(Reading time: 20 - 40 minutes)

“அப்பா நம்ம வாழ்க்கை ஏன் இப்படி மாறிப்போச்சுன்னு நான் அடிக்கடி நினைப்பேன் ப்பா.. ஆனா எல்லாமே ஒரு நல்லதுக்குன்னு சொல்வாங்கல்ல.. எழில் சித்தி மாதிரி ஒரு நல்ல மனைவி உங்களுக்கு கிடைக்க தான் கடவுள் இப்படியெல்லாம் செஞ்சுருக்காரு போல.. எனக்குமே திரும்ப ஒரு நல்ல அம்மாவையும், அருமையான ரெண்டு தம்பிங்களையும் கொடுத்திருக்கார் ப்பா..” என்று சுடரொளி கூறினாள்.

“ஆமாம்மா எழில் எனக்கு கிடைச்சதுக்கு நான் ரொம்பவே கொடுத்து வச்சிருக்கணும்.. எப்படியோ போயிருக்க வேண்டிய வாழ்க்கை இப்போ சீரா இருக்குன்னா அதுக்கு எழில் மட்டுமே காரணம்.. அவளை நான் விரும்பி ஒன்னும் கல்யாணம் செஞ்சுக்கல.. அது புரிஞ்சிருந்தாலும் எனக்காகன்னு எல்லாமே பொருத்துக்கிட்டு வாழ ஆரம்பிச்சா.. என்னையுமே அவளை நேசிக்க வச்சா..

அவளுக்காக பசங்களுக்காகன்னு யோசிச்சு தான் முதலில் உன்னை இங்க கூட்டிக்கிட்டு வர தயங்கி ஆனந்திக்கிட்ட அப்படி பேசினேன். ஆனா எழில் மட்டும் பிடிவாதமா உன்னை இங்க வர வைக்காம இருந்திருந்தா, நான் உனக்கு எவ்வளவு பெரிய அநியாயம் செய்ய இருந்திருப்பேன்.. அப்பாவா நான் உனக்காக பொறுப்பு எடுத்துக்க தயங்கினப்போ தைரியமாக உனக்கான பொறுப்பை அவ எடுத்துக்கிட்டா.. இந்த மனசு யாருக்கு வரும் சொல்லு..”

“என்னங்க நீங்க.. நான் பெருசா ஒன்னும் செஞ்சுடல.. நானும் சராசரி மனுஷி தாங்க.. ஆரம்பத்துல சுடரோட நீங்க இருந்திருந்தா உங்களை கல்யாணம் செய்ய சம்மதிச்சுருப்பேனான்னு சந்தேகம் தான், இல்ல அப்படியே சம்மதிச்சிருந்தாலும் அவளை சொந்த மகளா பார்த்திருந்திருப்பேனா.. யார் மனசு எப்போ எப்படி மாறும்னு சொல்ல முடியாதுங்க.. காலம் தான் எல்லாத்துக்குமே பதில் சொல்லணும்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "சுஷ்ருதா..." - வித்தியாசமான காதல் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

இப்பவுமே ஒரு வயசுப் பொண்ணை தனியா தவிக்க விட்டுட்டு சுயநலமா நடந்துக்கிறது பாவம்னு தோனவே தான் இவளை இங்க அழைச்சுக்கணும்னு பிடிவாதமாக இருந்தேன்.. நான் அவ மேல பிரியம் வைக்க சுடரும் ஒருவிதத்தில் காரணம். அவ ஒதுங்கி ஒதுங்கி போகவே அவளை இயல்பா நடத்த முயற்சி செஞ்சேன்..

ஒருவேளை அவளோட உரிமையை நிலைநாட்ட நினைச்சிருந்தாலோ, இல்ல பொண்ணுன்னு நீங்க அவளுக்காக ரொம்ப செஞ்சிருந்தாலோ எனக்குமே பொறாமை தலை தூக்கியிருக்குமோ என்னவோ.. இப்பவுமே அவ இதெல்லாம் செய்யட்டும்னு நான் எதுக்கு அமைதியா இருக்கேன்.. எத்தனை நாள் உங்க கூட இருந்து இதெல்லாம் செய்யப் போறா.. சீக்கிரமே அவளுக்கு கல்யாணத்தை முடிச்சு புகுந்த வீட்டுக்கு அணுப்பணும் இல்ல. அப்புறம் நான் தானே உங்களுக்காக எல்லாம் செய்யணும்..” என்று எழில் பதில் கூறினாள்.

“இருந்தாலும் உன் அளவுக்கு எல்லோரும் செய்வாங்களான்னு சந்தேகம் தான் எழில்.. நீ என்ன மறுத்தாலும் அது தான் உண்மையும் கூட, அப்புறம் சுடர் கல்யாணத்தை பத்தி ஞாபகப்படுத்தி நல்ல காரியம் செஞ்ச எழில்.. சுடர் விஷயத்துல என்னென்னவோ நடந்திருக்க, அப்பாவா அதை சரி செய்யாம அமைதியா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன்.. ஆனா இனியும் அப்படி இருக்க முடியாது.. முதலில் இதைப்பற்றி புகழ் சார்க்கிட்ட பேசணும்..” என்று கதிர் பேசிக் கொண்டிருக்க,

“சரியான நேரத்தில் தான் வந்திருக்கோம் போல..” என்று புகழேந்தியும் பூங்கொடியும் வந்திருந்தனர்.

திருமணப் பேச்சு வந்ததுமே சுடர் முகம் வாடி விட, இதில் வந்தவர்களை பார்த்ததுமே சுடர் தன் அறைக்கு போக எழுந்திருக்க, “எங்கப் போற சுடர் இப்படி உட்காரு..” என்று பூங்கொடி அவளை அருகில் அமர்த்திக் கொண்டார்.

கதிரவனை மருத்துவமனையில் சேர்த்ததிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்த பின்பும் குடும்பத்தார் அனைவருமே வந்து அடிக்கடி அவரை பார்த்துவிட்டு தான் செல்வார்கள். ஆனால் சுடர் இதுவரையில் மகிழ் உட்பட யாரிடமும் சரியாக பேசவில்லை. தந்தைக்கு இப்படி ஆன வருத்தம் என்று அனைவருமே அவளை தொந்தரவும் செய்யவில்லை.

ஆனால் இப்போது இருவரும் வந்த காரணமே அமுதன், அருள் திருமணத்திற்கு முறைப்படி அந்த வீட்டு மாப்பிள்ளை என்பதால் பத்திரிக்கை வைக்கவும், அதேநேரம் மகி, சுடர் திருமணம் பற்றி பேசவும் தான்,

முதலில் அருள் திருமணம் முடியட்டும் பிறகு இதைப்பற்றி முடிவெடுக்கலாம் என்று தான் புகழேந்தி முன்பு சொல்லியிருந்தார். ஆனால் அன்று மருத்துவமனையில் மகி பேசியதை கேட்டதிலிருந்தே அவர் மனதிலும் மாற்றம் வந்திருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.