(Reading time: 17 - 33 minutes)

“சரி அத்தை நா அவரை உங்ககிட்ட பேச சொல்றேன்”,என்றவள் போனை வைத்துவிட்டு ஸ்ரீகாந்திற்கு அழைத்தாள்.

“சொல்லு மது..”

“என்னத்த சொல்றது என்னை கடுப்பேத்துறது தான் உங்கம்மாவோட வேலையா..தீபாவளிக்கு நாம எங்க வீட்டுக்கு போறோம் அவ்ளோதான் சொல்லிட்டேன்..”

“ஏய் என்ன டீ விஷத்தையே சொல்லாம தைய தக்கானு குதிச்சுட்டு இருக்க..என்ன பஞ்சாயத்து இப்போ?”

விஷயத்தை அவனிடம் கூறிவிட்டு அவள் அமைதிகாக்க,”கடவுளே என்ன தான் பிரச்சனை யாரை சரி பண்ணணும்னு எனக்கு ஒண்ணும் புரில.அவங்க எதுக்கு சம்மந்தமே இல்லாம இப்படி பேசுறாங்க?”

“வேற என்ன நா எங்கம்மாவோட போய் கொஞ்சி குலாவிட கூடாதுங்கிற வயித்தெறிச்சல் தான்..”

“சரி நீ ஆரம்பிக்காத நா பேசிக்குறேன்..நைட் வந்துட்டு நாம இதைபத்தி பேசுவோம்..”,என்றவன் அழைப்பை துண்டித்தான்.

மதுவிற்கோ கோவம் தலைக்கேறியது.இவர்களுக்கு தேவையானால் சாஸ்திரம் சம்பிரதாயமெல்லாம் ரொம்ப ரொம்ப முக்கியம்.அதே இது நா எங்கம்மா வீட்டுக்கு போறதுனா வலிக்குதா..மாமியார் ஆனாலே ரெண்டு கொம்பு முளைச்சுருமா என்ன..

அதன் பிறகு இந்த விஷயத்திற்காக ஒரு வாக்குவாதம் முடிந்து மது தன் வீட்டிற்கு தீபாவளிக்குச் செல்ல முடிவானது.ஆனால் இதில் நிஜமாகவே ஸ்ரீகாந்த் நிலைமை தான் பாவமாக இருந்தது.இரண்டு பக்கமும் மாட்டிக் கொண்டு முழித்தான்.அதற்காகவாவது அமைதியாய் இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் மதுவால் சில நேரங்களில் முடியாமல் போனது.

இருவரும் தீபாவளிக்கு முந்தைய நாள் இரவே மதுவின் வீட்டிற்கு வந்துவிட மறுநாள் அதிகாலையிலேயே கங்கா ஸ்நானம் முடித்து புது உடை உடுத்தி ஸ்ரீகாந்தோடு சேர்ந்து வெடி வெடித்துக் கொண்டிருந்தாள்.

தன் மகனின் அலைப்பேசிக்கு அழைத்தவர் இருவருக்குமாய் வாழ்த்து கூற மதுவும் பதிலுக்கு வாழ்த்துரைத்தாள்.

“என் மருமக குரலே இன்னைக்கு தான் இத்தனை சந்தோஷமா இருக்கு..அம்மா வீட்டுல இருக்குற பூரிப்பா..”,என வாழைப்பழத்தில் ஊசி இறக்கினாற் போன்று நக்கல் அடித்துவிட்டு போனை வைத்தார்.

இருந்த அத்தனை உற்சாகமும் வடிந்து போனவளாய் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சமையலறைக்குள் சென்று மரகதத்தோடு அமர்ந்து கொண்டாள்.

“என்ன டீ இப்போதான சந்தோஷமா வெடி வெடிக்க போன அதுகுள்ள ஏன் முகம் இப்படி ஆயிடுச்சு?”

“ம்ம் சந்தோஷமா இருந்தாதான் சிலருக்குப் பிடிக்காதே..”

“என்ன டீ பெரிய மனுஷி மாதிரி பூடகமா எல்லாம் பேசுற என்ன விஷயம்?”

“நீ வேற கடுப்பேத்தாத மா..என் மாமியாருக்கும் எனக்கும் செட்டே ஆக மாட்டேங்குது.எதாவது சொல்லிட்டே இருக்காங்க.ஒண்ணுமில்ல தீபாவளிக்கு இங்க வர்றதுக்கு கூட ஒரு ஆர்க்யூமெண்ட் போச்சு..

பாவம் மா ஸ்ரீகா நடுவுல மாட்டிகிட்டு முழிக்குறாரு.அவரை நினைச்சாலே கஷ்டமா இருக்கும் அவருக்காகவே பல நேரத்துல வாயை மூடிகிட்டு பொறுத்துப் போறேன்.ஆனா அதையும் மீறி என்னை பொறுமையிழக்க வச்சுறாங்க..”

“மது நீயே பிரச்சனையும் சொல்ற அதனால யாரு பாதிக்கப்படுறானும் சொல்ற..அப்பறம் எதுக்கு இத்தனை குழப்பம் உனக்கு..சரி நா எனக்குத் தெரிஞ்ச ஒருத்தங்களை பத்தி சொல்றேன்.அதை கேட்டுட்டு அதை விட உன் கஷ்டம் பெருசா சின்னதானு சொல்லு.”

“எங்க ஊர்ல ஒரு பாட்டி இருந்தாங்க அவங்களுக்கு மூணு பசங்க மூணு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சாங்க ரெண்டு பேரு வேலை விஷயமா வெளியூர் போய்ட்டதால தன்னோட இருக்குற பையன்னா அவங்களுக்கு ஒட்டுதல் அதிகம்.

அப்படியிருக்க அவங்களுக்கு கல்யாணம் ஆனப்பறம் அந்த பொண்ணை போட்டு ஒரு வழி ஆக்கினாங்க.பையன் வேலைக்கு போனப்பறம் அத்தனை வேலையையும் அந்த பொண்ணை தான் செய்ய சொல்லுவாங்க. சரியா சாப்பாடு போட மாட்டாங்க. இராத்திரி எவ்ளோ லேட்டா அவங்க ரூம்க்கு அனுப்ப முடியுமோ அவ்ளோ வேலை கொடுப்பாங்க..அவளுக்குனு கையில் ஒரு ரூபா கூட இருக்காது.புருஷன் வாங்குற மொத்த சம்பளத்தையும் அப்படியே அம்மா கைல கொடுத்துருவாரு.

அவருக்கே தேவைனா கூட அவங்க அம்மா கொடுத்தாதான் உண்டு.அந்தளவுக்கு அவங்க ராஜ்ஜியம் தான் வீடுக்கே.அப்படி நிலைமைல அவங்க மருமகளுக்கு எதிரா பண்ற இதெல்லாம் அவங்க பையனுக்குத் தெரியாம தான்.அவனுக்குத் தெரிஞ்சா எங்க தனிக்குடித்தனம் போய்ருவானோனு பயம்.

அதே நேரம் அந்த மருமகளும் எதையும் புருஷன்கிட்ட சொல்ல மாட்டாங்க.யாரும் எதுவும் சொல்லனாலும் அந்த பையனுக்கு ஓரளவுக்கு வீட்டு நிலைமை தெரிஞ்சுதான் இருந்தது.இருந்தாலும் அம்மாவை எதிர்த்து பேச பயம் தயக்கம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.