(Reading time: 22 - 43 minutes)

“என்ன கண்ணு நீ எதுக்கு இப்போ இப்படி அழற வார்த்தைக்கு வார்த்தை அம்மா அம்மானு கூப்பிட்டு இப்படி பேச உனக்கு உரிமையில்லையா..இந்த வீட்டு செல்லம் டா நீ..அழாத முதல்ல கண்ணை துடை..இங்க வா சூடா காபி தரேன் சாப்டு..எதோ கெட்ட நேரம் எல்லாம் முடிஞ்சுதுனு நினைச்சுக்கோ..”,என்றவாறு அவளை சமையலறைக்கு அழைத்துச் சென்றார்.

அதன்பின் அன்றைய பொழுது திவா அந்த வழக்கு விஷயமாக வெளியே சென்று விட தங்களறைக்குள்ளேயே முடங்கியிருந்தாள் வெண்பா.ஏனோ மிகப் பெரிய தவறு இழைத்து விட்டதாகவே தோன்றியது அவளுக்கு.

மாலையில் திவா வீட்டிற்கு வர அவனிடமுமே ஒதுங்கியேதான் இருந்தாள்.திவாவும் சிந்தாம்மாவும் அவள் மனநிலை உணர்ந்தவர்களாய் அவர்களாகவே அவளை அழைத்து பேச்சுக்குள் கொண்டுவர முயன்றனர்.இருந்தும் பழைய வெண்பா வெளியே வரவேயில்லை.

இரு தினங்கள் இப்படியே கடக்க திவா அவளை  பள்ளிக்குத் தயாராகுமாறு கூற மனசு சரியில்லை என்பதோடு நிறுத்திக் கொண்டாள்.

வெண்பாவை பார்க்க ஒருபுறம் பாவமாக இருக்க திவாவை பார்த்தால் அதைவிட மோசமாக இருந்தான்.ஒரு வாரமாக வழிக்கபடாத தாடியோடு கண்கள் ஒளியிழந்து இயந்திரதனமாய் சுற்றிக் கொண்டிருந்தான்.

சிந்தாம்மாவிற்கு என்ன செய்வதென ஒன்றும் புரியாமல் போனது.விதி என்பதை தவிர யாரையும் குறை சொல்லக்கூட தோன்றாமல் கோவில் குளமென சென்றார்.

இப்படியாய் அடுத்த மூன்று நாட்கள் கடந்த நிலையில் திவா மருத்துவமனைக்கு கிளம்பி விட தங்கள் அறையை ஒழுங்குபடுத்தலாம் என முடிவு செய்தவள் ஒட்டடை அடித்து மெத்தை தலையணை உறைகளை மாற்றி முடித்து கப்போர்ட்டில் அனைத்தும் அடுக்கி வைக்கலாம் என முடிவு செய்தாள்.

அந்த நேரத்தில் மனமும் சற்றே லேசாவதாய் உணர்ந்தவள் அனைத்தையும் ஒழுங்குபடுத்தி விட்டு பைல்கள் இருக்கும் அலமாரியில் இருந்து அனைத்தையும் வெளியே எடுத்து போட்டு ஒவ்வொன்றாய் அடுக்கி வைக்க ஆரம்பித்தாள்.

நடுவில் வெண்பாவின் பெயர் போட்ட திவ்யாந்தின் மருத்துவமனை பைல் ஒன்று இருந்தது.சிரத்தையின்றி அதை பிரித்தவள் அதில் பார்வையை சுழற்ற அதிலிருந்த விஷயம் அவளுள் அடுத்த பிரளயத்தை ஏற்டுத்தியது.

கால்கள் துவள அப்படியே கீழே அமர்ந்துவிட்டாள்.மீண்டும் மீண்டும் அந்த ரிப்போர்ட்டை படித்து தனக்குள் கிரகித்துக் கொள்ள எண்ணியவளுக்கு ஏனோ அது அத்தனை சுலபமாய் இருக்கவில்லை.

எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தாளோ தெரியாது அறைகதவு தட்டப்படும் ஓசையில் தெளிந்தவள் மெதுவாய் நடந்து சென்று கதவை திறக்க சிந்தாம்மா மதிய உணவிற்காக அழைத்தார்.

“இல்லம்மா பசிக்கல..நீங்க சாப்டுருங்க..நா அப்பறமா சாப்ட்டுகிறேன்..”

“ஏன் கண்ணு முகமே சரியில்ல என்னாச்சு?”

“ம்ம் ஒண்ணுமில்லமா தூங்கிட்டேன்.இன்னும் தூக்கமா தான் இருக்கு அதான்..தூங்கி எழுந்து சாப்பிட்டுகிறேன்.”

“ம்ம் சரி டா படுத்துக்கோ..”

கதவை சாத்திவிட்டு வந்து கட்டிலில் அமர்ந்தவளுக்கு அப்போதும் அழ வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை.அலமாரியையே வெறித்திருந்தவள் கீழிருந்த பைல்களை எல்லாம் அடுக்கி ஒழுங்குபடுத்திவிட்டு அந்த ஒரு பைலை மட்டும் எடுத்து தன் தலையணைக்கடியில் வைத்துவிட்டு படுத்துக் கொண்டாள்.

இலக்கில்லாமல் எங்கோ வெறித்தவாறே படுத்துக் கிடந்தவள் மாலை ஆனதும் எழுந்து சிந்தாம்மாவிற்காக பெயருக்கு ஏதோ கொரித்துவிட்டு அவரோடு ஹாலிலேயே அமர்ந்திருந்தாள்.

டீவி ஒருபுறமும் சிந்தாம்மாவின் பேச்சு மறுபுமுமென அடுத்த ஒரு மணிநேரம் கழிய திவ்யாந்த் ட்யூட்டி முடித்து வந்தான்.வந்தவன் வழக்கம்போல் இரண்டு நிமிடங்கள் ஹாலில் அப்படியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.

“ஒரு வழியா இந்த காலேஜ் பிரச்சனை முடிஞ்சுது.ஆனாலும் மனசு தான் ஆரவே மாட்டேங்குது.அம்மா அப்பாக்கு அடுத்த ஸ்தானம் ஆசிரியர்கள் அப்படி இருக்க அவங்களில் சிலரே இப்படி கேவலமா நடந்துகிட்டா பெத்தவங்க யாரை தான் நம்புவாங்க.

அதுவும் ஒவ்வொரு தடவையும் அந்த பொண்ணு அழுதுட்டு வந்து நிக்கும்போது மனசே பாரமாய்டும்.சின்ன பொண்ணு நடக்குறதையெல்லாம் என்கிட்ட சொல்லறதுக்குள்ள கூனிக் குறுகிப் போவா..

என்னதான் அண்ணன்னு சொன்னாலும்  நானும் ஒரு ஆம்பளை தான..நிஜமா ரொம்ப அவமானமா இருக்கு கண்ணம்மா..நாம பாதுகாக்க வேண்டிய பெண்களுக்கு நாமே எதிரியா இருக்குமேனு தோணுது..

பஸ்ல ரோட்ல வேலை பார்க்குற இடத்துல இதெல்லாம் போய் இப்போ படிக்குற இடத்துலயே இப்படினா என்னதான் டா பண்ணுவாங்க..என்னவோ இதைபத்தி எவ்ளோ பேசுனாலும் ஒண்ணும் பண்ண முடியாம கையாலாகாம தான் இருக்கோம்.

சரி சிந்தாம்மா சாப்பாடு எடுத்து வைங்க ரொம்ப பசிக்குது..கண்ணம்மா நீயும் சாப்டு..டூ மினிட்ஸ் நா ரெப்ரெஷ் ஆகிட்டு வரேன்”,என்றவன் எழுந்து சென்று உடைமாற்றி வந்து அமர வெண்பாவும் அமைதியாய் அவனருகில் வந்தமர்ந்தது உணவை உண்ண ஆரம்பித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.