(Reading time: 22 - 43 minutes)

“அதோடு ஒரு குறையை எதிர்பார்த்துவிட்டு அது இல்லாமல் நிறைவாகக் குழந்தைப் பிறந்தால் அது மிக சந்தோஷமே. அதே சமயம் இப்போது நிச்சயமில்லாத ஒன்றை அவள் நம்பும் படிக் கூறிவிட்டு , பின் மாற்றாக நடந்தால் அதன் தாக்கம் அவளை மிகவும் பாதிக்கும்.”

டாக்டர் எதிர்பார்த்தது போல் மித்ராவும் அதற்குப் பிறகு குழந்தை நல்லபடியாகப் பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டாலும், மற்றதைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.

இந்த நிலையில் சுமியின் நிச்சயம் வர, அதற்கு வந்தான் அஷ்வின். சுமியின் நிச்சயத்தில் சைந்தவி, அஸ்வின் இருவரும் தான் இளமைப் பட்டாளத்தின் தலை ஆக இருந்தார்கள்.

மித்ராவால் அதிகம் ஆரப்பாட்டங்களில் கலந்து கொள்ள முடியவில்லை. ஷ்யாமோ மித்ராவைப் பார்ப்பதையே தன் தலையாய வேலையாகக் கொண்டான்.

அஷ்வின் , சைந்தவி இருவரின் ஆர்ப்பாட்டம் பார்த்து அவர்களிடம் திருமணத்தைப் பற்றிப் பேச, அவர்களோ மறுத்து விட்டார்கள்.

அஷ்வின் சைந்தவியும் தனக்கு ஒரு தங்கையே எனக் கூற, சைந்தவியோ கொஞ்ச நாள் போகட்டும் என்றாள்.

அஷ்வினிடம் ஷ்யாம் பேச வர மித்ராவும் அவர்களோடு இணைந்து கொண்டாள்.

“அஷ்வின் , சைந்தவி இல்லாட்டா வேறே பொண்ணு பார்க்கச் சொல்லலாமா?

“இல்லை அத்தான். நான் இந்த நியுரோவில் ஜெனெடிக் பற்றி ரிசெர்ச் செய்யப் போறேன். எங்கள் மித்ராவிற்கு நீங்க கிடைச்சது போல் எல்லோருக்கும் கிடைப்பது இல்லை. அவர்களின் பிரச்சினைகளை ஜெனெடிக் முறையில் சரிப் படுத்த முடியுமா என்ற ஆராய்ச்சி செய்யப் போகிறேன். அமெரிக்காவில் அது பற்றிய படிப்பிற்கு என்ட்ரென்ஸ் எக்ஸாம் எழுதிட்டேன். ரிசல்ட்க்காக வைடிங்”

மித்ரா “அண்ணா, என்னாலே தான் நீ கல்யாணம் வேணாம்னு சொல்றியா?

என வினவ,

“ச்சே.. இல்லைடா மித்ரா, நீயும் ஒரு காரணம் அவ்வளவுதான். உன்னோட நியுரோ சம்பந்தப்பட்ட பிரச்சினையில் நீ எவ்வளவு பாதிக்கப் பட்டன்னு நான் கூட இருந்து பார்த்து இருக்கேன். எவ்ளோவோ சப்போர்ட் இருந்தும் நீயே அதை ஹன்ட்ல் பண்ண கஷ்டப்பட்ட. அப்போ இதைப் பற்றித் தெரியாதவங்க என்ன பண்ணுவாங்க? நம்ம வீட்டில் பணம் இருக்கவே, அதை வைத்து  உனக்குத் தேவையானது எல்லாம் பார்த்துச் செய்ய முடிந்தது. மற்றவர்கள் என்ன செய்ய முடியும். இதை எல்லாம் யோசிச்சுத் தான் இந்த முடிவு எடுத்தேன். அங்கே ரிசீர்ச் லேபில் வேலை செய்து கொண்டே படித்து விட்டு சில வருஷங்கள் கழித்து இங்கே வந்து ஒரு ஹாஸ்பிடல் ஆரம்பிக்கிற ஐடியா இருக்கு .” என

ஷ்யாம் “கிரேட் அஷ்வின். என்ன செய்யணுமோ செய். நாங்க புல் சப்போர்ட் கொடுக்கிறோம். ஸ்டில் ரொம்ப லேட் பண்ணாமல் கல்யாணம் பண்ணிக்கோ” என்றான்.

மித்ராவோ “எனக்குக் கிடைத்த இந்த உறவுகளுக்குக் கடவுளுக்குத் தான் நன்றி சொல்லணும்” என்று நெகிழ்ந்தாள்.

சுமித்ராவின் நிச்சயம் முடியவும், சபரியும் , அவள் மாமியாரும் மித்ராவை வளைகாப்பு வைத்து தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லக் கேட்டனர்.

ஷ்யாமோ வளைகாப்பு முடித்து, தன்னோடு மித்ரா இருக்க வேண்டும் என்றான்.

சபரி அவனிடம் கேட்டதற்கு

“அத்தை, பாட்டி, மித்ராவை ஏதாவது சொல்லிக் கொண்டு இருப்பார்கள். ஏற்கனவே அவளுக்கு நிறைய குழப்பங்கள். இவர்கள் இன்னும் அதை அதிகப் படுத்தி விடுவார்கள்” என்றுக் கூறிக் கொண்டு இருக்கும் போதே, மித்ராவின் பாட்டி வந்தார்.

“ஷ்யாம், நீ மித்ராவின் கணவன் மட்டுமில்ல. அஷ்வின் மாதிரி எங்களுக்கும் ஒரு பேரன் போலதான். அந்த உரிமையில் நான் பேசுகிறேன். நான் மித்ராவை அடிக்கடி அதட்டியது வைத்து எல்லோருமே என்னைத் தவறாக நினைத்தீர்கள். ஆனால் எல்லோரும் அவளைக் கண்ணாடியாகக் கையாளுவதில் அவளுக்கு மறுப்பு ஒன்று இருப்பதே தெரியாமல் போய்விட்டது. அதை நான் அவளின் சிறு வயதில் உணர்ந்து கொண்டதால் தான் அவளுக்கு என்னிடம் இருந்து மறுப்பு வரும் என்று  காட்டிக் கொண்டேன். மற்றபடி அவளின் நலனில் உங்களைப் போல் நானும் அக்கறையாகத் தான் இருக்கிறேன். அதோடு அவள் எப்போது உங்கள் வீட்டிற்கு மருமகளாக வந்தாளோ அதன் பின் எனக்கு அவளைப் பற்றியக் கவலை இருக்கவில்லை. பிரசவம் ஒரு பெண்ணிற்கு மறு ஜென்மம் கண்ணா. அதனால் தான் அதை தன் தாய் வீட்டில் வைத்துக் கொள்கிறார்கள், என் பேத்தியின் உடல் நிலை நான் நன்கு அறிவேன். நீ நினைப்பது போல் அவளை எந்த விதத்திலும் கஷ்டப் படுத்த மாட்டேன். அதை நீ எங்களோடு தங்கி இருந்து சரி பார்த்துக் கொள்ளலாம். நீ இங்கிருந்து ஆபீஸ் செல்வதற்குப் பதிலாக , நம் வீட்டில் இருந்து செல். “ என்று கூறவும், ஷ்யாமிற்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.

பின் “பாட்டி, உங்களை நான்தான் புரிந்து கொள்ளவில்லை போலே. உங்கள் இஷ்டப்படி நடக்கட்டும். நான் மித்ராவை வந்து பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.