கு வந்துருந்தீங்களா.. அதான் சரியா ஞாபகத்துக்கு வரல.. தப்பா நினைச்சுக்காதப்பா..” எனவும்,

“பரவாயில்ல விடுங்கம்மா.. எப்பவோ பார்த்தது இல்லையா.. மறந்து போயிருக்கும்” என்றவன், பின் மதுரிமா அருகில் உட்கார்ந்திருந்த ரூபினியை பார்த்து,

“ஹலோ சிஸ்டர்,   , சாரி உங்க கல்யாணத்துக்கு என்னால வர முடியல, எப்படி இருக்கீங்க? எங்க பாலா உங்களை எப்படி பார்த்துக்கிறான்..” என்று கேட்கவும்,

“டேய் கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆச்சு, இப்போ வந்து இந்த கேள்வியை இவளை பார்த்து கேட்பதற்கு பதிலா, என்னை பார்த்து கேட்ருக்கணும்டா, இப்போ அவ என்னை நல்லா பார்த்துக்குற நிலைமை தான் ஓடுது..” என்று சொல்லவும் ரூபினி அவனை பார்த்து முறைத்தாள். பிறகு விபாவை பார்த்து,

“நான் ரொம்ப நல்லா இருக்கேன் ண்ணா.. பாலா உங்களைப் பத்தி அடிக்கடி பேசுவாங்க.. அதுல இருந்தே உங்களை அடிக்கடி பார்க்கணும்னு நினைப்பேன், இப்போ தான் சான்ஸ் கிடைச்சுது, உங்களை மீட் பண்ணதுல சந்தோஷம்..” என்றாள்.

“சாரிம்மா.. உங்க கல்யாணத்தப்போ நான் வெளிநாட்டுல இருந்தேன். அதான் என்னால உங்க கல்யாணத்துல கலந்துக்க முடியல” என்று விபா ரூபினியை பார்த்து மன்னிப்பு கேட்ட போது,

“ஆமாம் அப்போ வெளிநாட்டுக்கு போனவன் தான், இப்போ தான் நம்மள பார்க்க அவனுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு, அதுவும் அவனா நம்மள பார்க்க வரல, இப்பவும் நாம தான் அவனை பார்க்க வந்திருக்கோம்….” என்று தன் திருமணத்திற்கு கூட விபாகரன் வரவில்லையே, என்ற வருத்தத்தை மனதில் வைத்துக் கொண்டு ஒரு குறை போல் இப்போது பாலா பேசவும்,

“டேய் நான் உங்களை நேர்ல பார்த்து வாழ்த்து சொல்லலைனாலும், எவ்வளவு தூரத்துல இருந்தாலும்,  உன்னோட கல்யாண வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான் என்னோட மனசு நினைக்கும் பாலா.. நீயே என்னை புரிஞ்சிக்கலன்னா எப்படி..” என்று கேட்கவும்,

“என்ன பாலா இதைப்பத்தி இப்போ பேசிட்டு இருக்க, விபா எப்பவும் வேலை வேலைன்னு ஓடிக்கிட்டே இருக்கிறதா எத்தனை முறை நீயே வருத்தப்பட்ருக்க.. அப்புறம் என்ன, மனசுல வருத்தத்தை வச்சிருக்காம, மறந்திடு..” என்று புவனா விபாகரனுக்கு ஆதரவாக பேசினார்.

“ஆமாம் தன்னை சுத்தி இருக்கவங்களை பத்தி நினைப்பில்லாம இப்படி வேலை வேலைன்னு ஓடி ஓடி அதுல என்ன கிடைக்க போகுது சொல்லுங்க, எப்போ தான் இவன் அதெல்லாம் புரிஞ்சிக்கப் போறானோ..” என்று தன் மகன் நிலையை குறித்த கவலையில் மஞ்சுளா பேசினார்.

“சரி விடுங்கம்மா எல்லாம் விபா கொஞ்ச நாளில் சரியாகிடுவான்..” என்று பாலா தான் அந்த சூழ்நிலையை மாற்ற வேண்டியதாக போனது.

பிறகு, “விபா இது யார்னு தெரியுதா?” என்று மதுரிமாவை காட்டிக் கேட்ட போது, உண்மையிலேயே அவனுக்கு அது யாரென்று தெரியவில்லை.

சில காரணங்களால் சில வருடங்களாக சினிமாவை வெறுத்துக் கொண்டிருப்பவன், திரைப்படங்கள் பார்ப்பதையே விட்டிருந்தான். அதனால் புதிதாக வந்த நடிகர் நடிகைகளை அவனுக்கு தெரியாது..

மதுரிமாவை அவர்கள் நிறுவனத்தின் தயாரிப்புக்காக நடிக்க வைக்கலாம் என்று சொன்னது கூட அர்ச்சனாவின் கணவன் விஜய் மற்றும் அவன் சகோதரன் அஜயும் தான், இப்போதெல்லாம் நடிகர், நடிகைகளை வைத்து விளம்பரம் எடுத்தால் தான் நம் தயாரிப்பு கொஞ்சம் பிரபலமாகும் என்று இருவரும் சொன்னதால், அந்த பொறுப்பை அவர்களிடமே விபாகரன் ஒப்படைத்திருந்தான். அதனால் மதுரிமாவை அவன் அறிந்து வைத்திருக்கவில்லை.

அதனால் சிறிது நேரம் யோசித்தவன், “இது தேவியா?” என்றுக் கேட்டான்.

அவன் தேவியையும் நேரில் பார்த்ததில்லை தான், ஆனால் எப்போதாவது பார்க்கும் சமயங்களில் பாலா தன் குடும்பத்தைப் பற்றி விபாவிடம் பேசுவான். அப்போது தேவி ஒரு வேலைக்காரியின் மகளாக வீட்டுக்கு வந்தது. அவளது அன்னை இறந்த பின்பும் அவளை தங்கள் மகளாக பாவித்து அவளுக்கு நல்ல கல்வியை கொடுத்து, அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க பாலாவின் பெற்றோரை அவன் உயர்வாகவே நினைப்பான், பாலாவும் அவளை தன் சகோதரியாக ஏற்றுக் கொண்டதை பற்றி பேசும் போது,

“என்னோட யதும்மாவும் இப்படி ஏதாவது ஒரு இடத்தில் பாதுகாப்போடு அடைக்கலமாய் சென்றிருப்பாளா? அப்படி ஒரு பாதுகாப்பில் இருப்பதால் தான், அவள் யாரையும் தேடி வரவில்லையோ, அப்படித்தான் இருக்க வேண்டும், அதைத் தாண்டி அவளுக்கு எந்த ஆபத்தும் ஏற்ப்பட்டிருக்கக் கூடாது, என்பது அவனது வேண்டுதலாக இருக்கும், அதனாலேயே தேவி என்ற பெயர் ஞாபகத்தில் உள்ளதால், அவன் தேவியாக இருக்குமோ என்று நினைத்துக் அப்படிக் கேட்டான்.

“டேய் இது மதுரிமா டா.. இப்போதைய லீடீங் ஹீரோயின்ல இவளும் ஒருத்தி..” என்ற பாலாவின் பதிலில்,

“சாரி மது.. நான் சினிமால்லாம் பார்க்கறதில்ல, அதனால எனக்கு உங்களை சரியா தெரியல..” என்று மன்னிப்புக் கேட்டான்.

“அய்யோ அதனால என்ன பரவாயில்லை விடுங்க..” என்று மதுரிமா கூறினாள்.

தன்னை விபாகரனுக்கு தெரியவில்லையே என்பதில் மதுரிமாவிற்கு ஒன்று வருத்தமோ, இல்லை கோபமோ ஏற்பட்டிருக்க வெண்டும், ஆனால் மற்றவர்கள் பார்வைக்கு எப்போதும் அவள் ஒரு நடிகையாக தெரிந்து, என்ன இருந்தாலும் இவள் நடிகை தானே என்று கீழிறக்கமாக பார்ப்பவர்களுக்கும், அத்துமீற நினைப்பவர்களுக்கும் மத்தியில் விபாகரனுக்கு தான் ஒரு சாதாரணமான பெண்ணாக தெரிந்ததில்,

அவள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றது போல ஒரு ஆடவனை இப்போது பார்த்ததில், அவனை பற்றி முழுமையாக தெரியாத போதும், பார்த்ததுமே கொஞ்சமாய் அவன் பக்கம் சலனப்பட்ட மனது, இப்போது அவன் பார்வையில் தான் ஒரு சாதாரண பெண் தான் என்று தெரிந்த பின், அவள் மனம் அவனிடம் முழுமையாக சாய ஆரம்பித்துவிட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.