(Reading time: 17 - 33 minutes)

“ம்மா உனக்கு பைத்தியம் தான் பிடிச்சுருக்கு..எந்த காலத்துல இருக்க நீ..கஷ்டபட்டு படிக்க வச்சு வேலைக்கு அனுப்பி பாதிலேயே கல்யாணம் பண்ணி அனுப்பிட்டு அந்த குடும்பத்துக்கு மட்டுமே உழைச்சு கொட்டுனு சொல்லுவியா..

இங்க பாரு நானும் ஸ்ரீகாவும் பேசி முடிவெடுத்துதான் இதை பண்றோம்..நீ என்ன சொன்னாலும் மாசா மாசம் இந்த பணம் உன் அக்கவுண்ட்க்கு வரும் அதை என்ன பண்ணுவியோ உன் இஷ்டம் இன்னொரு தடவை இப்படி எதாவது பேசிட்டு இருந்த நா பேசவே மாட்டேன் சொல்லிட்டேன்..போனை வை மா முதல்ல..”

மதுவிற்கு ஐயோவென்று இருந்தது.பணத்தை கொடுப்பதற்குள் அவனிடம் ஒரு போராட்டம்..கொடுத்த பின்பு இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.பெண்ணாய் பிறந்து திருமணம் செய்யும் ஒரே குற்றத்திற்காக இத்தனையை தாங்க வேண்டுமா?ஒரே மாதத்தில் என் பெற்றோருக்கே நான் அந்நியமாகிப் போவேனா!!எத்தனை விசித்தரம் பெண்களின் வாழ்வு என நினைத்து விரக்தி புன்னகை மட்டுமே புரிய முடிந்தது அவளால்.

இப்படி ஒவ்வொன்றும் புது புது பாடங்களை பயிற்றுவித்துக் கொண்டிருந்தது மதுவிற்கு. திருமணமாகி இரண்டு மாதங்கள் முடிந்திருந்த நிலையில் எதோ கோவிலுக்குச் சென்று வருமாறு ஸ்ரீகாந்தின் அம்மா அவளிடம் கூற இன்று போக முடியாத சூழல் ஆதலால் நான்கு நாட்கள் கழித்துச் செல்வதாகக் கூறினாள்.

“ஏன் மது இந்த தடவையும் நல்ல சேதி எதுவும் இல்லையா?”

“என்ன அத்தை கல்யாணம் ஆகி இரண்டு மாசம் தான ஆகுது..அதுகுள்ள இப்படி கேக்குறீங்க?”

“ம்ம் என் அக்கா மருமக எல்லாம் கல்யாணம் முடிஞ்ச மறுமாசமே பிள்ளை உண்டாய்ட்டா தெரியுமா?”

“அத்தை அவங்க ஊர்ல இருக்காங்க..நாங்க இங்க ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்குறதே சனி ஞாயிறுல தான்..அப்படியிருக்க அவங்களோட போய் கம்பேர் பண்ணிட்டு இருக்கீங்களே?”

“அப்படியில்ல மது நீங்க எல்லாம் நேரம் காலம் பாக்காம வேலை வேலைனு ஓடுறவங்க அதனால தான் கேட்டேன்.எதுக்கும் டாக்டர்கிட்ட செக் அப் பண்ணி பாரு எந்த பிரச்சனையும் இல்லையானு தெரிஞ்சா நல்லதுதான..”

அன்று இரவு ஸ்ரீகாந்த் வரும் வரையுமே விழித்திருந்தவள் இருட்டில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.

“போச்சா இன்னைக்கு என்ன புது பிரச்சனை?”

“ஆமா எனக்கு வேற வேலையே இல்ல புதுசு புதுசா பிரச்சனை பண்றேன்..”

“ஏன் டீ வந்ததும் வராததுமா ஆரம்பிக்குற என்னனு சொல்லு?”

தனக்கும் மாமியாருக்குமான உரையாடலை பற்றி கூறிவிட்டு மீண்டும் அழ ஆரம்பித்திருந்தாள்.

“உங்கம்மா சொல்றத பார்த்தா எனக்கு குழந்தை பெத்துக்க தகுதியில்லனு சொல்றாங்களா?”

“ஐயோ ஷப்பா ஏன் டீ ரொம்ப போட்டு யோசிக்குற அவங்க எல்லாம் ஊர்காரங்க அப்படிதான் பேசுவாங்க..நீ ஏன் மண்டையில் ஏத்திக்குற..விடு நாளைக்கு நா பேசும் போது அவங்ககிட்ட சொல்லி புரிய வைக்குறேன்.

மறுநாள் மது வேலைக்கு கிளம்பிய பின் வழக்கம்போல் தாமதமாய் எழுந்தவன் குளித்துவிட்டு வந்து காலை உணவை உண்ண ஆரம்பிக்க அவன் தாய் அழைத்தார்.

“ம்ம் சொல்லு மா..”

“என்னடா குரலே சரியில்ல..உடம்பு சரியில்லையா?”

“ம் அதெல்லாம் நல்லா தான் இருக்கு..நீ நேத்து மதுகிட்ட என்ன சொன்ன??”

“என்ன டா கேள்வியெல்லாம் பயங்கரமா இருக்கு?”

“சும்மா என்னை எதாவது சொல்லாதம்மா..நீ கேட்டது தப்பு தான அவ உக்காந்து அழறா..எங்களுக்கான நேரமே இன்னும் ஒழுங்கா கிடைக்கல அதுக்குள்ள குழந்தை குட்டினு பெத்துகிட்டு லைஃப்ல கொஞ்சம் கூட என்ஜாய் பண்ண முடியாது?”

“டேய் இதெல்லாம் ஒரு காரணமா குழந்தையை பெத்து கையில கொடுத்தா நா வளர்க்க போறேன்.அதுக்கப்பறம் நீங்க ஊரை சுத்துங்க இல்ல உலகத்தை சுத்துங்க.யாரு வேணாம்னு சொல்றது?”

“அதான நீ சொன்னதையே தான் சொல்லுவ என்னவோ போங்க மனுஷனுக்கு நிம்மதியே இல்லாம போச்சு..இன்னொரு தடவை அவகிட்ட எதையாவது கேட்டு வைக்காத..”,என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டு வேலைக்குத் தயாரானான்.

இப்படி நாளொரு பஞ்சாயத்தும் பொழுதொரு சண்டையுமாய் வாழ்க்கை உச்சகட்ட கடுப்பில் சென்றது ஸ்ரீகாந்திற்கு.இத்தனை மைல் தூரத்தில் இருந்தே இந்த நிலைமை எனில் ஒரே வீட்டில் இருந்தால் அவ்வளவுதான் என்று நொந்துகொள்ளாமல் இருக்க முடியவில்லை.

இதற்கிடையில் தலை தீபாவளி என பிறந்த வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று மரகதமும் வைரவனும் தீபாவளி சீர் கொண்டு வந்து கொடுத்து இருவரையும் அழைத்துச் சென்றனர்.

அன்று இரவு போனில் தன் மாமியாரிடம் அதைக் கூற அவரோ,

“எல்லாம் சரிதான் உன் அம்மா வீடு வெளியூர்ல இருந்தா பரவால்ல உள்ளூர் தான நினைச்சா போய் பாத்துக்கலாம்.ஆனா இங்க தான் வர முடியாது அதுவும் போக தீபாவளிக்கு ஸ்ரீகாந்த் இல்லாம வீடே வெறிச்சுனு இருக்கும்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.