(Reading time: 20 - 40 minutes)

சிறிது நேரம் அத்தனை பேரையும் தவிக்கவிட்டு, என்ன ஏது என்று சொல்லாமலே கதிருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர், இப்போது வெளியே வந்தார். ஒரு கூட்டமே அவரிடம் என்ன என்று கேட்க போகவும்,

“ஆபத்தான கட்டத்தை தாண்ட்டிட்டாரு.. ஆனாலும் இதயத்துக்கு போகும் ரத்தக் குழாயில் இருக்கும் அடைப்பை எடுக்க ஆஞ்சியோ செய்யணும்.. அதுக்குப்பிறகு ஒன்னும் பிரச்சனையில்லை. ஆனா அதுக்கு பேஷண்ட் ஒத்துழைக்கணும்.. அவர் சுடர் சுடர்னு முனகிக்கிட்டு இருக்காரு.. யார் அவங்க?” என்று அவர் கேட்கவும், சுடரொளி அவர் முன்னால் வந்தாள்.

“அவரோட பொண்ணு தான் டாக்டர்.. இவளை நினைச்சு கவலையில் தான் இப்படி ஆயிடுச்சு..” என்று எழில் கூறவும்,

“நீங்க வந்து அவர்க்கிட்ட பேசுங்கம்மா.. அவருக்கு ஒன்னும் இல்லன்னு சொல்லுங்க.. ட்ரீட்மெண்ட்க்கு ஒத்துழைக்க சொல்லுங்க.. அவரோடவே இருப்பேன்னு சொல்லுங்க..” என்று மருத்துவர் சொல்லவும், அவளும் அவரோடு ஐ.சி.யூ வில் நுழைந்தாள்.

கதிரவன் மூக்கில் ஆக்ஸிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டிருக்க, சுடரொளி உள்ளே நுழையவும், அங்கிருந்த நர்ஸ் அந்த மாஸ்க்கை எடுத்துவிட்டு, “ஏதாவது பிரச்சனைன்னா கூப்பிடுங்கம்மா..” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்.

கதிரவன் சுடரொளியின் முகத்தைப் பார்த்தப்படி இருக்க, “அப்பா..” என்று அவள் அழைக்கவும், அவர் கண்களில் கண்ணீர் வந்தது.

“அப்பா உணர்ச்சிவசப்படாதீங்கப்பா..” என்று அவள் சொல்ல,

“இன்னொரு முறை அப்பான்னு கூப்பிடும்மா..” என்று அவர் கூறினார்.

அவரது ஆசைக்காக அவள் அப்பா என்று அவரை அழைக்க, திரும்ப திரும்ப அதையே சொல்ல சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தார்.

“எங்க நீ இப்படி என்னைப் பார்த்து அப்பான்னு கூப்பிட்றதை கேக்காமலே போயிடுவேனோன்னு பயந்துட்டேன் ம்மா.. நேத்து தூக்கத்துல என்னை கூப்பிட்டதை கேட்டேன் தான்.. ஆனா நேருக்கு நேரா என்னைப் பார்த்து இப்படி கூப்பிட்ற தகுதியை நான் இழந்துட்டேன்.. சின்ன வயசுல தான் அப்பாவா உனக்கு கூட இருந்து எல்லாம் செய்ய முடியலன்னா.. இப்போ என்னை தேடி வந்த பொண்ணை கஷ்டப்படுத்தி பார்த்திருக்கேனே.. என்னை உன்னால மன்னிக்க முடியுமாம்மா.. நீ என்னை மன்னிச்சேன்னு தெரிஞ்சா நான் நிம்மதியா கண்ணை மூடுவேன்..’

“என்னப்பா ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க.. உங்களுக்கு ஒன்னும் இல்லப்பா.. நீங்க ஆபத்தான கட்டத்தை தாண்ட்டீங்க.. இப்போ நீங்க ட்ரீட்மெண்ட்க்கு ஒத்துழைச்சீங்கன்னா நீங்க குணமாகி வந்துடுவீங்கப்பா.. எல்லாம் சரியாயிட்ட இந்த நேரத்துல நான் உங்கக் கூட இருக்க ஆசைப்பட்றேன் ப்பா.. அப்பா அப்பான்னு சொல்லிக்கிட்டு நான் உங்க தோலில் சாஞ்சுகணும்.. நீங்க, நான், சித்தி, தமிழ், புவி எல்லோரும் குடும்பமா வெளியப் போகணும்.. சந்தோஷமா இருக்கணும்.. இப்படி எனக்கு நிறைய ஆசை இருக்கு தெரியுமா.. அதெல்லாம் நடக்க நீங்க நல்லப்படிய திரும்பி வரணும்ப்பா..

உங்களை நினைச்சு சித்தி அழுதுக்கிட்டு இருக்காங்க.. தமிழ், புவியெல்லாம் பயந்து போயிருக்காங்கப்பா.. எங்க எல்லோருக்கும் நீங்க வேணும்ப்பா.. நீங்க இல்லாத எங்க வாழ்க்கை நல்லா இருக்காதுப்பா.. அதுக்கு நீங்க நல்லா குணமாகி வரணும்.. இத்தனை நாள் நடந்ததை நினைச்சு வருத்தப்படாம.. இனி நாம சந்தோஷமா இருக்கிறதை நினைச்சு ட்ரிட்மெண்ட்டுக்கு ஒதத்துழைங்கப்பா..”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிரேமாவின் " எதிர் எதிரே நீயும் நானும்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“ஆமாம் இனியாவது அப்பாவா உனக்கு எல்லாமே செய்யணும்.. உன்னை நல்லப்படியா பார்த்துக்கணும்.. அதுக்கு எனக்கு வாய்ப்பு கிடைக்குமாம்மா..”

“கண்டிப்பாப்பா நீங்க நல்லப்படியா குணமாகி வருவீங்க பாருங்க.. இப்போ ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காதீங்க.. நாங்கல்லாம் வெளிய தான் இருக்கோம்.. எதையும் மனசுல போட்டு கஷ்டப்படுத்தாதீங்க..” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றாள்.

இத்தனை நேரம் எப்படி தைரியமாக அவரிடம் பேசினோம் என்று அவளுக்கே புரியவில்லை. அவருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று உள்ளுக்குள் கவலையாகவே இருந்தது. வேளியே வந்ததுமே எழிலை கட்டிப் பிடித்துக் கொண்டு “அப்பா நல்லப்படியா வருவாரில்ல சித்தி.. அவருக்கு ஒன்னும் ஆகிடாதே..” என்று அழுதாள்.

“என்ன சுடர் நீ.. டாக்டர் சொன்னதை கேட்டல்ல.. அவருக்கு ஒன்னும் ஆகாது சரியா..” என்று அவளுக்கு தைரியம் சொல்லிவிட்டு, எழிலுக்குமே அந்த பயம் இருக்க அவள் கண்களிலும் கண்ணீர். அதைப்பார்த்த ஆனந்தி தான் இருவருக்குமே ஆறுதல் கூறினார்.

கதிரவனை மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்ததே இரவு நேரம், இதில் அவருக்கான சிகைச்சைகள் முடியும் நேரம் நடுநிசி ஆகியிருந்தது. காலையில் தான் மேற்கொண்டு அவருக்கு சிகிச்சைகள் நடைபெறும் என்றும், அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதால், ஒன்றிரண்டு பேரை தவிர, மற்றவர்கள் வீட்டுக்குச் செல்லலாம் என்று மருத்துவர்கள் கூறினர்.

எழிலும் சுடரொளியும் இங்கு இருக்கப் போவதாக தீர்மானமாக சொல்லியதால், உடன் ஒரு ஆண் துணையும் இருக்க வேண்டும், மற்றவர்கள் வீட்டுக்குச் செல்லலாம் என்று புகழேந்தி கூறினார்.

“நான் இருக்கிறேன்..” என்று ஒருப்பக்கம் அமுதன் சொல்ல, அறிவழகனும் அதையே தான் சொல்லியிருந்தான்.

ஆனந்தியின் உடல்நலம் சரியில்லாததால் அமுதன் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும், அறிவு இருக்கலாம் தான், இருந்தாலும் இப்போது மகி தான் அவர்களுக்கு மிகவும் உரிமை உள்ளவன் என்பதால், அவனை இருக்கச் சொல்லலாம் என்று புகழேந்தி நினைத்து அவனைப் பார்க்க, மகி அந்த இடத்தில் இல்லை.

“மகியை எங்க காணோம்..” என்று அறிவை பார்த்து அவர் கேட்க,

“இங்க தானே பெரியப்பா இருந்தான்.. எங்க போயிட்டான்..” என்றப்படியே அறிவு அவனை தேடிச் சென்றான்.

அவசர சிகிச்சை பிரிவை அடுத்து உள்ள பகுதியில் இருந்த நாற்காலியில் எங்கோ வெறித்து பார்த்தப்படி மகி அமர்ந்திருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.