(Reading time: 22 - 43 minutes)

ஆனால் அதை எல்லாம் எப்படித் தெரிந்து கொள்ள என்றுத் தெரியாமல் தயங்கியவள், பிறகு தன்னைத் தைரியப் படுத்திக் கொண்டவளாக மித்ராவிடம் சென்று விவரம் கேட்க, அவளோ தனக்கு ஒன்றும் தெரியாது என்றுரைத்தாள்.

வேறு யாரிடமும் கேட்க முடியாமல், ஷ்யாமிடமே விவரம் கேட்க, அவனோ எங்கள் மேல் நம்பிக்கை இல்லையா? என்று கேட்டான். அதற்கு மேல் ஒன்றும் சொல்லாமல் தயார் ஆக ஆரம்பித்தாள்.

மனதிற்குள் சேகருக்கு லட்சார்ச்சனை செய்து கொண்டே, வருபவனை எப்படியாவது விரட்டி விட்டுடலாம் என்று திட்டம் போட்டாள்.

குறிப்பிட்ட நேரம் வந்து சேர்ந்த மாப்பிள்ளை வீட்டாரிடம், சுமித்ராவை அழைத்துச் செல்ல, குனிந்த தலை நிமிராமல் வந்தவள், இவர்தான் மாப்பிள்ளை என்று அறிமுகபடுத்தும் குரல் கேட்க, நிமிர்ந்து பார்த்தவள், தன் கையில் இருந்த காபி ட்ரேயை கீழே போடப் போனாள்.

கடைசி நிமிடம் சுதாரித்து பேலன்ஸ் செய்ய, சேகரோ அவளைப் பார்த்துக் கண் சிமிட்டினான். சுமி அவனை ஒரு முறை முறைத்து விட்டுப் பின் பெரியவர்களைப் பார்த்து முறுவலித்தாள்.

மேற்கொண்டு திருமணம் பற்றிப் பேசவும், அவள் ஒரு வருடம் கழித்து வைத்துக் கொள்ளலாம் என்றாள்.

ஏன் என்று வினவியர்களுக்கு, அவள் படிப்பு மட்டுமில்லாமல், தங்கள் வீட்டு புது வரவோடும் சில நாட்கள் கழிக்க விரும்புவதாகக் கூறவே, எல்லோரும் சரி என்று ஒத்துக் கொண்டனர்.

மித்ராவிற்கு ஐந்து மாதம் கழியவும், சுமித்ரா நிச்சயம் நடத்தலாம் என்று மைதிலி கூற, டாக்டராக சேகரின் பெற்றோரும் புரிந்து கொண்டனர்.

அவர்கள் எல்லோரும் கிளம்பவும், ஷ்யாமிடம் வந்து சுமி “தேங்க்ஸ் அண்ணா” என்று கூற,

“ஹேய்.. செல்லக் குட்டி. இந்த வீட்டு இளவரசிடா நீ . உனக்குப் பிடிக்காத எதுவும் இங்கே நடக்காது “ என்று கூறவே, சுமித்ரா கண்ணீரோடு அவனின் கைப் பிடித்து அழுத்தினாள்.

நாட்கள் பறக்க, மித்ரா கர்ப்பக் காலத்தில் உண்டாகும் அத்தனை உடல் உபாதைகளுக்கும் ஆளானாள். அந்த நேரத்தில் ஷ்யாம் , மைதிலி இருவரும் அவளை வெகுவாகத் தாங்கினார்கள்.

சுமித்ராவோ மித்ராவை சோர்ந்து போக விடாமல், தன் கலகலப்பால் அவளையும் கலகலப்பாக வைத்து இருந்தாள்.

வீட்டில் மற்றவர்களும் மித்ராவை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டனர். மித்ரா சற்று நார்மலாகவும், ஷ்யாம் வெளி வேளைகளில் கவனம் செலுத்த, அந்த நேரங்களில் மித்ரா குழந்தைப் பிறப்பைப் பற்றிய விவரங்களை நெட்டில் தேடி படிக்க ஆரம்பித்தாள்.

அது அவளை வேறு விதத்தில் கலங்க வைக்க, அதை மனதிலே வைத்து அழுத்திக் கொண்டாள்.

அந்த மாதம் செக்கப் செல்லும்போது அவளின் பிரஷர் லெவல் மாறுபட்டு இருக்க, டாக்டர் அவளை கவுன்செல்லிங் செல்லச் சொன்னார்.

முதலில் எதுவும் பேசாமல் இருந்த மித்ரா, டாக்டரின் முயற்சியில் தன் பயத்தைத் தெரிவிக்க, அதைப் பற்றிய விவரங்களை அவளைப் பார்க்கும் கைனக்கிடமே பேசச் சொன்னார்.

கைனக்கிடம் பேசும்போது ஷ்யாமும் இருக்க, அவனும் கேட்டான்.

தனக்கு இருக்கும் லேர்னிங் டிசார்டர் தன் குழந்தைக்கும் வருமோ என்ற தன் பயத்தைக் கேட்க, அதற்கு வாய்ப்பு இருப்பதாகவே டாக்டர் கூறினார்.

டாக்டர் அப்படிக் கூறவும் , ஷ்யாம் யோசனையோடு அவரைப் பார்க்க, அப்படி ஒருவேளை பிறக்கும் குழந்தைக்குப் பிரச்சினை இருந்தால், அதற்காகக் குழந்தையை கை விட போறியா? என்று டாக்டர் கேட்டார்.

மித்ரா முழிக்கவும், பிறக்கப் போற குழந்தைக்கு இப்படி வருமோ, அப்படி இருக்குமோ என்று பயந்தால், பிறந்த பின் நீ எப்படி அந்தக் குழந்தையைப் பார்த்துக் கொள்வாய். சின்ன விஷயத்திற்கும் பயப்பட மாட்டாயா? என்றவர்,

“அப்படி ஒருவேளை பிறந்தாலும், உன்னை உன் வீட்டில் உள்ளவர்கள் பார்த்துக் கொண்டது போல், நீ அந்தக் குழந்தையைப் பார்த்துக் கொள். நீ மற்ற யாரையும் விட எந்த விதத்திலும் குறைந்தவள் அல்ல. அதையே உன் பிள்ளைக்கும் சொல்லிக் கொடு. அப்படி நீ செய்வது தான் நல்ல முன்னுதாரனமாக இருக்கும்” என்று மேலும் கூறவும், மித்ரா மனம் சற்றுத் தெளிந்தது.

மித்ராவை ஸ்கேன் எடுக்க அனுப்பி விட்டு வந்த ஷ்யாம், டாக்டரிடம்,

“டாக்டர், இப்போ மித்ராவிடம் இதைப் பற்றிப் பேசுவது சரியா?” என்று கேட்டான்,

“அவசியம் ஷ்யாம். மித்ரா மற்றவர்கள் போல் இருந்தால் , இதைப் பற்றித் தெரியும்போது அவளை தயார்படுத்த முடியும். ஆனால் மித்ராவே அதில் பாதிக்கப் பட்டவள். எனவே இப்படி ஒரு பிரச்சினை என்றால், அவள் மேலும் டிப்ரேஸ் ஆகாமல் இருக்க, இதுவே அவளுக்கு நல்ல கவுன்செல்லிங் ஆக இருக்கும். அவளின் மனதை இப்போதே தயார்படுத்துவது அவளின் உடல்நிலைக்கும் நல்லது” என்று கூறினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.