(Reading time: 22 - 43 minutes)

உணவை முடித்தவள் அவள்போக்கில் அறைக்குள் சென்றுவிட திவ்யாந்த் சில நிமிடங்களில் உள்ளே வந்தான்.

“கண்ணம்மா என்னாச்சு ரொம்ப டல்லா தெரியுற?”

“ம்ம் திவா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..”

“சொல்லுடா என்னாச்சு?”

“இல்ல இத்தனை நாள் நடந்த குழப்பத்துல இதைபத்தி கேக்கவே தோணாம போச்சு..”

“எதைப்பத்தி?”

“அது வந்து உங்க ஹெல்த் இஷு பத்தி..”

“எனக்கா எனக்கென்ன டா?”

“இல்ல நமக்கு குழந்தை..”

“ஓ..அது..அதைப்பத்தி சொல்றியா..”,என்றவன் அவனாய் அமைதி ஆனான்.

“சாரி உங்களை கஷ்டப்படுத்தனும்னு கேட்கல..இருந்தாலும் என்ன இஷுனு தெரிஞ்சா ட்ரீட்மெண்ட் பத்தி  யோசிக்கலாம் தான..”

“ம்ம் நீ சொல்ல வர்றது புரியுது கண்ணம்மா ஆனா இதுக்கு ட்ரீட்மெண்டே இல்லனு சொல்லிடாங்க..”

“ஓ….”,என்றவளின் முகம் இன்னுமாய் வாடிப்போக அவனுக்கு ஒரு நொடி மனம் பதைத்துப் போனது.மெதுவாய் அலமாரியில் ஏதோ தேடுவதாய் எழுந்துச் சென்றவன் பைல்களை ஆராய அங்கு அந்த பைல் இல்லாததை கண்டு இதயமே நின்று போனதாய் உணர்ந்தான்.

“இதையா தேடுற திவா..”,என்றவள் தலையணை அடியிலிருந்து அந்த பைலை எடுத்து அவன்முன் நீட்ட அப்படியே கட்டிலில் அமர்ந்துவிட்டான்.

“கண்ணம்மா..”

“ஏன் திவா இப்படி பண்ண?சொல்லிருக்கலாமே..”

“தாங்கிருக்க மாட்ட டா..இப்பவும் உன் மனநிலைமை எனக்கு புரியுது..இருந்தாலும் எதை நினைச்சும் கவலைபடாத டா..நா இருக்கேன்..”

அவன் மடியில் தலை சாய்த்துக் கொண்டவள் மெதுவாய்,”என்ன ப்ராப்ளம் திவா..க்யூர் பண்ணவே முடியாதா?”

“இதை மறந்துடேன் ப்ளீஸ்..”

“ஒண்ணும் பீல் பண்ண மாட்டேன் சொல்லு திவா..ட்ரீட்மெண்ட் இல்லையா?”

“கண்ணம்மா..அன்னைக்கு ரிபோர்ட் வாங்க போனப்போ என்னோடதை ரிவ்யூ பண்ணிட்டு முதல்ல கொடுத்தாங்க..அடுத்ததா உன்னோடதை பாத்துட்டு விஷயத்தை சொன்னப்போ ரொம்வே உடைஞ்சு போயிட்டேன்.

கர்பப்பை ரொம்பவே வீக் அதாவது ஒரு குழந்தையை தாங்க கூடிய சக்தி இல்லை அதனால ப்ரெக்னென்ஸிக்கான வாய்ப்பு இல்லைனு சொன்னாங்க..என்ன பண்றதுனு ஒரு நிமிஷம் ஒண்ணும் புரியல ஆனா கண்டிப்பா இதை உன்கிட்ட சொல்ற தைரியம் எனக்கு இல்லனு மட்டும் கன்பார்மா எனக்கு தெரியும்.

டாக்டர் என்னனென்னவோ சொன்னாங்க ஒண்ணும் மண்டையில் ஏறல இரண்டு நிமிஷம் யோசிச்சேன் டாக்டர்கிட்ட சொல்லி எனக்கான ரிப்போர்ட்டை மாத்த சொன்னேன்.முடியவே முடியாதுனு சொன்னாங்க..

ஒருவழியா அவங்களை கன்வின்ஸ் பண்ணேன்..உன் ரிப்போர்ட்டை அங்கேயே வச்சுட்டு என்னோடதை மட்டும் எடுத்துட்டு வந்தேன்.ஆனா விஷயத்தை கேட்டு நீ கொஞ்சமும் அலட்டிக்காம அத்தனை சாதாரணமா எடுத்துப்பனு நா நினைக்கவே இல்ல.

அந்த ரிப்போர்ட்டை கண்ணால கூட பார்க்கல நீ..அந்த செகண்ட் உன்னை எனக்கும் மேல நா நேசிக்க ஆரம்பிச்சேன் கண்ணம்மா..அத்தனை பெரிய விஷயத்தை ஒண்ணுமேயில்லங்கிற மாதிரி நீ எடுத்துகிட்டது நா பண்ணதுல எந்த தப்பும் இல்லனு நம்ப வச்சுது..என்னால முடிஞ்ச வரை இந்த விஷயத்தை இப்படியே இருக்க விடணும்னு  நினைச்சேன்.

இந்த காலேஜ் விஷயமா அலைய வேண்டியது இருந்ததுனால இந்த பைலை என் ரூம்ல வைக்க வேண்டாம்னு இங்க கொண்டு வந்து வச்சேன்.ப்ளீஸ் டா நீ எதுவும் போட்டு வருத்திக்காத குழப்பிக்காத..நாம இதுக்கு ஒரு நல்ல முடிவை கொண்டு வரலாம்.”

சலனமே இல்லாமல் அவன் முகத்தை பார்த்தவள்,”நீ ஏன் திவா இன்னொரு மேரேஜ் பண்ணிக்க கூடாது?”

“கண்ணம்மா!!!இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினாலும் நா என் கன்ட்ரோலை இழந்துடுவேன்..இதை இப்படியே விட்டுரு..”

முதன்முறையாய் திவாவின் குரலிலும் கண்களிலும் அத்தனை தீவிரம்..சிறிது கோபம் இருந்ததோ என்று கூட தோன்றியது வெண்பாவிற்கு.அவனைப் பற்றி அத்தனை அவதூறு பேசிய போதும் குழந்தை பிறப்பதில் பிரச்சனை தன்னிடம் என்று கூறியபோதும் கூட வராத அந்த கோபமும் தீவிரமும் அவளின் இந்த வார்த்தைக்கு வருகிறதெனில் அது எத்தனை தவறான ஒரு பேச்சு என்பது வெண்பாவிற்கு நன்றாகவே விளங்கியது.

மெதுவாய் எழுந்து அமர்ந்தவள் அவன் முகம் பார்த்து,“கோபபடாத திவா..வெறும் குழந்தைக்காக உன்னை கல்யாணம் பண்ண சொல்லல ஏற்கனவே உனக்கு யாருமில்லனு எவ்ளோ பீல் பண்ணிருக்க அதுக்காக தான் சொல்றேன்.அது மட்டும் இல்லாம உன்னோட இந்த காதலுக்கு முழு தகுதியில்லாதவ நான்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.